பிரதமர் அலுவலகம்

இந்திய கடல்சார் உச்சி மாநாடு 2021-ல் பிரதமரின் துவக்க உரை

Posted On: 02 MAR 2021 1:10PM by PIB Chennai

எனது சக அமைச்சர்களான திரு மன்சுக் மாண்டவியா, திரு தர்மேந்திர பிரதான், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், மேன்மைமிகு விருந்தினர்கள்,

அருமை நண்பர்களே,

இந்திய கடல்சார் உச்சி மாநாடு 2021 நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த துறையுடன் சம்பந்தப்பட்ட ஏராளமான பங்குதாரர்களை இந்த உச்சி மாநாடு ஒன்றிணைக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து கடல்சார் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் வெற்றி அடைவோம் என்பதை நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

இந்தத் துறையில் இந்தியா இயற்கையான தலைவராக விளங்குகிறது. உயர்ந்த கடல் சார் வரலாற்றை நம்நாடு பெற்றுள்ளது.  நமது கடற்கரைகளில் நாகரிகங்கள் வளர்ந்தனஆயிரம் ஆண்டுகளாக நமது துறைமுகங்கள் முக்கிய வர்த்தக மையங்களாக பணியாற்றுகின்றன. நமது கடற்கரைகள் உலக நாடுகளுடன் நம்மை இணைகின்றன.

நண்பர்களே,

இந்திய கடல் சார் உச்சி மாநாட்டின் வாயிலாக நமது வளர்ச்சி பாதையில் பங்கெடுத்துக் கொள்வதற்காக இந்தியா வருமாறு உலக நாடுகளுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். கடல்சார் துறையில் வளர்ச்சி அடையவும், உலகளவில் கடல்சார் பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்கும் இந்தியா கடுமையாக பணியாற்றுகிறது. தற்போதைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, புதிய தலைமுறையினருக்கான உள் கட்டமைப்பை உருவாக்குவது, சீர்திருத்தத்திற்கான பாதையை ஊக்குவிப்பது உள்ளிட்ட துறைகளில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இது போன்ற நடவடிக்கைகளின் மூலம் தற்சார்பு இந்தியா என்ற நமது தொலைநோக்கு பார்வைக்கு கூடுதல் வலு சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.

நண்பர்களே,

தற்போதைய உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து நான் பேசும்போது, செயல்திறனை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவத்தை வழங்குகிறேன். தனித்தனியாக பிரித்து அணுகும் முறையைத் தவிர்த்து, ஒட்டுமொத்த துறையில் நாங்கள் கவனம் செலுத்தினோம்.

அதன் பலன்களைக் கடந்த 2014ஆம் ஆண்டு வருடத்திற்கு 870 மில்லியன் டன்னாக இருந்த முக்கிய துறைமுகங்களில் கொள்ளளவு தற்போது ஆண்டிற்கு 1550 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நமது துறைமுகங்கள் மட்டும் பயனடையாமல், நமது பொருட்களை மிகுந்த போட்டித் தன்மையுடையதாக மாற்றும் வகையில் ஒட்டுமொத்த பொருளாதாரமும் வளர்ச்சியடைகிறது. துறைமுகங்களிலிருந்து நேரடியாக சரக்குகளை ஒப்படைத்தல்நேரடி துறைமுக நுழைவு, தரவுகளை எளிதாக பரிமாறுவதற்கு துறைமுக சமுதாய அமைப்பு போன்ற வசதிகள் தற்போது இந்திய துறைமுகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சரக்குகளை அனுப்புவதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் ஏற்படும் கால அவகாசத்தையும் நமது துறைமுகங்கள் குறைத்துள்ளன. துறைமுகங்களில் சேமிப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், தொழில்துறையை ஈர்ப்பதற்கு கணிப்பொறி சார்ந்த உள்கட்டமைப்பிலும் மிகப்பெரிய அளவில் நாங்கள் முதலீடு செய்து வருகிறோம். நிலையான தூர்வாருதல் மற்றும் உள்நாட்டு கப்பல்களின் மறு சுழற்சியின் வாயிலாககழிவுகள் முதல் வளம்என்ற முறையை துறைமுகங்கள் ஊக்குவிக்கும். துறைமுகங்கள் துறையில் நாங்கள் தனியார் முதலீடுகளை வரவேற்போம்.

நண்பர்களே,

செயல்திறனுடன் இணைப்பை மேம்படுத்துவதற்கும் ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடற்கரை பொருளாதார மண்டலங்கள், துறைமுகங்களை அடிப்படையாகக் கொண்ட சீர்மிகு நகரங்கள், தொழில்துறை பூங்காங்களோடு நமது துறைமுகங்களை ஒருங்கிணைத்து வருகிறோம். இதன் மூலம் தொழில் துறை முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், துறைமுகங்களுக்கு அருகில் உள்ள சர்வதேச உற்பத்தி நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்படும்.

நண்பர்களே,

புதிய உள்கட்டமைப்பு வசதிகளில் உருவாக்கத்தைப் பொறுத்தவரையில், வாதவான், பாரதீப் மற்றும் காண்ட்லாவின் தீனதயாள் துறைமுகத்தில் உலகத் தரத்திலான உள்கட்டமைப்புகளுடன் கூடிய மெகா துறைமுகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முன்பு எப்போதும் இல்லாத வகையில் நீர்வழி போக்குவரத்து நமது அரசு அதிக முதலீடுகளை செய்து வருகிறது. குறைந்த செலவில்சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சரக்குகளை கொண்டு செல்வதற்கு உள்நாட்டு நீர்வழிகள் ஏதுவாக உள்ளன. 2030ஆம் ஆண்டுக்குள் 23 நீர்வழி பாதைகளை இயக்க திட்டமிட்டு உள்ளோம். உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கப்பல் போக்குவரத்துக்குரிய கால்வாயின் வளர்ச்சி, கடற் பயணத்திற்கான உதவிகள் மற்றும் ஆறுகள் தகவல் அமைப்பு போன்றவற்றின் மூலம் நாங்கள் இதனை செயல்படுத்தவும்வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மார் ஆகிய நாடுகளுடனான பிராந்திய இணைப்புக்கான கிழக்கத்திய நீர்வழிப் போக்குவரத்துத் தொகுப்பு, இந்த நாடுகளுடனான சிறந்த வர்த்தகத்தையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்காக  வலுப்படுத்தப்படும்.

நண்பர்களே,

எளிதான வாழ்க்கையை ஊக்குவிப்பதற்கான சிறந்த முறையாக புதிய கடல்சார் உள்கட்டமைப்பு அமைந்துள்ளது. ரோ- ரோ ரோ- பாக்ஸ் போன்ற திட்டங்கள் நதிகளை முறையாகப் பயன்படுத்தும் நமது தொலைநோக்குப் பார்வையின் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். கடல் விமானங்கள் சேவைகளை வழங்குவதற்காக 16 பகுதிகளில் நீர் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 5 தேசிய நீர்வழிப் பாதைகளில் சொகுசு கப்பல் முனையங்களுக்கான உள்கட்டமைப்புகளும், கப்பல் இறங்கு துறைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

2023-ம் ஆண்டுக்குள் மேம்படுத்தப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட உள்கட்டமைப்புகளின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட துறைமுகங்களில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சொகுசு கப்பல் நாணயங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்தியாவின் பரந்த கடற்கரையோரங்களில் சுமார் 189 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. 78 கலங்கரை விளக்கங்களுக்கு அருகில் உள்ள நிலப்பரப்பில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். தற்போது இயங்கும் கலங்கரை விளக்கங்களின் வளர்ச்சியை அதிகரிப்பது மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை தனித்தன்மை வாய்ந்த கடல்சார் சுற்றுலாத் தளங்களாக உருவாக்குவதே இந்த முன்முயற்சியின் முக்கிய நோக்கமாகும். கொச்சி, மும்பை, குஜராத், கோவா போன்ற முக்கிய மாநிலங்களிலும் நகரங்களிலும் நகர்புற நீர்வழி போக்குவரத்தை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

பிற அனைத்து துறைகளைப் போலவே கடல்சார் துறை சார்ந்த பணிகளும், முறையாக   நடைபெறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம். கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் பெயரை விரிவுபடுத்தி துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து என்று அண்மையில் மாற்றி அமைத்தோம். கடல்சார் கப்பல் மற்றும் கப்பல் பயணம், கல்வி மற்றும் கடல்சார் பயிற்சி, கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் செப்பனிடும் தொழில், கப்பல்களை தகர்த்தல், மீன்பிடி கப்பல்கள் தொழில் மற்றும் மிதவை மரக்கலத் தொழில் போன்றவற்றை மேம்படுத்த அமைச்சகம் கடுமையாக உழைக்கும்.

நண்பர்களே,

முதலீடு செய்வதற்கு உகந்த வகையில் 400 திட்டங்களை துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இந்த திட்டங்கள் 31 பில்லியன் டாலர்கள் அதாவது ரூ. 2.25 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு உகந்தவை. நமது கடல்சார் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இவை கூடுதல் பலம் தரும்.

நண்பர்களே,

இந்திய கடல்சார் தொலைநோக்கு பார்வை 2030 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் முதன்மை நோக்கங்களை இது எடுத்துரைக்கிறது. சாகர்- மந்தன்: கடல் வர்த்தகம் தொடர்பான விழிப்புணர்வு மையமும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. கடல்சார் பாதுகாப்பு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் ஆற்றல், கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் தகவல் அமைப்பு இதுவாகும். துறைமுகங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த 2016-ஆம் ஆண்டு சாகர்மாலா திட்டத்தை அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் 2015 முதல் 2035 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்துவதற்காக 82 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ. 6 லட்சம் கோடி மதிப்பில் 574-க்கும் அதிகமான திட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நண்பர்களே,

உள்நாட்டு கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் செப்பனிடும் சந்தையிலும் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. உள்நாட்டு கப்பல் கட்டுமானத்தை ஊக்குவிப்பதற்காக இந்திய கப்பல் கட்டுமான தளங்களுக்கான கப்பல் கட்டுமான நிதி உதவி கொள்கைக்கு நாங்கள் ஒப்புதல் வழங்கினோம். 2022ஆம் ஆண்டுக்குள் இரு கரையோரங்களிலும் கப்பல் செப்பனிடும் தொகுப்புகள் அமைக்கப்படும். ‘கழிவுகளிலிருந்து வளம்' என்பதை உருவாக்குவதற்காக உள்நாட்டு கப்பல் மறுசுழற்சி தொழிலும் ஊக்குவிக்கப்படும். கப்பல்களில் மறுசுழற்சி சட்டம், 2019- இந்தியா இயற்றியதோடு, ஹாங்காங் சர்வதேச உடன்படிக்கையையும் ஏற்றுக்கொண்டது.

நண்பர்களே,

நமது சிறந்த நடைமுறைகளை உலக நாடுகளோடு நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். சர்வதேச நடைமுறைகளிலிருந்து கற்றுக் கொள்ளவும் நாம் தயாராக உள்ளோம்வங்காள விரிகுடா நாடுகளின் கூட்டமைப்பு, இந்தியப் பெருங்கடல் மண்டல நாட்டு அமைப்பு நாடுகளுடன் பொருளாதார மற்றும் வர்த்தக உறவை மேம்படுத்தும் பொருட்டு 2026 ஆம் ஆண்டுக்குள் உள்கட்டமைப்பு முதலீடுகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தீவுகளின் உள்கட்டமைப்பு சூழலியலை வளர்ப்பதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கடல்சார் துறையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரிக்க நாங்கள் மிக ஆவலாக உள்ளோம். நாடு முழுவதும் முக்கிய துறைமுகங்களில் சூரிய மின்சக்தி, காற்றாலை எரிசக்தி முதலியவற்றை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2030ஆம் ஆண்டுக்குள் இந்திய துறைமுகங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை 60 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

நண்பர்களே,

இந்தியாவின் மிக நீண்ட கடற்கரைப்பகுதி உங்களை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது. இந்தியாவின் கடுமையான உழைப்பாளிகள் உங்களுக்காக காத்திருக்கின்றனர். எங்களது துறைமுகங்களில் முதலீடு செய்யுங்கள். எங்கள் நாட்டில் முதலீடு செய்யுங்கள். உங்களது விரும்பத்தக்க வர்த்தக தலமாக இந்தியா அமையட்டும். தொழில் மற்றும் வர்த்தகத்தில் இந்திய துறைமுகங்களுக்கு அதிக முக்கியத்துவம் தாருங்கள். இந்த உச்சி மாநாட்டிற்கு எனது நல்வாழ்த்துக்கள். இதில் மேற்கொள்ளப்படும் விவாதங்கள் ஆக்கபூர்வமானதாகவும், விரிவானதாகவும் அமையட்டும்.

------



(Release ID: 1702000) Visitor Counter : 273