பிரதமர் அலுவலகம்

மேற்குவங்கத்தில் பல ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 22 FEB 2021 6:28PM by PIB Chennai

மேற்குவங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் அவர்களே, மத்திய அமைச்சர்  பியூஷ் கோயல் அவர்களே, அமைச்சர்கள் பாபுல் சுப்ரியோ அவர்களே, இங்கு கலந்து கொண்டுள்ள முக்கியப் பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, மேற்குவங்கத்தில் ரயில் மற்றும் மெட்ரோ சேவை விரிவாக்கத்தை ஒட்டி உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று தொடங்கப்படும் திட்டங்கள் ஹூக்ளி உள்பட பல மாவட்டங்களில் பல லட்சம் பேரின் வாழ்வை எளினதாக ஆக்கும்.

நண்பர்களே,

நல்ல போக்குவரத்து வசதிகள் இருந்தால், தற்சார்பு நிலையை எட்டும் வாய்ப்பு அதிகரிக்கும், நம்பிக்கை அதிகரிக்கும் என அர்த்தம்கொல்கத்தா மட்டுமின்றி, ஹூக்ளி, ஹௌரா, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்ட நண்பர்களும் மெட்ரோ ரயில் சேவையால் பயன் பெறுகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 நவோபடா முதல் தட்சினேஸ்வர் வரையில் இன்று தொடங்கப்படும் சேவையால், ஒன்றரை மணி நேர பயணம் வெறும் 25 - 35 நிமிட நேரப் பயணமாகக் குறையும். பள்ளிக்கூடம், கல்லூரி செல்பவர்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்களின் பயணம் இதன் மூலம் எளிதாகும். சொல்லப்போனால், காலிகாட்டில் உள்ள மாகாளி கோவில் மற்றும் தட்சினேஸ்வர் கோவில்களுக்கு பக்தர்ள் செல்வதும் இதன் மூலம் எளிதாகும்.

நண்பர்களே,

நாட்டில் முதலாவது மெட்ரோ சேவையாக கொல்கத்தா சேவை சில தசாப்தங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு தான் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மெட்ரோவாக இருந்தாலும், ரயில்வே சாதனங்களாக இருந்தாலும் இந்திய தயாரிப்புகளுக்கு மதிப்பு அதிகரித்துள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரயில் பாதைகள் அமைத்தல், நவீன பெட்டிகள், என்ஜின்கள் தயாரிப்புக்கான பெருமளவிலான தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்கள் பெரும்பாலும் உள்நாட்டில் கிடைப்பவையாக உள்ளன. இதனால் நமது பணியின் வேகம் அதிகரித்து, தரம் அதிகரித்து, செலவு குறைந்துள்ளது. ரயில்களின் வேகமும் அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

நாட்டின் தற்சார்பில் முக்கிய மையமாக இருக்கும் மேற்குவங்கத்தில் இருந்து வடகிழக்குப் பகுதிகள் மற்றும் அருகில் உள்ள நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, கடந்த சில ஆண்டுகளில் ரயில்வே கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கவனம் செலுத்தப்படுகிறது. சிக்கிம் மாநிலத்துடன் மேற்குவங்கத்தை இணைக்கும் ரயில் பாதை முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா, வங்கதேசம் இடையே ரயில்கள் இயக்கப் படுகின்றன. சமீபத்தில் ஹால்டிபாரியில் இருந்து இந்திய - வங்கதேச எல்லை வரையில் ரயில் சேவை தொடங்கப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளில் மேற்குவங்கத்தில் பல மேம்பாலங்கள், கீழ்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

நண்பர்களே,

இன்றைக்கு தொடங்கி, நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ள 4 திட்டங்கள், இந்தப் பகுதியில் ரயில் வசதிகளை மேலும் பலப்படுத்துபவையாக இருக்கும். ரயில் பயண நேரத்தைக் குறைத்தல், ரயில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தலில் இவை முக்கிய பங்கு வகிக்கும்.

நண்பர்களே,

நிலக்கரி தொழில், ஸ்டீல் தொழில், உரங்கள் தொழில் மற்றும் உணவு தானியங்கள் விளையும் பகுதிகளை இணைப்பதாக இந்தத் திட்டங்கள் உள்ளன. வாழ்வை எளிதாக்குவது மட்டுமின்றி, தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் இவை உதவியாக இருக்கும், அதுதான் நமது நோக்கம் ஆகும். இதுதான் ``எல்லோருடைய வளர்ச்சிக்காகவும், எல்லோருடைய நம்பிக்கையுடனும் ஒன்றுபட்டிருத்தல்''  என்பதாகும். இதுதான் தற்சார்பு இந்தியாவின் இலக்கு. இந்த இலக்கை மனதில் வைத்து நாம் செயல்படுவோம் என்ற விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டு பியூஷ் கோயல் மற்றும் அவரது அணியினருக்குப் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறன். மேற்குவங்கத்தில் ரயில்வே துறையில் மற்றும் ரயில்வே கட்டமைப்புகளில் உள்ள குறைபாடுகளை நீக்குவதில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. அதன் மூலம் வங்கத்தின் கனவுகளை நனவாக்குவோம் என்று கூறிக் கொள்கிறேன்.

இந்த எதிர்பார்ப்புடன், உங்களுக்கு பல நன்றிகள்!


(Release ID: 1700254) Visitor Counter : 186