குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

தாய்மொழியை அடிப்படை பயிற்று மொழியாக மாற்ற குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

Posted On: 21 FEB 2021 2:51PM by PIB Chennai

குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையிலாவது தாய்மொழியை அடிப்படை பயிற்று மொழியாக மாற்ற வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் திரு. எம். வெங்கையாநாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.‌

தங்கள் வீடுகளில் அதிகம் பேசாத ஒரு மொழியின் வாயிலாக குழந்தைக்கு கல்வியை வழங்குவதால் ஆரம்ப கட்ட கற்றல் பெரிதும் பாதிக்கப்படக்  கூடும் என்றும் அவர் கூறினார்.

அடிப்படை கல்வியை தாய்மொழியில்  கற்பிப்பதன் மூலம் குழந்தைகளின் சுயமரியாதை ஊக்குவிக்கப்படுவதுடன், அவர்களது படைப்பாற்றலும் மேன்மையடையும் என்றும் திரு. நாயுடு குறிப்பிட்டார்.

புதிய கல்விக் கொள்கையை தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய வளர்ச்சிக்கான ஆவணம் என்று குறிப்பிட்ட அவர், இந்த கொள்கையை முறையாக செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மத்திய கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த வலைதள கருத்தரங்கில் துவக்க உரை நிகழ்த்திய குடியரசு துணைத் தலைவர், தாய்மொழியை ஊக்குவிப்பதற்காக 5 முக்கிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

அடிப்படைக் கல்வியுடன், நிர்வாகம், நீதிமன்ற நடவடிக்கைகள், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி, ஆகிய துறைகள் தாய்மொழியில் இயங்குவதோடு, அவரவர் வீடுகளிலும் மக்கள் தங்களது தாய்மொழிக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நூற்றுக்கணக்கான மொழிகள்  ஒருங்கிணைந்துள்ளதால், மொழி பன்முகத்தன்மை நமது பண்டைய கால நாகரிகத்தின் அடித்தளமாக விளங்குகிறது என்றும், நமது சமூக கலாச்சார அடையாளங்களுடன் முக்கிய இணைப்பாக தாய்மொழி செயல்படுவதாகவும், எனவே அவற்றை பாதுகாத்து, ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆளுகையில் தாய்மொழியின் முக்கியத்துவத்துவம் பற்றிப் பேசிய திரு. வெங்கையா நாயுடு, மாநிலங்கள் மற்றும் உள்ளூர்களில் தாய் மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று ஆலோசனைக் கூறினார்.

சாமானிய மக்களுடன் அவர்களுக்கு புரியும் மொழியில் தகவல்களை பரிமாறினால் மட்டுமே ஆளுகை மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் அவர்களையும் இணைக்க முடியும். மக்களின் மொழி தான் நிர்வாக மொழியாக இருக்க வேண்டும்”, என்றும் அவர் கூறினார்.

பலதரப்பட்ட மொழிகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசுகையில், தாய் மொழியை வலுவான அடித்தளமாகக் கொண்டு ஏராளமான மொழிகளை நாம் கற்க வேண்டும் என்றும், இதுபோன்று பல மொழிகளைக் கற்பதினால் குழந்தைகளின்  அறிவாற்றல் மேம்படுவதோடு தேசிய ஒற்றுமையும் வளர்ச்சி அடையும் என்றும் குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார்.

 

இந்த வலைதள கருத்தரங்கின் போது சர்வதேச காணொலி கையெழுத்து கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால், கலாச்சார அமைச்சர் திரு. பிரகலாத் சிங் படேல், கல்வி இணை அமைச்சர் திரு. சஞ்சய் தோத்ரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு ஸ்வர்ண பாரத் அறக்கட்டளை ஹைதராபாதில் நடத்திய நிகழ்ச்சியிலும் குடியரசு துணைத் தலைவர் கலந்துகொண்டு தாய் மொழியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699751


(Release ID: 1699777)