பிரதமர் அலுவலகம்

விஸ்வ-பாரதி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை


கற்பனைத் திறன் மற்றும் அறிவுக்கு எல்லையே கிடையாது: பிரதமர்

வங்காளத்துக்கு பெருமை சேர்ந்தவர் தாகூர், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் பெருமை சேர்த்தவர்: பிரதமர்

தேசத்துக்கு முன்னுரிமை தரும் அணுகுமுறையால் தீர்வுகள் கிடைக்கின்றன: பிரதமர்

ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம் என்பதற்கு உத்வேகம் தந்தது வங்காளம்: பிரதமர்

தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய மைல்கல்லாக தேசிய கல்விக் கொள்கை இருக்கும்: பிரதமர்

Posted On: 19 FEB 2021 1:08PM by PIB Chennai

விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக உரையாற்றினார். மேற்கு வங்க ஆளுநரும், விஸ்வ-பாரதியின் ரெக்டாருமான ஜகதீப் தன்கர், மத்திய கல்வி அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சஞ்சய் தோட்ரே ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர், வீர சிவாஜி குறித்த குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் கவிதையை மேற்கோள் காட்டினார். தனக்கு உத்வேகம் அளித்து இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு அதன் காரணமாக  அவர் அழைப்பு விடுத்தார். மாணவர்களும், பல்கலைக்கழக அலுவலர்களும், பல்கலைக்கழகத்தின் அங்கமாக மட்டுமின்றி, துடிப்பான பாரம்பரியத்தின் சிறப்பை முன்னிறுத்துபவர்களாகவும் உள்ளனர் என்று பிரதமர் கூறினார்.

விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் படிக்க வருபவர்கள், இந்தியாவின் பார்வையில் இருந்து, இந்தியத் தன்மை என்பதன் மூலமாக உலகைப் பார்ப்பதற்கான, உலக பல்கலைக்கழகமாக இருக்கும் என்ற அர்த்தத்தில் இதற்கு விஸ்வ பாரதி என குருதேவ் பெயரிட்டார்.

எனவே, இந்தியாவின் பாரம்பரியத்தில் இடம் பிடிப்பதாக இந்தக் கல்வி நிலையம் அமைந்துள்ளது என்றார் அவர். இந்திய பாரம்பரியங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு, பரம ஏழைகளின் பிரச்சினைக்கு தீர்வுகள் காண முயற்சிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். கல்வி அறிவை போதிக்கும் இடமாக மட்டுமின்றி, ஒருமை நிலையை அடைவது என்ற, இந்திய கலாச்சாரத்தின் உச்சங்களை அடைவதற்கான இடமாக குருதேவ் தாகூருக்கு விஸ்வ பாரதி இருந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

வேறுபட்ட சித்தாந்தங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு மத்தியில் நம்மை நாமே கண்டறிந்து கொள்ள வேண்டும் என்பதில் குருதேவ் நம்பிக்கை கொண்டிருந்தார் என பிரதமர் தெரிவித்தார். வங்காளத்துக்கு பெருமை சேர்ப்பவராக மட்டுமின்றி, இந்தியாவின் பன்முகத்தன்மை பற்றி பெருமை கொண்டவராகவும் தாகூர் இருந்தார் என அவர் குறிப்பிட்டார். குருதேவின் தொலைநோக்கு சிந்தனையால் தான் சாந்திநிகேதன் என்ற பரந்த வெளியில் மனிதகுலம் தழைத்தோங்குகிறது என்றும் அவர் கூறினார். அறிவைப் புகட்டுவதில் எல்லையற்ற நிலையில் விஸ்வ பாரதி செயல்படுவதாக பாராட்டிய அவர், அனுபவம் சார்ந்த கல்வியின் அடிப்படையில் இதற்கு அடித்தளமிடப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கற்பனைத் திறன் மற்றும் அறிவுக்கு எல்லையே கிடையாது என்றும் அவர் கூறினார். இந்த சிந்தனையுடன் தான், மகத்தான இந்த பல்கலைக்கழகத்தை குருதேவ் உருவாக்கினார். அறிவு, சிந்தனை, திறன் ஆகியவை ஒரே நிலையில் இருப்பவையாக அல்லாமல், தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பவை என்பதை மாணவர்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார். அறிவு மற்றும் அதிகாரத்துடன் தான் பொறுப்புணர்வு வருகிறது. அதிகாரத்தில் இருக்கும்போது, பணிவு, உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதுடன், அறிவு வாய்ப்பு பெறாதவர்களின் நலனுக்கு சேவை செய்யும் பொறுப்புள்ளவர்களாகவும் அறிஞர்கள் இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

நீங்கள் பெற்றிருக்கும் அறிவு உங்களுக்கானதாக மட்டுமின்றி, சமுதாயத்திற்கானதாகவும் உள்ளது என்றும், அதுதான் இந்தியாவின் பாரம்பரியம் என்றும் பிரதமர் கூறினார்.

உங்கள் அறிவும், திறனும், தேசத்தைப் பெருமை அடையச் செய்யும் அல்லது சமூகத்தை இருளில் தள்ளி பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். உலகம் முழுக்க பயங்கரவாத செயல்களில் ஈடுபடும், பரப்பும் பலரும் உயர் கல்வி கற்றவர்களாக, நல்ல திறமைகள் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அதேசமயத்தில், தங்கள் உயிருக்குத் துணிந்து மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் கோவிட் நோயாளிகளைக் காப்பாற்றும் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களும் இருக்கிறார்கள். இது சித்தாந்தம் சார்ந்தது கிடையாது, நேர்மறை அல்லது எதிர்மறை எண்ணங்களைப் பொருத்து தான் இது அமைகிறது. இரண்டு வழிகளுக்குமான பாதைகள் உள்ளன என்று கூறிய அவர், பிரச்சினை ஏற்படுத்தும் பிரிவில் சேரப் போகிறோமா, அல்லது தீர்வுகளைத் தரும் பிரிவில் சேரப் போகிறோமா என்பதை மாணவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தேசத்தின் நலனை முதன்மையாகக் கருதினால், அவர்களின் ஒவ்வொரு முடிவும் சில தீர்வுகளை உருவாக்கும் பாதையில் செல்வதாக இருக்கும். முடிவுகள் எடுப்பதற்கு பயப்பட வேண்டாம் என்று அவர் கூறினார். ஆபத்து வாய்ப்புகளில் துணிந்து முடிவெடுத்து, முன்னெடுத்துச் சென்றால், நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது என்று பிரதமர் கூறினார். இளைஞர்களின் பெருமுயற்சிகளுக்கு அரசு ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

     வரலாற்று முக்கியத்துவமான பாரம்பரிய இந்திய கல்வி முறையின் பலம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், ‘The Beautiful Tree- Indigenous Indian Education in the Eighteenth Century’ என்ற காந்தியவாதி தர்ம்பாலின் புத்தகம் பற்றிக் கூறினார். கிராமங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட குருமார்கள் இருந்தனர், உள்ளூர் கோவில்களுடன் இணைந்து அவர்கள் செயல்பட்டனர்.  அப்போது கல்வியறிவு அதிக அளவில் இருந்தது என்றும் 1820-ல் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்ததை பிரதமர் சுட்டிக்காட்டினார். பிரிட்டிஷ் அறிஞர்களும் இதை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்திய கல்வி முறையை நவீனமாக்குதல் மற்றும் அடிமைத்தனத்தின் பிடியில் இருந்து விடுவிக்க உதவும் வழிமுறையாக விஸ்வ பாரதியில் கற்பித்தல் முறைகளை குருதேவ் ரவீந்திரநாத் உருவாக்கியுள்ளார் என்றும் மோடி தெரிவித்தார்.

     அதேபோல, பழைய கட்டுப்பாடுகளை உடைத்து, தங்கள் முழு திறன்களையும் மாணவர்கள் வெளிப்படுத்த புதிய தேசிய கல்விக் கொள்கை உதவுகிறது. பாட திட்டங்கள், கற்றல் மொழிகளை விருப்பம் போல தேர்வு செய்ய அது அனுமதிக்கிறது. தொழில்முனைவு வாய்ப்பு, சுய வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி மற்றும் புதுமை சிந்தனை படைப்புகளுக்கு அது ஊக்கம் தருகிறது. `தற்சார்பு இந்தியாவை' உருவாக்குவதில் இந்த கல்விக் கொள்கை முக்கியமான மைல்கல்லாக இருக்கும் என்றார் அவர்.

பல லட்சம் சஞ்சிகைகளை பயன்படுத்தும் வாய்ப்பு சமீபத்தில் அறிஞர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மூலம் 5 ஆண்டுகள் ஆராய்ச்சி மேற்கொள்ள ரூ.50 கோடி அளிக்கப்பட்டுள்ளது. பாலின பங்கேற்பு நிதியம் ஏற்படுத்த இந்த கல்விக் கொள்கை வகை செய்வதால், பெண்களுக்குப் புதிய நம்பிக்கை கிடைக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். பெண்கள் பாதியில் கல்வியைக் கைவிடுதல் பற்றி ஆய்வு நடத்தி, விருப்பம் போல கல்வித் திட்டத்தில் சேருவது, விரும்பிய காலத்தில் வெளியேறுவது, ஆண்டுதோறும் அதற்கான கிரெடிட்கள் அளிப்பது ஆகிய நடைமுறைகள் உருவாக்கப் பட்டுள்ளன.

ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம் என்ற சிந்தனைக்கு வங்காளம் தான் உத்வேகம் தந்தது என்று கூறிய பிரதமர், 21வது நூற்றாண்டில் அறிவுசார் பொருளாதாரத்தில் விஸ்வ பாரதி முக்கிய பங்காற்றும் என்று கூறினார். இந்தியாவின் அறிவுசார் வளர்ச்சி மற்றும் அடையாளத்தை  உலகின் எல்லா மூலைகளுக்கும் கொண்டு செல்ல இது உதவியாக இருக்கும் என்றார் அவர்.

பெருமைக்குரிய இந்தக் கல்வி நிலையத்தின் மாணவர்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு ஆவணம் ஒன்றை தயாரிக்க வேண்டும், 2047ல் விஸ்வ பாரதி செயல்படுத்த வேண்டிய 25 மிகப் பெரிய இலக்குகளை முடிவு செய்ய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். இந்தியா பற்றி விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும் என்று மாணவர்களை அவர் கேட்டுக்கொண்டார். இந்தியாவைப் பற்றிய தகவல்களை அளித்து, உலக அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதில், எல்லா கல்வி நிலையங்களுக்கும் முன்னோடியாக விஸ்வபாரதி இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். தங்கள் அருகில் உள்ள கிராமங்களை தற்சார்பு கொண்டதாக ஆக்கி, அவற்றின் பொருட்களை உலக அளவிற்குக் கொண்டு செல்லும் வகையில் வழிமுறைகளை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என்று கூறி பிரதமர் நிறைவு செய்தார்.

********

 

 

 

 



(Release ID: 1699373) Visitor Counter : 282