பிரதமர் அலுவலகம்
“கொவிட்-19 மேலாண்மை: அனுபவம், நல்ல நடைமுறைகள் மற்றும் முன்னோக்கிய பாதை” என்ற தலைப்பில் நடைபெற்ற 10 அண்டை நாடுகளுடனான பயிலரங்கில் பிரதமர் உரையாற்றினார்
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு சிறப்பு விசா திட்டம், பிராந்திய விமான ஆம்புலன்ஸ் ஒப்பந்தம் குறித்து பிரதமர் யோசனை தெரிவித்தார்
Posted On:
18 FEB 2021 4:33PM by PIB Chennai
“கொவிட்-19 மேலாண்மை: அனுபவம், நல்ல நடைமுறைகள் மற்றும் முன்னோக்கிய பாதை” என்ற தலைப்பில் நடைபெற்ற 10 அண்டை நாடுகளுடனான பயிலரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவுகள், மொரீஷியஸ், நேபாளம், பாகிஸ்தான், செஷில்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் சுகாதாரத் துறை தலைவர்கள், நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளோடு இந்திய அதிகாரிகள் மற்றும் நிபுணர்களும் இதில் பங்கேற்றனர்.
மிகவும் அதிக மக்கள் தொகை உள்ள இந்த பிராந்தியத்தில் பெருந்தொற்றின் சவால்களை எதிர்கொண்டு, நாடுகளின் சுகாதார அமைப்புகள் இணைந்து பணியாற்றி எதிர்வினை ஆற்றியதை பிரதமர் பாராட்டினார்.
பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதில் ஏற்படும் உடனடி செலவுகளை எதிர்கொள்ளவும், மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சோதனைக் கருவிகளை பகிர்ந்து கொள்ளவும் கொவிட்-19 அவசரகால நடவடிக்கை நிதியம் உருவாக்கப்பட்டதை பிரதமர் நினைவுக் கூர்ந்தார்.
பரிசோதனை, தொற்றைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மருத்துவக் கழிவு மேலாண்மையில் ஒருவரது சிறந்த செயல்பாடுகளில் இருந்து மற்றவர்கள் பாடம் கற்றதை பற்றியும், அனுபவங்களை பகிர்ந்து கொண்டது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
“ஒன்றிணைந்து பணியாற்றியது தான் இந்த பெருந்தொற்றால் ஏற்பட்ட மதிப்புமிக்க விஷயமாகும். நமது திறந்த மனப்பான்மை மற்றும் உறுதியின் மூலம், குறைந்த அளவிலான உயிரிழப்புகளை நாம் சந்தித்துள்ளோம்.
இன்றைக்கு, நமது பிராந்தியம் மற்றும் உலகத்தின் நம்பிக்கை விரைவாக தடுப்புமருந்தை வழங்குவதில் உள்ளது. நமது ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை இதிலும் நாம் வெளிப்படுத்த வேண்டும்,” என்று பிரதமர் கூறினார்.
லட்சியங்களை இன்னும் உயர்த்துமாறு நாடுகளை கேட்டுக்கொண்ட பிரதமர், நமது பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் மருத்துவ அவசரத் தேவைகள் ஏற்படும் போது, ஒரு நாட்டின் கோரிக்கையை ஏற்று இன்னொரு நாட்டில் இருந்து மருத்துவர்களும், செவிலியர்களும் எளிதில் செல்லும் வகையில் சிறப்பு விசா திட்டம் ஒன்றை செயல்படுத்த வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார்.
மருத்துவ அவசரங்களுக்காக பிராந்திய விமான ஆம்புலன்ஸை ஒருங்கிணைக்க இணைந்து பணியாற்றுமாறு மேற்கண்ட நாடுகளின் விமான போக்குவரத்து அமைச்சகங்களை அவர் கேட்டுக்கொண்டார்.
கொவிட்-19 தடுப்புமருந்துகளின் செயல்திறன் குறித்த தரவுகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்வதற்கான பிராந்திய தளத்தை உருவாக்கவும் அவர் ஆலோசனை தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்தில் பெருந்தொற்றுகளை தடுப்பதற்கான தொழில்நுட்பத்தையும், நோயியலையும் ஊக்குவிக்க பிராந்திய ஒத்துழைப்பை உருவாக்கவும் பிரதமர் ஆலோசனை தெரிவித்தார்.
கொவிட்-19-ஐ தாண்டி, வெற்றிகரமான சுகாதார கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத் மற்றும் ஜன் ஆரோக்கிய திட்டங்கள் ஆய்வு செய்வதற்கு ஏற்ற திட்டங்களாக பிராந்தியத்தில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
“21-ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாக இருக்க வேண்டுமென்றால், தெற்காசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவு நாடுகளின் ஒத்துழைப்பில்லாமல் அது சாத்தியமாகாது. அத்தகைய ஒத்துழைப்பு சாத்தியம் என்பதை பெருந்தொற்றின் போது நீங்கள் காட்டிய பிராந்திய ஒற்றுமை நிரூபித்துள்ளது,” என்று பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
**
(Release ID: 1699161)
Visitor Counter : 184
Read this release in:
Marathi
,
Telugu
,
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam