சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
அஜ்மீர் ஷரீப் தர்காவுக்கு பிரதமர் சார்பில் மலர் போர்வை: மத்திய அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி வழங்கினார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 FEB 2021 2:21PM by PIB Chennai
உர்ஸ் விழாவின் 809 நிகழ்வை முன்னிட்டு காஜா மொய்னுதீன் சிஸ்தியின், அஜ்மீர் ஷரீப் தர்காவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி சார்பில் வழங்கப்பட்ட மலர் போர்வையை மத்திய சிறுபான்மை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி இன்று வழங்கினார்.
இது குறித்து திரு முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், ‘‘சகிப்புத்தன்மையும், மதநல்லிணக்கமும் இந்தியாவின் மரபு. நமது நாட்டின் இந்த பெருமையான பாரம்பரியத்தை யாராலும் களங்கப்படுத்தவோ, அழிக்கவோ முடியாது’’ என்றார்.
இது தொடர்பாக பிரதமர் விடுத்துள்ள செய்தியையும் அவர் வாசித்தார். அதில் உர்ஸ் ஆண்டு விழாவை முன்னிட்டு, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள காஜா மொய்னுதீன் சிஸ்தியின் சீடர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், ‘‘காஜா மொய்னுதீன் சிஸ்தியின் 809வது உர்ஸ் விழாவை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது சீடர்களுக்கு எனது வாழ்த்துகள். இந்த ஆண்டு விழா சமூக ஒற்றுமைக்கும், சகோதரத்துவத்துக்கும் அழகான உதாரணம். பல மதங்கள், பிரிவுகள் மற்றும் அவர்களின் நம்பிக்கைகள் இணக்கத்துடன் இருப்பது, நமது நாட்டின் மிகச் சிறப்பான பாரம்பரியம். இந்தப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில், பல மத குருமார்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். அமைதி மற்றும் நல்லிணக்கம் என்ற அவர்களின் நிலையான தகவல் நமது சமூக -கலாச்சாரப் பாரம்பரியத்தை எப்போது வளப்படுத்துகிறது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு திரு முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், ‘‘ திரு கரீப் நவாஸின் வாழ்க்கை, மத மற்றும் சமூக நல்லிணக்க உறுதியை வலுப்படுத்த நம்மை ஊக்குவிக்கிறது’’ என்றார்.
*************
(வெளியீட்டு அடையாள எண்: 1698485)
வருகையாளர் எண்ணிக்கை : 240