நிதி அமைச்சகம்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சீர்திருத்தங்களை நிறைவு செய்த 6வது மாநிலம் கோவா
Posted On:
11 FEB 2021 1:40PM by PIB Chennai
மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை கொண்டு வந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சீர்திருத்தங்களை நிறைவு செய்த 6வது மாநிலமாக கோவா உருவாகியுள்ளது. இதனால், வெளிச்சந்தையில் ரூ.223 கோடி கூடுதல் கடன் திரட்டும் தகுதியை கோவா பெற்றுள்ளது. இதற்கான அனுமதியை செலவினத்துறை வழங்கியுள்ளது.
இந்த சீர்திருத்தத்தை ஆந்திரா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்கள் ஏற்கனவே நிறைவு செய்திருந்தன. தற்போது 6வது மாநிலமாக கோவா இணைந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சீர்திருத்தங்களை நிறைவேற்றியதற்காக 5 மாநிலங்களுக்கு, ரூ.10,435 கோடி அளவுக்கு கூடுதல் கடன் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்த 4 சீர்திருத்தங்களில், 17 மாநிலங்கள், குறைந்தது ஒன்றை நிறைவேற்றி, கூடுதல் கடன் பெறுவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளன. இவற்றில் 13 மாநிலங்கள், ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. 12 மாநிலங்கள் எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளன. 6 மாநிலங்கள் உள்ளாட்சி அமைப்பு சீர்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளன. 2 மாநிலங்கள் மின்துறை சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளன. இதற்காக இந்த மாநிலங்கள் மொத்தம் ரூ.76,512 கோடி கூடுதல் கடன் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697062
-------
(Release ID: 1697126)
Visitor Counter : 240