பிரதமர் அலுவலகம்
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பதிலளித்து பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
08 FEB 2021 12:50PM by PIB Chennai
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மாநிலங்களவையில் பிரதமர் இன்று பதில் அளித்தார். இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். சவால்களை சந்திக்கும் உலகுக்கு, குடியரசுத் தலைவரின் உரை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
இந்தியா இன்று வாய்ப்புகள் உள்ள நாடாக இருப்பதாகவும், உலகத்தின் பார்வை இந்தியா மீது இருப்பதாகவும் அவர் கூறினார். இந்தியாவிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த உலகத்தின் நலனுக்கு, இந்தியா தனது பங்களிப்பை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 75வது சுதந்திர ஆண்டில் இந்தியா நுழைவதால், நாம் இதை உத்வேகத்தின் கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் மற்றும் நூறாவது சுதந்திர ஆண்டான 2047-ல் இந்தியாவுக்கான நமது தொலை நோக்கின் உறுதி மொழிகளுக்கு நாம் மீண்டும் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் கூறினார்.
கொவிட் தொற்றை திறம்பட கையாண்டது, ஒரு கட்சியின் வெற்றியோ அல்லது தனி நபரின் வெற்றியோ அல்ல. இது நாட்டின் வெற்றி. இதை அவ்வாறே கொண்டாட வேண்டும் என பிரதமர் கூறினார். இந்தியா, போலியோ, பெரியம்மை போன்ற அச்சறுத்தல்களை எல்லாம் கண்டுள்ளது. இன்று நமது நாடு உலக நாடுகளுக்கு தடுப்பூசி தயாரிக்கிறது. மிகப் பெரிய தடுப்பூசித் திட்டத்தை நாம் மேற்கொண்டுள்ளோம். இது நமது தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. கொவிட்-19 காலம், நமது கூட்டாட்சி அமைப்புக்கும் மற்றும் கூட்டாட்சி ஒத்துழைப்பு உணர்வுக்கும் புதிய பலத்தை கொடுத்துள்ளது என பிரதமர் கூறினார்.
இந்திய ஜனநாயகம், மேற்கத்திய அமைப்பு அல்ல. ஆனால், மனித அமைப்பு. இந்திய தேசியவாதத்தின் மீதான தாக்குதல் குறித்து, நாட்டு மக்களை எச்சரிக்க வேண்டியது அவசியம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கூற்றை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர், இந்திய தேசியவாதம், குறுகியதுமல்ல, சுயநலமானதும் அல்ல; கடுமையானதும் அல்ல; இது சத்யம், சிவம், சுந்தரம் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டது என்றார். ‘‘இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு மட்டும் அல்ல. இந்தியா ஜனநாயகத்தின் தாய். இதுதான் நமது நெறிமுறைகள். நமது நாட்டின் இயல்பே ஜனநாயகம் தான்’’ என்று அவர் கூறினார்.
கொரோனா காலத்தில், அன்னிய முதலீடுகள் இல்லாமல் உலக நாடுகள் இருந்தபோது, இந்தியா சாதனை முதலீட்டைப் பெற்றது என திரு நரேந்திர மோடி கூறினார். அன்னிய செலாவணி, அன்னிய முதலீடு, இணையதளம் மற்றும் டிஜிட்டல் பயன்பாடு, நிதி சேர்க்கை, கழிவறைகள் அமைத்தல், மலிவு விலை வீடுகள் கட்டுதல், எல்பிஜி விநியோகம், மருத்துவ சிகிச்சை போன்றவற்றில் சிறப்பான செயல்பாடுகளை திரு நரேந்திர மோடி பட்டியலிட்டார். சவால்கள் பல உள்ளன. பிரச்னையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா அல்லது தீர்வுகாண வேண்டுமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு அதிகாரமளிக்க, கடந்த 2014ம் ஆண்டு முதல், விவசாயத்துறையில், மத்திய அரசு மாற்றங்களைத் தொடங்கியது. விவசாயிகளுக்கு உதவும் வகையில், பயிர் காப்பீட்டுத் திட்டம் மாற்றப்பட்டது. பிரதமரின் கிசான் திட்டமும் கொண்டு வரப்பட்டது. சிறு விவசாயிகளுக்காக அரசு பணியாற்றுவதாக பிரதமர் கூறினார். பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் ரூ.90,000 கோடி பெற்றுள்ளனர். கிசான் கடன் அட்டை, மண் வள அட்டை மற்றும் சம்மன் நிதி ஆகியவை மூலம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என பிரதமர் கூறினார். பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் சாலை இணைப்புகள் மேம்பட்ட போது, விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை தொலைதூரப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடிந்தது. கிசான் ரயில், கிசான் உடான் போன்ற திட்டங்களும் கொண்டு வரப்பட்டன. இப்போதைய தேவை, சிறு விவசாயிகளின் வாழ்க்கையை முன்னேற்றுவதுதான் என பிரதமர் கூறினார். பால் வளத்துறையில் தனியார் நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது போன்ற சுதந்திரத்தை விவசாயிகள் ஏன் பெறக் கூடாது என பிரதமர் கேள்வி எழுப்பினார்.
விவசாயத் துறை பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். இதற்காக பணியாற்ற வேண்டும். விவசாயிகளின் நலனுக்காக, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்தார். குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து பேசிய பிரதமர், ‘‘குறைந்தபட்ச ஆதரவு விலை இருந்தது, தற்போதும் உள்ளது, அது எதிர்காலத்திலும் தொடரும்’’ என அழுத்தமாகக் கூறினார். ஏழைகளுக்கான மலிவு விலை ரேஷன் தொடரும். மண்டிகள் நவீனமயமாக்கப்படும் என பிரதமர் கூறினார். விவசாயிகளின் நலனுக்காக, அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.
சில சக்திகள் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றன. சீக்கியர்களின் பங்களிப்பை எண்ணி நாடு பெருமைப்படுகிறது. இது நாட்டுக்காக அதிக சேவை செய்த சமுதாயம். குரு சாஹிப்புகளின் போதனைகளும், ஆசிர்வாதங்களும் விலை மதிப்பற்றது. நகர்ப்புறம், கிராமப்புறம் இடையேயான வேறுபாட்டை நீக்க நாம் முயற்சிக்க வேண்டும்.
இளைஞர்களை வலுப்படுத்தும் முயற்சிகள், நாட்டின் எதிர்காலத்துக்கு சிறந்த பலனை அளிக்கும் என பிரதமர் சுட்டிக் காட்டினார். அதேபோல், தேசிய கல்விக் கொள்கை விரைவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதையும், அவர் பாராட்டினார்.
பொருளாதார மீட்பு மற்றும் வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை முக்கியம் எனவும், அதில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன எனவும் பிரதமர் கூறினார். அதனால்தான், கொரோனா காலத்தில், அத்துறையை ஊக்குவிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
அனைவருக்குமான வளர்ச்சி குறித்து பேசிய பிரதமர், நக்சல் பாதிப்பு பகுதிகளிலும், வடகிழக்குப் பகுதிகளிலும், இயல்பு நிலையைக் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சுட்டிக் காட்டினார். அங்கு நிலைமை மேம்பட்டு வருவதாகவும், பல துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். வரும் காலத்தில், நாட்டின் வளர்ச்சியில், கிழக்குப் பகுதிகள் முக்கிய பங்காற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
***
(Release ID: 1696162)
Visitor Counter : 289
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam