பிரதமர் அலுவலகம்

ஆத்ம நிர்பர் (தற்சார்பு) மற்றும் ஒவ்வொரு குடிமகனின் தொலைநோக்கை உள்ளடக்கியதாக உள்ளது 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை: பிரதமர்
தனிநபர்கள், முதலீட்டாளர்கள், தொழில் மற்றும் கட்டமைப்புத் துறையில் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்தும்: பிரதமர்
கிராமங்கள் மற்றும் நமது விவசாயிகளே இந்த நிதிநிலை அறிக்கையின் ஆன்மாவாக உள்ளனர்: பிரதமர்
இந்தியாவின் தன்னம்பிக்கையை பிரதிபலிப்பதாக இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது-பிரதமர்

Posted On: 01 FEB 2021 4:08PM by PIB Chennai

2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இயல்பு நிலையையும், வளர்ச்சி காணமுடியும் என்ற நம்பிக்கையையும் நாட்டின் தன்னம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.    உலகில் தற்போது நிலவும் இக்கட்டான தருணத்தில் புதிய நம்பிக்கையை விதைப்பதாக உள்ளது என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ளார்.

2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கை குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஆத்ம நிர்பர் பாரத் மற்றும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பார்வையை உள்ளடக்கியதாக இந்த பட்ஜெட் இருக்கிறது.

வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளின் விரிவாக்கம், இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகள், மனித வளத்துக்கான புதிய பரிமாணம், கட்டமைப்புக்கான வளர்ச்சி மற்றும் புதிய துறைகளின் வளர்ச்சிக்கான உதவி போன்றவற்றை உள்ளடக்கியதாக இந்த பட்ஜெட் உள்ளது.

இந்த பட்ஜெட் ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கை முறையை மிகவும் எளிதாக்கியிருப்பதோடு, தனிமனிதர்கள், முதலீட்டாளர்கள், தொழில் மற்றும் கட்டமைப்புத் துறையினரிடையே நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக விளங்குகிறது.

இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே நேர்மறையான கருத்துகளும், எண்ணங்களும் வெளியாகி வருவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பட்ஜெட்டின் அளவை அதிகரிக்கும் பொழுது அதற்கு தேவையான நிலையான நிதி ஆதாரங்களை அரசு முழுமையாக கருத்தில் கொண்டிருந்தது. அதன் அடிப்படையில் பட்ஜெட்டில் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டிருக்கும் காரணிகள் குறித்து வல்லுனர்கள் பாராட்டுத் தெரிவித்திருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலம் அல்லது ஆத்ம நிர்பர் பாரத் திட்டம் (தற்சார்பு) செயல்படுத்தும் இந்த வேளையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், எதிர்மறை அணுகுமுறை சிறிதளவும் இல்லை எனவும், செயல்பாடுகளுக்கு அப்பால் ஆக்கப்பூர்வமான பட்ஜெட்டை அளித்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை மற்றும் கட்டமைப்புத் துறை உள்ளிட்ட அனைத்து வகையான வளர்ச்சிகளை வலியுறுத்தும் வகையில் இந்த நிதிநிலை அமையப் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. சுகாதார துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தென் மாநிலங்கள், வட கிழக்கு மற்றும் லே லடாக் ஆகிய பகுதிகளின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் கலங்கரை விளக்கங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும், மேலும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை மேம்படுத்த இந்த நிதிநிலை பெரிதும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமூகத்தின் பல்வேறு கட்டமைப்புகள் இந்த பட்ஜெட்டில் உள்ளடக்கி இருப்பதாகவும், புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடும் இளைஞர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றும், சாதாரண மனிதன் மற்றும் பெண்களின் சுகாதாரம், உடல்நலம், ஊட்டச்சத்து, சுத்தமான குடிநீர் மற்றும் வாய்ப்புகளில் சம உரிமை போன்றவற்றை வலியுறுத்தும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்திருப்பதாகவும் இதே போன்று கட்டமைப்பு மற்றும் நடைமுறை சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சி மேம்படும் என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் துறையின் வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும் வகையில் பல்வேறு காரணிகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன என்றும், இதன் மூலம் விவசாயிகள் எளிதில் அதிகளவு கடன் பெற முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார். விவசாய பொருட்களுக்கான தேசிய சந்தை மற்றும் வேளாண் கட்டமைப்புக்கான நிதியை வலுப்படுத்த இந்த நிதிநிலை அறிக்கைகள் வகை செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தத்தில், கிராமங்கள் மற்றும் நமது விவசாயிகளின் ஆன்மாவாக இந்த நிதிநிலை அறிக்கை உள்ளதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கான நிதி இரண்டு மடங்காக்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும் என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார்.

புதிய சகாப்தத்திற்கான ஸ்திரமான அடிக்கல்லை இந்த பட்ஜெட் நாட்டியிருப்பதாகவும், இத்தகைய சிறந்த பட்ஜெட்டிற்காக அதாவது தற்சார்பு இந்தியாவுக்கான பட்ஜெட்டிற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

 (Release ID: 1694110) Visitor Counter : 35