ஜவுளித்துறை அமைச்சகம்

ஜவுளி ஏற்றுமதியை அதிகரிக்க, ஜப்பான் நிறுவனத்துடன் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் ஒப்பந்தம்

Posted On: 27 JAN 2021 6:39PM by PIB Chennai

ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்காகஜப்பான் நிறுவனத்துடன் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காணொலி காட்சி மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக, ஜப்பானைச் சேர்ந்த நிசென்கென் தர மதிப்பீட்டு மையத்துடன், மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து ஜப்பான் நிறுவனத்துடன், மத்திய ஜவுளி அமைச்சகத்தின் குழு, இன்று காணொலி காட்சி மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்நிகழ்ச்சிக்கு  மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, ஜப்பான் பொருளாதார அமைச்சர் மாண்பு மிகு யசுமாசா நகாசாகா ஆகியோர்  தலைமை தாங்கினார்கள்.

ஜப்பான் மக்களின் தேவைக்கு ஏற்ற வகையில் தரத்தை உறுதி செய்வது, பரிசோதனை, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஆலோசனை ஆகியவற்றை உறுதி செய்வதற்கு  ஜவுளித்துறை வர்த்தகம் மற்றும் தொழிலுக்கு தேவையான உதவியை அளிப்பதுதான் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம்.

 இந்த ஒப்பந்தம் மூலம், இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கும் என்பதால், இரு தரப்பு வர்த்தக உறவும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி, ‘‘இரு நாடுகள் இடையே நீண்ட கால நட்பு மற்றும் ஆன்மீக தொடர்பு உள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில், இந்தியா-ஜப்பான் உறவு மேலும் வலுவடையும்’’ என்றார்.

ஜப்பான் அமைச்சர் திரு யசுமாசா நகாசாகா பேசுகையில், ‘‘ஜப்பான் தொழில்துறைக்கு இந்தியாவில் மிகப் பெரிய சந்தை உள்ளது. இந்தியா-ஜப்பான் வர்த்தக உறவில் நல்ல வளர்ச்சி இருக்கும்’’ என்றார்.

                                                                           -----


(Release ID: 1692788) Visitor Counter : 249