குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஐதராபாத்தின் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை வளாகத்தில் இரண்டு புதிய வசதிகள் : குடியரசு துணைத் தலைவர் துவக்கம்

Posted On: 25 JAN 2021 12:13PM by PIB Chennai

குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் தங்களது கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சியால் ஏவுகணை தொழில்நுட்பத்தில் தற்சார்பு அடையும் நிலைக்கருகில் இந்தியாவை கொண்டு செல்வதாகப் பாராட்டியுள்ளார். “பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை அடைவது  நாட்டின் கேந்திர முக்கியத்துவமானது மட்டுமல்ல, நாட்டைப் பெருமைபடுத்துவதற்கும் மிகவும் அவசியம்”, என்று அவர் கூறினார்.

ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை வளாகத்தில் இன்று இரண்டு புதிய வசதிகளைத் துவக்கி வைத்து, அறிவியலாளர்களிடம் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். ஏவுகணை வளாக ஆய்வுக்கூடங்களின் தொழில்நுட்பக் கண்காட்சியையும் அவர் பார்வையிட்டு, உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களைக் காண்பது உற்சாகமளிப்பதாகத் தெரிவித்தார். “தற்சார்பு ஏவுகணை தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் டிஆர்டிஓ விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ள பிரம்மாண்ட வளர்ச்சி, நாட்டின் பாதுகாப்பிற்கும், செயல்திறனுக்கும் உத்தரவாதம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன்”, என்று திரு நாயுடு கூறினார். டிஆர்டிஓ-வின் விஞ்ஞானிகள், தொழில்நுட்பவல்லுநர்களின் திறமையும், அர்ப்பணிப்பும், உலக நாடுகள் இந்தியாவைச் சார்ந்து இயங்கும் வகையில் நம் நாட்டை தற்சார்பு அடையச் செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின், இறக்குமதிக்குத் தடை செய்யப்படும் பொருள்களின் பட்டியலில், ஆகாஷ் ஏவுகணை அண்மையில் சேர்க்கப்பட்டிருப்பது டிஆர்டிஓ-வின் மிகப்பெரும் சாதனை என்று அவர் குறிப்பிட்டார். “இது போன்ற ஏவுகணைகளில் இந்தியா தற்போது தன்னிறைவை அடைந்திருப்பதையும், இத்தகைய ஏவுகணைகளை பாதுகாப்புப் படைகள் இறக்குமதி செய்வதற்கு அவசியமில்லை என்பதையும் இது உணர்த்துகிறது”, என்றார் அவர்.

ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் (எம்டிசிஆர்) கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியா கையெழுத்திடுவதற்கு முன்பு, வளர்ந்த நாடுகளின் உயர்தர ஏவுகணை தொழில்நுட்பங்களை இந்தியா பெறுவதில் எழுந்த இடர்பாடுகளை சுட்டிக்காட்டிய திரு நாயுடு, ஏராளமான ஏவுகணைகளை உள்நாட்டிலேயே தயாரித்துள்ளதன் வாயிலாக இந்தச் சிக்கலை டிஆர்டிஓ ஒரு வாய்ப்பாக மாற்றியதாகத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692088



(Release ID: 1692198) Visitor Counter : 161