குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கையை உத்வேகமாகக் கருதி, வறுமை, கல்லாமை, சமூக, பாலின பாகுபாடு, ஊழல், சாதி, இனவாதத்தை ஒழிக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும்: குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்
Posted On:
23 JAN 2021 1:25PM by PIB Chennai
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கையை உத்வேகமாகக் கருதி, வறுமை, கல்லாமை, சமூக மற்றும் பாலின பாகுபாடு, ஊழல், சாதி, இனவாதத்தை ஒழிக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.
பராக்கிரம தினம் என்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஐதராபாத்தின் எம்சிஆர் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தில் அடிப்படை பாடப்பிரிவின் பயிற்சி அதிகாரிகள் மத்தியில் இன்று உரையாடுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நம் நாட்டின் மக்கள்தொகையில் 65 சதவீதத்தினர் 35 வயதிற்கும் குறைவானோர் என்று குறிப்பிட்ட திரு நாயுடு, புதிய இந்தியா என்று அழைக்கப்படும் பாகுபாடு இல்லாத, ஒவ்வொரு குடிமகனுக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கும் வகையிலான, மகிழ்ச்சியான, வளமான இந்தியாவை இளைஞர்கள் முன்னின்று கட்டமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நேதாஜியின் குறிப்பிடத்தக்க அம்சமான தைரியத்தை (பராக்கிரமம்) நாட்டு மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அவரது பிறந்தநாளை பராக்கிரம தினமாகக் கொண்டாடும் அரசின் முடிவை குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு புகழாரம் சூட்டிய அவர், மக்களைக் கவர்ந்த தலைவராகவும், சுதந்திர இயக்கத்தின் உயரிய தலைவர்களுள் ஒருவராகவும் நேதாஜி திகழ்ந்தார் என்று கூறினார். இந்தியா வளர்ச்சி அடைவதற்கு சாதி, சமய, மதங்களுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் முதலில் இந்தியர்கள் என்ற நிலைப்பாட்டைக்கொள்ள வேண்டும் என்று நேதாஜி கருதியதாகவும் திரு வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட ஏராளமான சுதந்திர போராட்ட வீரர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் போன்ற நாடெங்கும் உள்ள அதிகம் பேசப்படாத வீரர்களின் முக்கிய பங்களிப்பைக் குறிப்பிட்ட அவர், இது போன்ற தலைவர்களின் பங்களிப்புக்கு வரலாற்று புத்தகங்களில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால் ஏராளமான மக்களுக்கு இவர்களைப் பற்றித் தெரியவில்லை என்று கவலை தெரிவித்தார். “நமது தலைசிறந்த தலைவர்களின் வாழ்வை நாம் கொண்டாட வேண்டும். குடியேற்ற மனப்பான்மையிலிருந்து நாம் வெளிவரவேண்டும்”, என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
“தங்கள் தாய் நாட்டிற்காக இந்திய ஆயுதப் படையினர் கொண்டிருந்த உயரிய விசுவாசம் தான் இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேற முக்கிய காரணியாக இருந்ததாகக் கூறப்படுகிறது” என்று திரு நாயுடு கூறினார். இந்தியாவிலிருந்து சாதிய முறை நீக்கப்பட வேண்டும் என்ற நேதாஜியின் விருப்பத்தைக் குறிப்பிட்ட திரு நாயுடு, கடந்த 1940 களில் அனைத்து சாதி, சமய, மதங்களைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஒன்றாகத் தங்கி, பொது சமையல் அறைகளில் உணவு உண்டு, இந்தியர்களாக இணைந்து போராடியதாகத் தெரிவித்தார்.
திரு போஸ் சிறுவயது முதலே அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தார் என்று நினைவுகூர்ந்த குடியரசுத் துணைத் தலைவர், சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், திரு அரபிந்தோ போன்ற ஆன்மீகத் தலைவர்களின் போதனைகளால் நேதாஜி பெரிதும் ஈர்க்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
நேதாஜியின் ஜனநாயகக் கொள்கைகள், தியாகம் மற்றும் துறவு ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்தது என்றும், சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்க, குடிமக்கள் ஒழுக்கம், பொறுப்புடைமை, சேவை, நாட்டுப்பற்று ஆகிய குணநலன்களைப் பின்பற்ற வேண்டும் என்று திரு போஸ் விரும்பியதாகவும் குடியரசு துணைத் தலைவர் கூறினார்.
சமூக, பொருளாதார, அரசியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற திரு போஸின் கருத்தை சுட்டிக்காட்டிய திரு வெங்கையா நாயுடு, “இந்திய தேசிய ராணுவத்தில் பெண்களுக்கென்று பிரத்தியேகமாக ஜான்சி ராணி படைப் பிரிவை அவர் தொடங்கியதிலிருந்து நேதாஜியின் முற்போக்கு சிந்தனை வெளிப்படுகிறது” என்று குறிப்பிட்டதோடு, நாட்டின் படைப் பிரிவுகளில் பணியாற்றும் பெண்களுக்கு நிரந்தர ஆணையத்தை அமைக்கும் அரசின் முடிவையும் பாராட்டினார்.
மனித வாழ்க்கையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், பண்பு நலன்களை கட்டமைப்பதற்கும் கல்வி இன்றியமையாதது என்று நேதாஜி நம்பியதாகத் தெரிவித்த திரு நாயுடு, கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி இந்தியாவை கல்வி முனையமாகவும், அறிவுசார்ந்த பொருளாதாரமாகவும் உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
எம்சிஆர் மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் திரு ஹர்பிரீத் சிங், கூடுதல் தலைமை இயக்குநர் திரு பென்ஹுர் மகேஷ் தத்தா எக்கா, நிறுவனத்தின் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691518
**********************
(Release ID: 1691560)
Visitor Counter : 259