பாதுகாப்பு அமைச்சகம்

தரையில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன்மிகு வான்வழி எதிர்ப்பு ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது

Posted On: 22 JAN 2021 1:22PM by PIB Chennai

உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தியில் இன்னுமொரு மைல்கல்லாக, நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட திறன்மிகு வான்வழி எதிர்ப்பு ஆயுதத்தை (SAAW) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. 2021 ஜனவரி 21 அன்று ஒடிசா கடற்கரைக்கு அருகில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்டின் ஹாக்-I தளத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்டின் ஹாக்-எம்கே132 விமானத்தில் இருந்து இந்த திறன்மிகு ஆயுதம் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நடத்தியுள்ள ஒன்பதாவது திறன்மிகு வான்வழி எதிர்ப்பு ஆயுத பரிசோதனை இதுவாகும். அனைத்து இலக்குகளும் துல்லியமாக தாக்கப்பட்டன.

பாலாசூரில் உள்ள நடுத்தர சோதனை தளத்தில் நிறுவப்பட்டுள்ள தொலைஅளவியல் மற்றும் கண்காணிப்பு அமைப்பு அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்தது.

ஹைதராபத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இமாரத் ஆராய்ச்சி மையத்தால் திறன்மிகு வான்வழி எதிர்ப்பு ஆயுதம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. 125 கிலோ எடையிலான இந்த ஆயுதம், எதிரியின் ரேடார்கள், பதுங்கு குழிகள், வாகன தளங்கள் மற்றும் ஓடுதளங்கள் ஆகியவற்றை தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது.

துல்லியமாக இலக்கை எட்டும் இந்த ஆயுதம், இந்த வகையிலான இதர ஆயுதங்களோடு ஒப்பிடுகையில்  எடை குறைவானதாகும். ஜாக்குவார் விமானத்தில் இருந்து முன்னர் இது வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

வெற்றிகரமான சோதனையில் ஈடுபட்ட குழுக்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி பாராட்டினார்.

------



(Release ID: 1691288) Visitor Counter : 239