குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நமது உடல்நலனுக்கு நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் முக்கியம் என்பதை கொவிட்-19 நமக்கு கற்று கொடுத்துள்ளது: குடியரசு துணைத் தலைவர்
Posted On:
20 JAN 2021 7:30PM by PIB Chennai
நமது உடல்நலனுக்கு நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் முக்கியம் என்பதை கொவிட்-19 நமக்கு கற்று கொடுத்துள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கூறினார். காற்றுப் புகாத இடங்களில் வாழும் வளர்ந்து வரும்
பழக்கம் குறித்து தமது அதிருப்தியை தெரிவித்த அவர், வீடுகள், அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் கூட்ட அரங்குகளில் முறையான காற்றோட்ட வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றார்.
'நகர்ப்புற திட்டமிடுதல் மற்றும் புவியியலுக்கான பாடப்புத்தகம்' என்னும் தலைப்பிலான புத்தகம் ஒன்றை காணொலி மூலம் ஹைதராபாத்தில் வெளியிட்ட குடியரசு துணைத் தலைவர் இவ்வாறு கூறினார். இந்திய பெருநிறுவன விவகாரங்கள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் சமீர் சர்மா இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
நவீன வாழ்க்கைமுறைக்கான ஆசையில் நகரங்களில் வாழ்பவர்கள் இயற்கையுடனான தங்களது தொடர்பை பல நேரங்களில் இழந்து விடுவதாக திரு நாயுடு கூறினார். சூரிய ஒளி கூட நமது வீடுகளுக்குள் வருவதில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார். நவீன கட்டிடங்கள் இயற்கையோடு ஒன்றி இருக்குமாறு வடிவமைக்கும் படி நகர வடிவமைப்பாளர்கள் மற்றும் திட்டமிடல் அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.
பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் மைதானங்கள் போன்ற வசதிகள் நகரங்களில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். கட்டிடங்கள் நெருக்கமாக அமைந்திருக்கும் நகர்ப்புறப் பகுதிகள் வெள்ளப்பெருக்குக்கான காரணங்களில் ஒன்று என்று அவர் கூறினார்.
மாநகரம் என்பது ஒரு சிலருக்கானது மட்டுமே அல்ல என்று கூறிய அவர், நகரங்களில் வாழும் நிறைய ஏழைகள் நகரங்களின் வளர்ச்சி திட்டங்களில் விடுபட்டு போவதாகவும், நகர திட்டமிடுதலில் இன்றியமையா பாகமாக அனைவரையும் சேர்க்க வேண்டும் என்றும் திரு நாயுடு கூறினார்.
நகர்ப்புற வசதிகளுக்கான நிதி, பசுமை கட்டிடங்களை ஊக்குவித்தல், கழிவுகளை மறுசுழற்சி செய்தல், மழைநீரை சேமித்தல் மற்றும் பொதுப் போக்குவரத்தை ஊக்கப்படுத்துதல் போன்ற நகர திட்டமிடலின் ஒவ்வொரு பகுதியும் நீண்ட காலம் நிலைத்திருக்குமாறு திட்டமிடப்பட வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார்.
**********************
(Release ID: 1690599)
Visitor Counter : 249