மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

நாடு முழுவதுமுள்ள கேந்திரிய வித்யாலயா மாணவர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் உரையாடினார்

Posted On: 18 JAN 2021 6:51PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சரும் கேந்திரிய வித்யாலயா அமைப்பின் தலைவருமான திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்’, நாடு முழுவதுமுள்ள கேந்திரிய வித்யாலயா மாணவர்களுடன் காணொலி மூலம் உரையாடினார்.

உரையாடலின் போது பல்வேறு துறைகள், தலைப்புகள் குறித்து மாணவர்கள் கேள்விகளை எழுப்பினர். குருகிராம் கேந்திரிய வித்யாலயா மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த திரு பொக்ரியால், கொவிட்-19 காரணமாக பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால், இந்த வருட ஜெஈஈ, நீட் போன்ற தேர்வுகளில் கேள்விகளுக்கு விடையளிப்பது மாணவர்களுக்கு எளிதாக இருக்கும் என்றார்.

வாரணாசியில் இருந்து மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்பும் ஆன்லைன் கல்வி வசதி தொடரும் என்றார். சில காலத்துக்கு ஆன்லைன், வகுப்பறைக் கல்வி என இரண்டு முறைகளும் பின்பற்றப்படும் என்று அவர் கூறினார்.

புதிய கல்விக் கொள்கை-2020 குறித்து ஆண்ட்ரூஸ்கன்ஜ் கேந்திரிய வித்யாலயா மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த திரு பொக்ரியால், “புத்தக அறிவை விட செயல்முறை அறிவுக்கு புதிய கல்விக் கொள்கையில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ஆறாம் வகுப்பில் இருந்தே தொழில்முறை பயிற்சி வசதி மாணவர்களுக்கு வழங்கப்படும். பள்ளி அளவிலேயே செயற்கை நுண்ணறிவு குறித்து கற்றுத்தரப்படும். அதே சமயம், இந்திய கலாச்சாரம் மற்றும் மதிப்புகளுக்கும் ஊக்கமளிக்கப்படும். தற்சார்பு இந்தியா கனவை நனவாக்கும் வல்லமை இந்தக் கொள்கைக்கு உள்ளது,” என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689748

**********************


(Release ID: 1689810) Visitor Counter : 190