சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
முதல் முறையாக, சாலைப் பாதுகாப்பு மாதம் இன்று தொடக்கம்
Posted On:
18 JAN 2021 6:15PM by PIB Chennai
சாலைப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நாட்டில் சாலை விபத்துக்களை குறைக்கவும் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம், முதல் முறையாக இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக, சாலைப் பாதுகாப்பு வாரம் நடத்தப்பட்டது. ஆனால், இந்த விஷயத்தின் முக்கியத்துவம் கருதி, சாலைப் பாதுகாப்பு நிகழ்ச்சி இந்தாண்டு ஒரு மாத காலம் நடத்தப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் சாலைப் பாதுகாப்பு பற்றிய குறும்படம் வெளியிடப்பட்டது. அமிர்தசரஸிலிருந்து கன்னியாகுமரி வரை பாதுகாப்பான வேகம் குறித்த தேசிய சாம்பியன்ஷிப் பயணம் தொடங்கி வைக்கப்பட்டது. சாலை பாதுகாப்புக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள் ஆகியவை கருத்தரங்கம், நடைப்பயணம், சுவரொட்டி தயாரிப்பு போட்டி போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ‘‘சாலை விழிப்புணர்வும், சாலைப் பாதுகாப்பில் அடங்கியுள்ளது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், 3 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி இழப்பைத் தவிர்க்க முடியும்’’ என்றார்.
திரு நிதின் கட்கரி பேசுகையில், ‘‘ ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மரணம் அடைகின்றனர். 4.5 லட்சம் பேர் காயமடைகின்றனர். இதனால் ஏற்படும் சமூகப் பொருளாதார இழப்பு ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.14 சதவீத அளவுக்கு இருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. சாலை விபத்து மரணங்களையும், காயங்களையும் குறைக்க மத்திய அரசு உறுதியுடன் செயல்படுகிறது’’ என்றார்.
**********************
(Release ID: 1689797)
Visitor Counter : 276