சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உலக சுகாதார அமைப்பு நிர்வாக வாரியத்தின் 148-வது அமர்வு: டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமை

Posted On: 18 JAN 2021 4:22PM by PIB Chennai

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் 148-வது அமர்வுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலிக் காட்சி மூலம் தலைமை தாங்கினார்.

தனது துவக்கவுரையில் "2020 ஒட்டுமொத்த உலகத்துக்கும் எத்தனை கடினமானதாக இருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். நெருக்கடியை எதிர்த்து தனது மொத்த வலிமையையும் உபயோகித்து மனித சமூகம் போராடிய அதே வேளையில், அறிவியல் அறிவை சிறப்பாகப் பயன்படுத்திய வருடமாகவும் அது அமைந்தது. அறிவியலைப் பொருத்தவரையில் 2020 என்பது அளப்பரிய அறிவியல் சாதனைக்கான வருடமாக அமைந்தது. வெறும் 12 மாதங்களுக்குள், ஒரு புதிய நோயை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, புதிய வைரஸின் மரபணுவை வரிசைப்படுத்தி, பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகளை உருவாக்கி, கடுமையான சோதனைகளுக்குப் பிறகு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் திறனையும் நிரூபித்துள்ளார்கள்," என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அமைச்சர், உலகளாவிய ஒற்றுமைக்கான, வாழ்வுக்கான வருடமாக 2021 இருக்கும். செயல்பாடுகளின் தசாப்தத்திற்கான தொடக்கமாக இது இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. கொரோனா தடுப்பூசிகள் வெற்றிகரமாக உற்பத்தி செய்யப்படும் வேகத்தையும், முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் விதத்தையும் வைத்துப் பார்க்கும் போது, தொழில்நுட்ப முதலீடுகள் அதிக அளவில் நடைபெறுவதும், டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதும் தெரிகிறது. இவை அனைத்தும் இணைந்து, வளர்ச்சிக்கான, புதிய யுகத்திற்கான நம்பிக்கையை அளிக்கின்றன என்று கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகளின் கடின உழைப்பும், உறுதியும், எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றி பொது சுகாதாரத்தை மேம்படுத்தி, ஆயுட்காலத்தை அதிகரித்துள்ளன என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

நமது பணியை, கடந்த 70 ஆண்டுகளாக உருவகப்படுத்தி வந்த ஒற்றுமையும், ஒத்துழைப்பும் கொரோனாவுக்கான எதிர்வினைக்கு மையப் புள்ளியாக இருந்தது. உலக சுகாதார சபையின் கொவிட்-19 எதிர்வினை தீர்மானத்தின் அம்சங்கள், உலக சுகாதார அமைப்பின் பணிகளையும், உறுப்பு நாடுகளையும் தொடர்ந்து வழிநடத்தி வருகின்றன. அவற்றை செயல்படுத்துதலின் முன்னேற்றம் குறித்து இந்த அமர்வில் எடுத்துரைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

"இன்றைக்கு, செயல்பாடுகளுக்கான தசாப்தத்திற்கு நமது உறுதியான பங்களிப்பை வழங்க நாம் சபதம் ஏற்று, ஒருங்கிணைந்த உலகளாவிய எதிர்வினையை, பெருந்தொற்றுக்கு எதிராக ஒன்று திரட்ட, தொடர்ந்து பாடுபடுவோம்," என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689685

*****



(Release ID: 1689727) Visitor Counter : 194