சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொரோனா தொற்றிலிருந்து குணமடைவதற்கான சஞ்சீவனியாக கொவிட்-19 தடுப்பூசி நினைவுகூரப்படும்: அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 16 JAN 2021 5:25PM by PIB Chennai

தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தபோது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுடன் இணைந்திருந்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், மருத்துவப் பணியாளர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டினார்.  துப்புரவு பணியாளர் திரு மணிஷ் குமாருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் தடுப்பூசி வழங்கப்பட்டது.

அப்போது பேசிய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், “தொடக்கம் முதலே பெருந்தொற்று மேலாண்மையில் பிரதமர் திரு நரேந்திர மோடி நேரடியாக ஈடுபட்டார். தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதற்காக கடந்த 5 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் இன்று நிறைவடைந்துள்ளன” என்று குறிப்பிட்டார்.

நாட்டின் அனைத்து தொலைதூர பகுதிகள், எளிதில் சென்றடைய முடியாத இடங்கள், நகர்ப்புற குடிசைப் பகுதிகள், பழங்குடி வசிப்பிடங்கள் உள்ளிட்ட  அனைத்து இடங்கள் உட்பட நாடு முழுவதும் 3006 மையங்களில் தலா 100 பயனாளிகளுக்கு தடுப்பூசி  வழங்கப்பட்டதாக அவர் கூறினார். சின்ன அம்மை, போலியோவைத் தொடர்ந்து, கொவிட் நோய் தொற்றை முற்றிலும் ஒழிப்பதற்காக தடுப்பூசித் திட்டம் தற்போது தொடங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

“பிரதமருடன் அனைத்து முதலமைச்சர்களும், எனது சக சுகாதார அமைச்சர்களும் இணைந்து ஓர் குழுவாக செயல்பட்டு இன்று வரலாறு படைத்திருக்கின்றனர்” என்று அமைச்சர் குறிப்பிட்டார். பிற நாடுகளைவிட இந்தியாவில் கொரோனா நோய் தொற்றிலிருந்து அதிக அளவில்,  96 சதவீதத்தினர் குணமடைந்திருப்பதாகவும், குறைந்த இறப்பு வீதமாக 1.5% பதிவாகி இருப்பதாகவும் அவர் கூறினார்.  தடுப்பூசிகளை வெற்றிக்கான பாதை என்று குறிப்பிட்ட அவர், “கொவிட் தொற்றிலிருந்து  குணமடைவதற்கான சஞ்சீவனியாக கொவிட்-19 தடுப்பூசி நினைவுகூரப்படும்” என்று தெரிவித்தார். கொவிட்-19 தடுப்பூசிகள் தொடர்பாக பரவும் புரளிகள் மற்றும் பொய்கள் தொடர்பாக பேசிய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், தவறான தகவல்களால் பொதுமக்கள் அஞ்ச வேண்டாம் என்றும் நம்பகத்தன்மையான தகவல்களை மட்டுமே அவர்கள் நம்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689112

------


(Release ID: 1689152) Visitor Counter : 247