சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தற்சார்பு இந்தியா, சுதந்திர இந்தியா குறித்த இணைய கருத்தரங்கில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் உரையாற்றினார்

Posted On: 14 JAN 2021 5:56PM by PIB Chennai

தற்சார்பு இந்தியா, சுதந்திர இந்தியா மற்றும் கொவிட்டுக்கு பிந்தைய உலகில் இந்தியாவின் சுகாதார சேவை சூழலியல் குறித்து சுவராஜ்யா இதழ் ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் உரையாற்றினார்.

அனைவருக்கும் இனிய மகர சங்கராந்தி வாழ்த்துககளை தெரிவித்த டாக்டர் ஹர்ஷ் வர்தன், தற்சார்பு இந்தியா குறித்து இணைய கருத்தரங்குகளை நடத்தி வருவதற்காக சுவராஜ்யா இதழை பாராட்டினார். "சமுதாயத்தின் கடைசி மனிதனுக்கும் சேவையாற்றும் பண்டிதர் தீனதயாள் உபாத்தியாயாவின் கொள்கையால் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான நமது அரசு மிகவும் உந்தப்பட்டுள்ள நிலையில், அதை சுற்றியே அனைத்து பொருளாதார கொள்கைகளும் வகுக்கப்படுகின்றன. பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கிடையேயான இடைவெளியை குறைப்பதற்கும், அனைத்து மக்களுக்கும் சம அளவிலான வாய்ப்புகளை வழங்குவதற்கும் நமது அரசு கவனம் செலுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

தற்சார்போடு இந்தியா எவ்வாறு முன்னேற முடியும் என்று விளக்கிய மத்திய அமைச்சர், “ஒவ்வொரு குடிமகனும் முன்னேறினால் மட்டுமே இந்தியா முன்னேற முடியும். ஒவ்வொரு குடிமகனும் முன்னேறுவதற்கு தற்சார்பு அவசியம். தற்சார்பு இந்தியா என்பது வெளிநாட்டு பொருட்களை புரக்கணிப்பது அல்ல. மாறாக, வசுதேவ குடும்பகம் என்பதில் நம்பிக்கை வைப்பதே ஆகும்,” என்றார்.

இந்தியா இதர நாடுகளை சார்ந்திருப்பதற்கு முடிவு கட்டி, வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டும். தற்சார்பு நாடு மட்டுமே மிகப்பெரிய வளர்ச்சியை அடைய முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கொவிட் நெருக்கடியை வாய்ப்பாக மாற்றுவது குறித்து பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், “கொவிட் அவசர காலத்தின் போது, கொவிட்-19 பெருந்தொற்று நெருக்கடியை ஒரு வாய்ப்பாக இந்தியா கருத வேண்டும் என்று கூறிய பிரதமர், பொருளாதாரம், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, துடிப்பான மக்கள் மற்றும் தேவை ஆகிய ஐந்து முக்கிய அம்சங்கள் மீது தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்காக கவனம் செலுத்த வேண்டும் என்றார். சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், சுகாதார பணியாளர்களின் திறன்களை வளர்க்கவும், நாட்டின் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும் ஊரடங்கு காலத்தை இந்தியா பயன்படுத்திக் கொண்டது,” என்று கூறினார்.

சுவாசக் கருவிகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முகக்கவசங்கள் ஆகியவற்றில் நாம் தற்சார்பு அடைந்திருப்பதோடு, ஏற்றுமதியும் செய்கிறோம். முன்னர் நம்மிடம் புனேவில் ஒரே ஒரு பரிசோதனை கூடம் இருந்தது. ஆனால், 2,323 ஆய்வகங்கள் தற்போது கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்கின்றன என்று அவர் மேலும் கூறினார். கொவிட் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட ஆரோக்கிய சேது செயலி, 168 மில்லியன் பயனர்களால் இதுவரை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்

பொதுமுடக்கம்-6-இன் போது மொத்த தனிமைப்படுத்துதல் படுக்கைகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனாக உயர்ந்ததாகவும், ஊரடங்குக்கு முன் இது 10,180 ஆக இருந்ததாகவும் கூறிய அமைச்சர், தீவிர சிகிச்சை பிரிவு மெத்தைகளின் எண்ணிக்கையும் 2,168 மெத்தைகளில் இருந்து 80,669 ஆக அதிகரித்துள்ளதாக கூறினார்.

மாண்புமிகு பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், தடுப்பு மருந்து வழங்கலுக்கான தேசிய நிபுணர் குழு உருவாக்கப்பட்டிருக்கிறதென்றும், தடுப்பு மருந்து குறித்த அனைத்து விஷயங்களையும் இக்குழு கண்காணித்து முடிவெடுக்கும் என்றும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

தடுப்பு மருந்து விநியோகத்திற்கான கொ-வின் மென்பொருளை பற்றி குறிப்பிட்ட அவர், தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கும் இரண்டு தடுப்பு மருந்துகளும் நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்றார்.

 

***(Release ID: 1688675) Visitor Counter : 126