மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பறவை காய்ச்சல் நிலவரம்
Posted On:
10 JAN 2021 4:03PM by PIB Chennai
ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் 2 கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 9 விரைந்த செயல்பாட்டுக் குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு மற்றும் தொற்று நோய் குறித்த விசாரணைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குஜராத் மாநிலத்தின் சூரத் மாவட்டம் மற்றும் ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் காகம்/ வன பறவைகளின் மாதிரிகளில் பறவை காய்ச்சல் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் கங்ரா மாவட்டத்தில் 86 காகங்கள் மற்றும் 2 நாரை இன பறவைகள் அசாதாரணமான முறையில் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் அந்த மாநிலத்தின் நஹான், பிலாஸ்பூர், மண்டி ஆகிய மாவட்டங்களில் மர்மமான முறையில் பறவைகள் உயிரிழந்திருப்பதாகக் கிடைத்த செய்தியை அடுத்து, அவற்றின் மாதிரிகள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இது வரை, ஏழு மாநிலங்களில் (கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம்) பறவை காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி, மகாராஷ்டிராவில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளின் அறிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சட்டீஸ்கர் மாநிலத்தின் பலோட் மாவட்டத்தின் வன பறவைகளிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் தொற்று ஏற்படவில்லை என்பது சோதனையில் தெரியவந்துள்ளது.
கேரளாவில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள இரண்டு மாவட்டங்களிலும் ஒழிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. கண்காணிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் கேரள மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு மற்றும் தொற்று நோய் குறித்த விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய குழுக்கள் ஜனவரி 9-ஆம் தேதி கேரளா சென்றடைந்து அங்கு பாதிப்புக்குள்ளான பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. மற்றொரு குழு இன்று (ஜனவரி 10) ஹிமாச்சலப் பிரதேசம் சென்றடைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றது.
பறவை காய்ச்சல் நோய் குறித்துத் தவறான தகவல்கள் பொதுமக்களிடையே பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நோய் பற்றிய கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. நீர்நிலைகளுக்கு அருகில், உயிரியல் பூங்காக்கள், கோழி பண்ணைகள் போன்ற பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687443
-------
(Release ID: 1687455)
Visitor Counter : 137