பிரதமர் அலுவலகம்
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை பிரதமர் துவக்கி வைத்தார்
கொரோனாவுக்கு எதிரான போரில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டினார்
சர்வதேச சவால்களை எதிர்கொள்ள உதவுவதில் இந்தியா எப்போதுமே முன்னணியில் இருக்கிறது: பிரதமர்
Posted On:
09 JAN 2021 8:04PM by PIB Chennai
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கொரோனா பெருந்தொற்றின் போது அயல்நாட்டு இந்தியர்கள் தங்களது நாடுகளில் ஆற்றிய பங்கை பாராட்டினார். பல்வேறு நாடுகளின் தலைவர்களோடு தாம் உரையாடிய போதெல்லாம், மருத்துவர்களாக, மருத்துவ பணியாளர்களாக, பொதுமக்களாக அவர்களது நாடுகளில் இந்தியர்கள் ஆற்றும் பணியை பற்றி அவர்கள் பாராட்டும் போது பெருமையாக உணர்ந்ததாக அவர் கூறினார். கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.
ஒய்2கே நெருக்கடியை கையாள்வதில் இந்தியாவின் பங்கை பற்றியும், இந்திய மருந்துகள் தொழில் அடைந்துள்ள வளர்ச்சியை குறித்தும் பேசிய பிரதமர், இந்தியாவின் திறன்கள் மனிதகுலத்துக்கு எப்போதுமே நன்மையை செய்துள்ளதாக கூறினார். சர்வதேச சவால்களை எதிர்கொள்ள உதவுவதில் இந்தியா எப்போதுமே முன்னணியில் இருக்கிறது. காலனியாக்கம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போர், இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வலிமையை உலகத்திற்கு வழங்கியுள்ளது.
இந்தியாவின் மீதும், அதன் உணவு, நாகரிகம், குடும்ப மதிப்புகள் மற்றும் வர்த்தக உறவுகள் மீது உலகம் வைத்துள்ள நம்பிக்கைக்கான பெருமையில் பெரும்பங்கு அயல்நாட்டு வாழ் இந்தியர்களை சேரும் என்று பிரதமர் கூறினார். வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பழக்க வழக்கம், இந்திய முறைகள் மற்றும் மதிப்புகள் மீதான ஆர்வத்தை அந்நாட்டினருக்கும் உருவாக்கியதாகவும், ஆர்வமாக தொடங்கியது பின்னர் வழக்கமாக மாறியதென்றும் அவர் கூறினார். தற்சார்பு இந்தியா இலக்கை நோக்கி நாடு முன்னேறி வரும் வேளையில், இதில் முக்கிய பங்காற்ற வேண்டிய கடமை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இருக்கிறதென்றும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அவர்கள் பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியா திறம்பட செயலாற்றியதாக அயல்நாட்டு வாழ் இந்தியர்களிடம் பிரதமர் தெரிவித்தார். வைரசுக்கு எதிரான இத்தகைய ஜனநாயக ஒற்றுமை உலகில் வேறெங்கும் இல்லை என்று அவர் கூறினார். தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், முக கவசங்கள், சுவாச கருவிகள் மற்றும் பரிசோதனை உபகரணங்கள் ஆகியவற்றுக்கு இறக்குமதிகளை சார்ந்திருந்த இந்தியா, தற்போது இதில் தற்சார்பு அடைந்திருப்பதோடு மட்டுமில்லாமல், ஏற்றுமதியையும் செய்து வருவதாகக் கூறினார். உலகத்தின் மருந்தகமாக உள்ள இந்தியா, உலகத்துக்கு உதவி வருவதாகவும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பு மருந்துகளோடு உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்திற்கு நாடு தயாராகி வரும் வேளையில், உலகமே இந்தியாவை உற்று நோக்கி வருவதாகவும் அவர் கூறினார்.
நேரடி பலன் பரிவர்த்தனை மூலம் ஊழலை நாடு கட்டுப்படுத்தியதாகவும், பெருந்தொற்றின் போது உலகமே இதை பாராட்டியதாகவும் பிரதமர் கூறினார். அதே போன்று, ஏழைகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அடைந்துள்ள முன்னேற்றம் ஆகியவை நாட்டுக்கு பாராட்டை பெற்று தந்துள்ளதாக அவர் கூறினார்.
இந்தியாவின் விண்வெளி திட்டம், தொழில்நுட்ப புது நிறுவன (ஸ்டார்ட் அப்) சூழலியல், மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ள ஸ்டார்ட் அப்புகள் ஆகியவை இந்தியா கல்வியறிவற்ற நாடு என்னும் பழைய பிம்பத்தை தகர்த்துள்ளதாக பிரதமர் கூறினார். கல்வி முதல் தொழில் துறை வரை கடந்த சில மாதங்களில் எடுக்கப்பட்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு வெளிநாடு வாழ் இந்தியர்களை அவர் கேட்டுக்கொண்டார். உற்பத்தியை அதிகரிப்பதற்கான உற்பத்தி சார்ந்த மானிய திட்டத்தை பற்றி அவர் குறிப்பிட்டார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தாயகம் அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று பிரதமர் உறுதியளித்தார். கொரோனாவின் போது 45 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வந்தே பாரத் இயக்கத்தின் மூலம் மீட்கப்பட்டதாக அவர் கூறினார். வெளிநாட்டு இந்தியர்களின் வேலை வாய்ப்புகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசினார். வளைகுடா மற்றும் இதர பகுதிகளில் இருந்து திரும்பி வந்தவர்களுக்கான ‘வேலைவாய்ப்பு ஆதரவுக்கான திறன்மிக்க பணியாளர்கள் வருகை தரவு’ (சுவதேஸ்) முன்னெடுப்பை குறித்து பிரதமர் பேசினார். வெளிநாடு வாழ் இந்தியர்களுடனான இணைப்பை வலுப்படுத்துவதற்கான சர்வதேச அளவிலான அயல்நாட்டு உறவு தளத்தை பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
சுரிநாம் குடியரசின் மாண்புமிகு அதிபர் திரு சந்திரிகாபிரசாத் சந்தோகிக்கு அவரது தலைமைக்காகவும், சிறப்புரைக்காகவும் பிரதமர் நன்றி கூறினார். அவரை விரைவில் சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான விருதுகளை வென்றவர்களையும், விநாடி வினாவில் வெற்றி பெற்றவர்களையும் அவர் வாழ்த்தினார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்குமாறு வெளிநாடு வாழ் இந்தியர்களை அவர் கேட்டுக்கொண்டார். சுதந்திர போராட்டத்தில் அயல்நாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பை ஆவணப்படுத்துவதற்கான டிஜிட்டல் தளத்தை உருவாக்குமாறு வெளிநாடு வாழ் இந்தியர்களையும், உலகெங்கும் உள்ள இந்திய தூதரங்களை சேர்ந்தவர்களையும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
**********************
(Release ID: 1687376)
Visitor Counter : 302
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam