விவசாயத்துறை அமைச்சகம்
அரசு மற்றும் விவசாயிகளுக்கிடையேயான ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று புதுதில்லியில் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
04 JAN 2021 8:10PM by PIB Chennai
41 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற ஏழாவது சுற்று பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், மத்திய ரயில்வே, வர்த்தகம், தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் ஆகிய துறைகளுக்கான அமைச்சர் திரு பியுஷ் கோயல், மத்திய வர்த்தக தொழில் துறை இணை அமைச்சர் திரு சோம் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர். போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்காக கூட்டத்தின் தொடக்கத்தில் இரண்டு நிமிடங்கள் மவுனம் அனுசரிக்கப்பட்டது.
முந்தைய பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்டதை மனதில் கொண்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு திறந்த மனதுடன் தீர்வுகளைக் காண அரசு உறுதி பூண்டுள்ளது என்று திரு தோமர் கூறினார். தீர்வை எட்டுவதற்காக இரு தரப்பும் முன் வந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் நலனை மனதில் கொண்டு, வேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். சமரசத்தை எட்டுவதற்காக வேளாண் சட்டங்களின் உட்பிரிவுகள் வாரியான பேச்சுவார்த்தையையும் நடத்தலாம் என்று திரு தோமர் கூறினார்.
இன்றைய பேச்சுவார்த்தையில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்திய இரு தரப்பினரும், 2021 ஜனவரி 8 அன்று மீண்டும் சந்திக்க முடிவெடுத்தனர்.
**********************
(வெளியீட்டு அடையாள எண்: 1686091)
வருகையாளர் எண்ணிக்கை : 313