பிரதமர் அலுவலகம்
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையில் மதிப்பு உருவாக்கும் சுழற்சியை வலுப்படுத்த விஞ்ஞானிகளுக்கு பிரதமர் அழைப்பு
அறிவியலின் மதிப்பு உருவாக்கும் சுழற்சியிலிருந்து, உற்பத்திப் பெருக்கத்துக்கு செல்வது, தற்சார்பு இந்தியாவுக்கு முக்கியம் : பிரதமர்
Posted On:
04 JAN 2021 2:07PM by PIB Chennai
உற்பத்திப் பெருக்கத்துக்கு அறிவியலின் மதிப்பு உருவாக்கும் சுழற்சியை ஊக்குவிக்கும்படி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் இன்று அழைப்பு விடுத்தார்.
தேசிய அளவீட்டியல் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தேசிய அணு கால அளவுகோல், தேசிய நிர்தேஷக் திரவிய பிரணாலி ஆகியவற்றை நாட்டுக்கு அவர் அர்பணித்தார். மேலும், தேசிய சுற்றுச்சூழல் தரநிலை ஆய்வகத்துக்கும் காணொலி காட்சி மூலம் அவர் இன்று அடிக்கல் நாட்டினார்.
வரலாற்று ரீதியாக, எந்தவொரு நாடும் அறிவியலை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளுடன் நேரடித் தொடர்பில் முன்னேறியுள்ளது என பிரதமர் குறிப்பிட்டார். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையின் மதிப்பு உருவாக்கும் சுழற்சியை அவர் குறிப்பிட்டார். இது குறித்து விவரித்த பிரதமர், ‘ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது என்றும் அந்த தொழில்நுட்பம், தொழில்துறை வளர்ச்சிக்கு உதவுகிறது என்றும் கூறினார். பதிலுக்கு, தொழில்துறை, அறிவியலில் புதிய ஆராய்ச்சிக்கு மேலும் முதலீடு செய்கிறது. இந்த சுழற்சி நம்மை புதிய சாத்தியங்களின் திசையில் தொடர்ந்து கொண்டு செல்கிறது. அறிவியல் மற்றும் தொழில்வளர்ச்சி கவுன்சில்(சிஎஸ்ஐஆர்) - தேசிய இயற்பியல் ஆய்வு மையம்(என்பிஎல்) ஆகியவை இந்த மதிப்பு சுழற்சியை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றியுள்ளது என பிரதமர் கூறினார்.
தற்சார்பு இந்தியா இலக்கை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் போது, மதிப்பு உருவாக்கும் சுழற்சியிலிருந்து, உற்பத்தி பெருக்கத்துக்கு செல்வது இன்றைய உலகில் மிக முக்கியமாக உள்ளது என திரு நரேந்திர மோடி கூறினார்.
சிஎஸ்ஐஆர் - என்பிஎல்-ன் தேசிய அணு கால அளவுகோலை மனிதகுலத்துக்கு இன்று அர்ப்பணித்தது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். நானோ விநாடிக்குள் நேரத்தை அளவிடுவதில் இந்தியா தற்சார்பு அடைந்துள்ளது என்று அவர் கூறினார். 2.8 நானோ வினாடிக்குள், துல்லிய நிலையை அடைவது மிகப் பெரிய திறமை. இப்போது இந்திய நிலையான நேரம், சர்வதேச நிலையான நேரத்துடன் 3 நானோ வினாடிக்கும் குறைவான துல்லியத்துடன் பொருந்துகிறது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் பணிபுரியும் இஸ்ரோ போன்ற அமைப்புகளுக்கு இது பெரிய உதவியாக இருக்கும். இந்த சாதனையால் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, சுகாதாரம், தொலைத் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் இது போன்ற துறைகள் தொடர்பான நவீன தொழில்நுட்பங்கள் பெரிதும் பயனடையும்.
தொழில்துறை 4.0-வில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்துவதில் கால அளவுகோலின் பங்கு குறித்தும் பிரதமர் விவரித்தார். சுற்றுச்சூழல் துறையில், இந்திய முன்னணி நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும், காற்றின் தூய்மையையும், மாசையும் அளவிடும் தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களுக்கு இந்தியா, பிறரைச் சார்ந்துள்ளது. இந்த அணு கால அளவு கோல் சாதனை, சுற்றுச்சூழல் துறையில் இந்தியாவை தற்சார்புடையதாக்க வழிவகுக்கும் மற்றும் அதிக திறன் வாய்ந்த மற்றும் விலை குறைவான மாசுகட்டுப்பாடு உபகரணங்களை உருவாக்கவும் வழிவகுக்கும். காற்றின் தரம், மாசு தொழில்நுட்பம் தொடர்பான உலகளாவிய சந்தையில், இந்தியாவின் பங்கை இந்த சாதனை உயர்த்தும். நமது விஞ்ஞானிகளின் தொடர் முயற்சிகளால், நாம் இந்த சாதனையை படைத்தோம்.
******************
(Release ID: 1686014)
Visitor Counter : 340
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam