வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியா- வங்கதேசம் இடையே வர்த்தகரீதியான முழு ஒத்துழைப்பை இந்தியா வழங்கும்: அமைச்சர் திரு பியூஷ் கோயல் உறுதி

Posted On: 22 DEC 2020 4:56PM by PIB Chennai

இந்தியா வங்கதேசம் நாடுகளுக்கு இடையே வர்த்தகரீதியான முழு ஒத்துழைப்பை இந்தியா அந்நாட்டிற்கு வழங்கும் என்று மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல் உறுதிபட தெரிவித்துள்ளார். வேளாண் துறை குறித்த இந்தியா- வங்கதேசம் டிஜிட்டல் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், வேளாண் ஏற்றுமதி உள்ளிட்ட ஏராளமான பொருட்களுக்கு தீர்வைற்ற சந்தையை இந்தியா வங்கதேசத்திற்கு வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

இந்தியா, வங்கதேச நாடுகள் இணக்கமான நட்பை கடைப்பிடித்து வருவதாக அவர் கூறினார். “கடந்த ஆறு வருடங்களில் நம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்பட்டிருக்கிறது. பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் இணைப்புத் திட்டங்களை செயல்படுத்தியிருப்பதுடன், நமது வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்பையும் நாம் வலுப்படுத்தியுள்ளோம்”, என்று அமைச்சர் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் வங்கதேச பிரதமர் திருமிகு ஷேக் ஹசீனா இருவரும் வர்த்தகம் சார்ந்த கொள்கைகளில் கவனம் செலுத்துவதால் இரு நாடுகளிலும் ஆளுகை மேன்மை அடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார். இரு நாட்டுத் தலைவர்களும் மக்களின் வாழ்வை செம்மைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

இரு நாடுகளிலும் 50 சதவீதத்திற்கும் மேலான மக்கள் வேளாண் துறையில் ஈடுபட்டு வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர் திரு பியூஷ் கோயல், “உணவுத் துறையில் வங்கதேசம் தன்னிறைவு அடைந்திருப்பதும், அடுத்த கட்டமாக வேளாண் துறையை நவீனமயமாக்கவிருப்பதும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பிட்ட இந்தத் துறையில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். இரு நாடுகளிலும் வேளாண் துறை பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. வேளாண்துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் வாயிலாக தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகரமாக நாம் எதிர்கொள்ள முடியும்என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682698

------



(Release ID: 1682728) Visitor Counter : 154