குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஊடகத்துறை சவால்களை எதிர்கொள்ள சுயதிருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் உரை

Posted On: 18 DEC 2020 2:31PM by PIB Chennai

‘‘ஊடகங்கள் நெருக்கடியில் உள்ளன எனவும், இடையூறு ஏற்படுத்தும் சவால்களையும், நிச்சயமற்ற எதிர்காலத்தையும் எதிர்கொள்ள சுயமான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

‘‘இதழியல்: கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்’’  என்ற தலைப்பில் எம்.பி.காமத் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி ஐதராபாத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இன்று நடந்தது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு கலந்து கொண்டு  பேசியதாவது:

பத்திரிகை சுதந்திரம், தணிக்கை, செய்தி வெளியாகும் விதிமுறைகள், பத்திரிக்கையாளர்களின் சமூகப்பொறுப்பு, மஞ்சள் பத்திரிகை, பொய்ச் செய்திகள், பணத்துக்காக செய்தி வெளியிடுதல் ஊடகத்தின் எதிர்காலம் மற்றும் சவால்கள் ஆகியவை தொடர்பான பிரச்சினைகள் கவலையளிக்க கூடிய விஷயங்களாக உள்ளன.

மஞ்சள் பத்திரிக்கை, உண்மைகளை மறைத்து, கவர்ச்சிகரமான தலைப்புகள் மூலம் தவறான தகவல்களை ஊக்குவிக்கின்றன. வாசகர்களையும், நேயர்களையும் அதிகரிக்கும் நோக்கில் தவறான தகவல்களை கவர்ச்சிகரமாக வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும். இணையதளத்தால் அதிகரிக்கும் உடனடி செய்திகள், சமூக இணையதளங்கள் பொய்ச் செய்திகளைப் பரப்புதல், பத்திரிக்கை நெறிமுறைகள் ஆகியவை அழிந்து வருவது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. தகவல் கண்காணிப்பாளராக தொழில்நுட்ப ஜாம்பவான்களும், செய்திகளின் முக்கிய விநியோகஸ்தராக இணையதளங்களும் உருவாகி வருகின்றன. பத்திரிக்கை போன்ற பாரம்பரிய அச்சு ஊடகங்களின் வருவாய் தொழில்நுட்ப ஜாம்பவான்களால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சம்பந்தப்பட்டவர்களுடன் வருவாயையும் அவர்கள் பகிர்ந்து கொள்வதில்லை. அச்சு ஊடகங்களின் செய்திகள் சமூக இணையதளங்களால் கடத்தப்படுகின்றன. இது நியாயமற்றது. பத்திரிக்கைகளின் வருமானம் மற்றும் செய்தி முறையிலும் இணையதளம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அச்சு ஊடகங்களின் செய்திகளைப் பயன்படுத்தும் சமூக ஊடகங்கள் வருவாயைப் பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கைகள் சில நாடுகளில் உள்ளன. நம்நாட்டிலும் இதே போன்ற நடைமுறையைப் பின்பற்றி, அச்சு ஊடகங்களுடன் வருவாயைப் பகிர்ந்து கொள்ளும் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும்.

மக்களுக்குத் தகவல்களை பரப்பி அவர்களை மேம்படுத்துவதில் பத்திரிக்கைகள் 18ஆம் நூற்றாண்டிலிருந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 20ஆம் நூற்றாண்டில் ரேடியோ, டி.வி.க்கள் வந்த பின்பும், தற்போது இணையதள யுகத்திலும் கோடிக்கணக்கானோர், காபி மற்றும் செய்தித்தாளுடன் கண் விழிக்கவே விரும்புகின்றனர்அவர்களில்  நானும் ஒருவன், ஆனால் காபி இல்லாமல்.

பத்திரிக்கை சுதந்திரம் என்பது, கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்துவது அல்ல. அது குழப்பத்தை ஏற்படுத்தும்.

ஊடகங்கள் பச்சோந்தி போல செயல்பட வேண்டும் என நான் கூற வில்லை. பகுப்பாய்வு செய்து, செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்கள் தரத்தைப் பின்பற்ற வேண்டும். நடக்கும் மாற்றங்கள், பத்திரிக்கைகளின் நீண்ட கால நிலைப்பாட்டிற்கு முரண்பாடாக இருப்பதால், அந்த மாற்றத்தை ஊடகங்கள் இழிவுபடுத்துவதாக மக்கள் பார்க்கக் கூடாது.

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக என்ன மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அவை அரசியலமைப்புக்கு உட்பட்டே நடக்கின்றன. இதை சுருக்கமாக நினைவுபடுத்த வேண்டும் என்றால், சுதந்திரத்துக்குப்பின் 35 ஆண்டுகளுக்கு, அரசியல் நிலைத்தன்மை இருந்தது. அதன் பின் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. பின் மீண்டும் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டது. இந்த மாற்றங்கள் காலப்போக்கில் மக்களின் உணர்வுகள், முன்னோக்குகள் மற்றும் நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இணையாக இயங்கின. இந்த மாற்றம் அவ்வப்போது பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தோன்றிய விதத்தில் நிறுவப்பட்டது. இந்த மாற்றத்தை ஏற்க மறுப்பதாக, ஊடகங்கள் பார்க்கப்படக் கூடாது.

நாட்டை மேம்படுத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இது ஆர்வத்துடன் கூட்டாகத் தொடரப்பட வேண்டும். இது போன்ற ஒரு முயற்சி, தேசியவாதம் மற்றும் தேசியவாத உணர்வு ஆகியவற்றின் வலுவான உணர்வை ஏற்படுத்தி அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைக்கும். இல்லாத பிளவுபடுத்தும் விஷயங்களைக்  காரணம் கூறி, இந்த உணர்வை பலவீனப்படுத்துவது சரியானதல்ல. ஒவ்வொரு சம்பவத்தையும் பிரச்சினையையும் பிளவுபடுத்தும் கண்ணோட்டத்தில் முன்வைப்பதுவலுவான, வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் முயற்சிக்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.

இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681704

******

 

(Release ID: 1681704)



(Release ID: 1681743) Visitor Counter : 558