சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
சுங்கச்சாவடிகளில் விரைவில் ஜிபிஎஸ் மூலம் கட்டணம் வசூலிக்கும் தொழில்நுட்பம்: அமைச்சர் திரு. நிதின் கட்கரி
Posted On:
17 DEC 2020 4:50PM by PIB Chennai
நாடு முழுவதும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக சுங்கச்சாவடிகளில் ஜிபிஎஸ் அடிப்படையிலான தொழில்நுட்பப் பயன்பாட்டை அரசு இறுதி செய்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை; சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுங்கச்சாவடி இல்லாத இந்தியா உருவாகும் என்று அவர் தெரிவித்தார்.
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பின் (அசோசாம்) நிறுவன வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தேசிய உள்கட்டமைப்பின் பங்கு என்ற தலைப்பில் பேசிய திரு. நிதின் கட்கரி இதனைத் தெரிவித்தார்.
வாகனங்களின் இயக்கத்தைப் பொறுத்து சுங்கக்கட்டணம் வாகன ஓட்டிகளின் வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்ளப்படும் என்று அவர் கூறினார். தற்போது அனைத்து வணிக ரீதியான வாகனங்களிலும் கண்காணிப்புத் தொழில்நுட்பம் பொருத்தப் படுவதாக குறிப்பிட்ட அவர், பழைய வாகனங்களிலும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை அரசு பொருத்தும் என்று தெரிவித்தார்.
வரும் மார்ச் மாதத்திற்குள் சுங்கச்சாவடிகளின் மூலம் ரூ.34,000 கோடி கிடைக்கும் என்று தெரிவித்த திரு நிதின் கட்கரி, சுங்கக் கட்டணத்தை வசூலிக்க ஜிபிஎஸ் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதன் வாயிலாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1,34,000 கோடி கிடைக்கும் என்றார்.
வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், ஏழ்மையை நீக்கவும் தொழில் வளர்ச்சி மிகவும் அவசியம் என்று வலியுறுத்திய அமைச்சர், உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பொதுத்துறை, தனியார் துறை முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும், தேவையான உதவிகளை அரசு வழங்கும் என்றும் உறுதி அளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681442
**********************
(Release ID: 1681523)
Visitor Counter : 257