குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

பருவநிலை மாற்றத்தைத் தாங்கக் கூடிய, லாபகரமான, நீடித்த பயன்தரக் கூடிய விவசாய முறைகளை உருவாக்க குடியரசு துணைத் தலைவர் அழைப்பு


வறட்சி, வெள்ளம், நோய்களை தாங்கும் பயிர்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார்

Posted On: 17 DEC 2020 5:58PM by PIB Chennai

பருவநிலை மாற்றத்தைத் தாங்கக் கூடிய, லாபகரமான, நீடித்த பயன்தரக் கூடிய விவசாய முறைகளை உருவாக்க குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு இன்று அழைப்பு விடுத்தார். அதே சமயத்தில் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதையும், பல மில்லியன் பேருக்கு உணவு மற்றும் சத்துகள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 41வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர், பருவநிலை மாறுதலை தாக்குபிடிக்கக் கூடிய பயிர் ரகங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வறட்சி, வெள்ளம், வெப்பம், உப்புத்தன்மை, பூச்சிகள், நோய்களைத் தாங்கும் வகையில் அவை இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைப்பு செய்து கொள்ளும் பயிர்களை உருவாக்கினால் தான், இந்திய வேளாண்மையின் தாக்குபிடிக்கும் திறன் அதிகரித்து, நீடித்த வளர்ச்சி பெறுவதாக இருக்கும் என்றார் அவர்.

வேளாண்மை மற்றும் உணவு துறையில் வரும் தசாப்தங்களில் பருவநிலை மாறுதலால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை விடுத்த திரு. நாயுடு, சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சூழலைக் குறைக்கும் வகையிலான தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிலத்தடி நீர்மட்டம் குறைவது, நீர்நிலைகளில் மாசு அதிகரித்தல் ஆகியவற்றால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி கவலை தெரிவித்த அவர், பருவநிலை மாற்றத்தை தாங்கக் கூடிய, வறட்சியைத் தாங்கக் கூடிய மரபணு மாற்றம் செய்த பயிர்களும், தண்ணீரை சேமிக்கும் தொழில்நுட்பங்களும் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

வேளாண்மைத் துறை முக்கியமானது மட்டுமின்றி, புனிதமானதாகவும் உள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார். விவசாயம் தான் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது என்று கூறிய அவர், நமது கலாச்சாரம், நாகரிகத்தில் பிணைந்த அம்சமாக விவசாயம் இருக்கிறது என்று குறிப்பிட்டார். ``நமது மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர்  தங்கள் வாழ்வாதாரத்துக்கு இன்னும் விவசாயத்தை தான் சார்ந்திருக்கிறார்கள்'' என்று அவர் கூறினார்.

``விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க, நாம் உற்பத்தியைப் பெருக்கவும், வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தவும், சாகுபடி எண்ணிக்கையை அதிகரிக்கவும், உயர் மதிப்பு பயிர்கள் சாகுபடி செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்'' என்று குடியரசு துணைத் தலைவர் யோசனை தெரிவித்தார். விவசாயிகளுக்கு லாபகரமான விலைகள் கிடைப்பதை தொடர்புடைய துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்நல்ல சேமிப்பு மற்றும் பதப்படுத்தல் வசதிகள் செய்து தருதல், இடுபொருள்கள் கிடைக்கச் செய்தல், கடன் வசதி அளித்தல், சந்தைப்படுத்தலுக்கு நல்ல ஏற்பாடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் தான் இது சாத்தியம் என்றார் அவர்.

பெருந்தொற்று காலத்தில் இணையற்ற, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய செயல்பாடுகளுக்காக விவசாயிகளைப் புகழ்ந்த திரு. நாயுடு, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட சவால்களையும் மீறி விவசாயத் துறைதான் சிறப்பாக செயல்பட்டது என்று கூறினார். காரிப் பருவத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு விளைச்சல் பரப்பு 59 லட்சம் ஹெக்டர் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். முடக்கநிலை காலத்திலும் விதைகள், உரங்கள், கடன் வசதி ஆகியவை உரிய காலத்தில் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ததே இதற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

சமீப ஆண்டுகளில் வேளாண்மைத் துறைக்குப் புத்துயிரூட்ட அரசு ஏராளமான நடவடிக்கைகள் எடுத்து வருவதாகத் தெரிவித்த அவர், கொள்கை மாற்றங்கள் நிகழ்ந்து, விவசாயியின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் இப்போது கவனம் செலுத்தப்படுவதாகக் கூறினார். பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தை அமல் செய்ததால், இந்திய விவசாயிகளில் 72 சதவீதம் பேர் பயன்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

CRISPR-Cas9 மரபணு மாற்றுதல் போன்ற புதிய தொழில்நுட்பங்களின் பயன்களைக் குறிப்பிட்ட திரு. நாயுடு, தேவைகளுக்கு ஏற்ப இயந்திரங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறினார். ``மேம்படுத்தப்பட்ட கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தி 30 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும், சாகுபடி செலவு 20 சதவீதம் வரை குறையும்'' என்றார் அவர்.

நீர் மேலாண்மை, வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறைகளில் தமிழகத்தின் செயல்பாடுகளுக்குப் பாராட்டு தெரிவித்த குடியரசு துணைத் தலைவர், உற்பத்தியை அதிகரிப்பதற்கு புதிய உயர் விளைச்சல் ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாகக் கூறினார்.

தமிழ்நாடு வேளாண்மைக் கழகத்தில் பட்டம் பெற்றுச் செல்பவர்கள், தொழில்நுட்பம் சார்ந்த நீடித்த பயன்தரக் கூடிய வேளாண்மை மேம்பாட்டை உருவாக்கி, விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார். நாட்டின் பல மில்லியன் பேருக்கு உணவு, சத்து ஆகியவை போதிய அளவுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ``உங்களுடைய ஆராய்ச்சி சமூகத்தின் தேவைகளுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும். பருவநிலை மாறுதல், ஆரோக்கிய பிரச்சினைகள் என மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக இருக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.

மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் என். குமார் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

******



(Release ID: 1681484) Visitor Counter : 131