குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

புதுமையிலும், பாரம்பரியத்திலும் சிறந்து விளங்கும் சென்னை, கர்நாடக இசையின் தலைநகரம்: குடியரசு துணைத் தலைவர்

Posted On: 15 DEC 2020 6:30PM by PIB Chennai

இந்தியாவின் மென்சக்தி திறனை பயன்படுத்தி அதன் உலகளாவிய வீச்சை விரிவாக்க வேண்டும் என்று கலைஞர்களை குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று கேட்டுக் கொண்டார். இணைய வெளியின் வாய்ப்புகளை முழுவதுமாக பயன்படுத்தி தங்களது பார்வையாளர்களை சென்றடையுமாறும் கலைஞர்களை அவர் வலியுறுத்தினார்.

யுவர்ஸ் ட்ரூலி மார்கழி திருவிழாவை ஹைதராபாத்தில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைத்த குடியரசு துணைத் தலைவர், இந்தியாவில் இசை மற்றும் நடனத்தின் சிறப்பான பாரம்பரியத்தைப் பற்றி எடுத்துரைத்ததோடு, தற்போதைய கடினமான காலங்களில் அவற்றுக்கு புத்துயிர் அளிப்பது குறித்தும் பேசினார்.

சென்னையின் புகழ்பெற்ற டிசம்பர் இசை மற்றும் நடனத் திருவிழா பாரம்பரியத்தை இணையத்தின் மூலம் உயிர்ப்புடன் வைப்பதே ‘யுவர்ஸ் ட்ரூலி மார்கழி திருவிழா’வின் நோக்கமாகும்.

மென்சக்தி குறித்து பேசிய குடியரசு துணைத் தலைவர், இசை மற்றும் நடனத்தின் மூலம் அகிம்சை, அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை, ‘வசுதேவ குடும்பகம்’ என்னும் இந்திய தத்துவத்தை சார்ந்து உலகம் முழுக்க பரப்பலாம் என்று கூறினார்.

 

சென்னையுடனான தனது நீண்டகால தொடர்பு குறித்து பேசிய அவர், கர்நாடக இசையின் தலைநகரம் சென்னை என்றார். புதுமையிலும், பாரம்பரியத்திலும் சிறந்து விளங்கும் தனித்துவமான மாநகரமாக சென்னை திகழ்வதாக அவர் புகழாரம் சூட்டினார்.

பெருந்தொற்றின் போது கலைஞர்களும் பாதிக்கப்பட்டதாகக் கூறிய திரு நாயுடு, ‘யுவர்ஸ் ட்ரூலி மார்கழி திருவிழா’ போன்ற முன்னெடுப்புகள் மூலம் அவர்கள் பார்வையாளர்களை உலகம் முழுக்க சென்றடையலாம் என்றார்.

கொவிட் போன்ற காலகட்டத்தில் இந்திய இசை மற்றும் நடனத்துக்கான முக்கியத்துவம் அதிகரித்திருப்பதாகவும், சிவபெருமானின் அம்சமான நடராஜர் பிரபஞ்சத்தின் நடனக் கலைஞராக விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.

நடனம், நாடகம் மற்றும் இசை ஆகியவை இந்தியா உலகத்துக்கு வழங்கிய கொடை என்று திரு நாயுடு கூறினார். இசை மற்றும் நடனத்தை பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக ஆக்க வேண்டுமென்றும், புதிய கல்வி கொள்கை இது தொடர்பான முக்கிய முன்னேற்றம் என்றும் அவர் கூறினார்.

பாரம்பரிய கலை வடிவங்கள் குழந்தைகளிடையே ஒழுக்கம், கவனம், நம்பிக்கை, பொறுமை போன்றவற்றை வளர்ப்பதாகக் கூறிய குடியரசு துணைத் தலைவர், இதர நாடுகளின் கலாச்சாரங்களை குறித்து தெரிந்து கொள்ளும் அதே சமயத்தில், நமது நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றோடு ஒன்றி இருக்க வேண்டும் என்று இளைஞர்களை கேட்டுக் கொண்டார்.

தொழிலதிபரும் புரவலருமான திரு நல்லி குப்புசாமி செட்டி, நகர சபாக்கள் கூட்டமைப்பின் தலைவர் திரு எம் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர்கள் திரு கே ஹரிசங்கர் மற்றும் திரு எஸ் ரவிச்சந்திரன், பொருளாளர் திரு ஆர் சுந்தர் மற்றும் கலாகேந்திரா நிறுவனர் திரு கே எஸ் சுதாகர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், 500 கலைஞர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680838



(Release ID: 1680857) Visitor Counter : 149