சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உயர்தரமான மருத்துவ கல்வியை வழங்குவதற்கு அரசு முன்னுரிமை: டாக்டர் ஹர்ஷ் வர்தன்
Posted On:
12 DEC 2020 12:46PM by PIB Chennai
“பட்டம் பெறும் மருத்துவர்கள் மற்றும் வல்லுனர்களின் தரம், நாட்டின் வருங்கால மருத்துவ தரத்தை நிர்ணயம் செய்யும். உயர்தரமான மருத்துவ கல்வியை வழங்குவதற்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்கிறது”, என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.
லேடி ஹார்டிங் மருத்துவ கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் காணொலி வாயிலாக இன்று கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
சுகாதார சேவையில் மருத்துவக்கல்வி ஒரு முக்கிய அங்கம் வகிப்பதாக அவர் குறிப்பிட்டார். மாணவர்கள் கற்றுக் கொள்வதை நிறுத்தக்கூடாது என்றும், தொடர்ந்து கற்றுக் கொண்டு தங்களது அறிவையும் திறனையும் அவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். அதேவேளையில் நோயாளிகளை குணப்படுத்தும் போது அவர்கள் மீது இரக்கம் காட்டுவதும் முக்கியம் என்று அவர் கூறினார்.
வரலாற்று சிறப்புமிக்க லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் சின்னமாக திகழ்வதாகவும், இங்கு பயின்றவர்கள் இந்தியா மட்டுமல்லாது உலகளவில் மருத்துவத் துறையில் சாதனை புரிந்து வருவதாகவும் கூறினார்.
கொவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தக் கல்லூரியின் பங்களிப்பை அமைச்சர் வெகுவாகப் பாராட்டினார். தில்லியில் முதன்முறையாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்ட அரசு நிறுவனங்களுள் இந்த கல்லூரியும் ஒன்று என்று அவர் குறிப்பிட்டார். நோயின் பரவல் அதிகரித்து சிகிச்சை முறைகளில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, இந்தக் கல்லூரியில் பிளாஸ்மா தெரப்பி சோதனையும் செய்யப்பட்டதாக அவர் கூறினார். இந்த கல்லூரியின் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு கட்டமைப்புப பணிகளில் அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று அவர் உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே, செயலாளர் திரு ராஜேஷ் பூஷன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680191
-----
(Release ID: 1680294)
Visitor Counter : 138