பிரதமர் அலுவலகம்
சர்வதேச பாரதியார் திருவிழா 2020-ல் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
11 DEC 2020 5:32PM by PIB Chennai
முதல்வர் திரு. பழனிசாமி அவர்களே,
அமைச்சர் திரு. கே. பாண்டியராஜன் அவர்களே,
வானவில் கலாச்சார மைய நிறுவனர் திரு. கே. ரவி அவர்களே,
மதிப்புக்குரிய பங்கேற்பாளர்களே,
நண்பர்களே!
வணக்கம்!
நமஸ்காரம்!
மகாகவி பாரதியாருக்கு அவருடைய பிறந்த நாளில் நான் மரியாதை செலுத்தி தொடங்குகிறேன். இதுபோன்ற சிறப்புமிக்க ஒரு நாளில், சர்வதேச பாரதி திருவிழாவில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டுக்கான பாரதி விருதை, பாரதியாரின் படைப்புகள் குறித்த ஆராய்ச்சிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட அறிஞர் திரு சீனி விஸ்வநாதன் அவர்களுக்கு அளிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 86 வயதிலும் முனைப்புடன் ஆய்வு மேற்கொண்டதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். சுப்பிரமணிய பாரதியாரை எப்படி விவரிப்பது என்பது மிகவும் கடினமான கேள்வி. பாரதியாரை எந்தவொரு தனிப்பட்ட தொழில் அல்லது பரிமாணத்திற்குள் அடக்கிவிட முடியாது. அவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி, சுதந்திரப் போராட்ட வீரர், மனிதாபிமானி இன்னும் நிறைய வகையில் குறிப்பிடலாம்.
அவருடைய படைப்புகள், கவிதைகள், தத்துவங்கள் மற்றும் அவரது வாழ்வைப் பார்த்து நாம் ஆச்சரியப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் நான் பிரதிநிதியாக இருப்பதில் கௌரவம் கொண்டிருக்கும் வாரணாசியுடனும், அவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்துள்ளது. அவருடைய படைப்புகளைத் தொகுத்து 16 தொகுப்புகளாக வெளியிட்டிருப்பதை சமீபத்தில் நான் பார்த்தேன். 39 ஆண்டுகள் என்ற குறுகிய வாழ்நாளில் அவர் நிறைய எழுதி இருக்கிறார். நிறைய பணியாற்றி இருக்கிறார். மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நமக்கு வழிகாட்டுவதாக அவருடைய எழுத்துகள் உள்ளன.
நண்பர்களே,
சுப்பிரமணிய பாரதியாரிடம் இருந்து இன்றைய இளைஞர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. மிக முக்கியமாக தைரியமாக இருக்க வேண்டும். சுப்பிரமணிய பாரதியாருக்கு அச்சம் என்றால் என்னவென்றே தெரியாது. அவர் பின்வருமாறு கூறியுள்ளார்:
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
அதாவது, எனக்கு அச்சம் கிடையாது, அச்சமே கிடையாது, ஒட்டுமொத்த உலகமே எதிர்த்து நின்றாலும் அச்சம் கிடையாது என்று கூறியுள்ளார். இந்த உத்வேகத்தை இளம் இந்தியாவில் இன்றைக்கு நான் காண்கிறேன். புதுமை சிந்தனை படைப்பு மற்றும் சிறப்பான செயல்பாட்டில் முன்னணியில் இருக்கும் இளைஞர்களிடம் இந்த உத்வேகத்தை நான் காண்கிறேன். இந்தியாவின் ஸ்டார்ட்அப் முயற்சிகளில், அச்சம் இல்லாத இளைஞர்கள், மனிதகுலத்திற்கு புதிதாக எதையாவது தர வேண்டும் என்ற உத்வேகம் உள்ளது. `என்னால் முடியும்' என்ற இந்த உத்வேகம் தேசத்துக்கும், உலகிற்கும் அற்புதங்களைக் கொண்டு வரும்.
நண்பர்களே,
பழங்கால மற்றும் நவீன காலத்தின் ஆரோக்கியமான கலவை தேவை என்பதில் பாரதியார் நம்பிக்கை கொண்டிருந்தார். நமது வேர்களுடன் தொடர்பில் இருக்கும் அதே நேரத்தில், எதிர்காலத்தை நோக்கி முன்னேறும் வகையிலும் இருப்பதே அறிவார்ந்த செயல்பாடு என்று அவர் கருதினார். தமிழ் மொழியையும், தாய்நாடான இந்தியாவையும் தன் இரு கண்களாக அவர் பாவித்தார். பழங்கால இந்தியா பற்றி, வேதங்கள் மற்றும் உபநிஷத்கள், நமது கலாச்சாரம், பாரம்பரியம், ஒளிமயமான கடந்த காலத்தின் சிறப்புகள் பற்றி அவர் பாடல்கள் இயற்றியுள்ளார். ஆனால் அதே சமயத்தில், கடந்தகால பெருமைகளுடன் வாழ்வது மட்டுமே போதுமானதாக இருக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார். அறிவியல் சிந்தனையை, விசாரித்து அறியும் உத்வேகத்தை, முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நண்பர்களே,
மகாகவி பாரதியாரின் வளர்ச்சிக்கான வரையறையில், பெண்களின் பங்களிப்பு தான் மையமானதாக இருந்தது. பெண்கள் சுதந்திரமாக, அதிகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான தொலைநோக்கு சிந்தனையாக இருந்தது. பெண்கள் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும், மக்களை நேருக்கு நேராக கண்களைப் பார்த்து நடக்க வேண்டும் என்று மகாகவி பாரதியார் எழுதியுள்ளார். இந்த தொலைநோக்கு சிந்தனையின் ஊக்கத்தை நாம் எடுத்துக் கொண்டு, பெண்களால் முன்னெடுக்கப்படும் அதிகாரம் அளிப்பை உறுதி செய்ய நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அரசின் செயல்பாட்டில் ஒவ்வொரு அம்சத்திலும், பெண்களின் கண்ணியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
இன்றைய காலத்தில் 15 கோடிக்கும் அதிகமான பெண் தொழில்முனைவோருக்கு முத்ரா திட்டம் போன்றவை மூலம் கடன் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தலைநிமிர்ந்து, நம்மை நேருக்கு நேராகப் பார்த்து நடக்கிறார்கள், எப்படி தற்சார்பாக மாறலாம் என்று சொல்பவர்களாக இருக்கிறார்கள்.
இன்றைய காலத்தில், நமது ராணுவத்தில் நிரந்தரப் பணிகளில் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தலைநிமிர்ந்து நடந்து, நம் கண்களைப் பார்த்துப் பேசுகிறார்கள். தங்கள் கைகளில் தேசம் பாதுகாப்பாக இருக்கிறது என்று உணர்த்துகிறார்கள். பரம ஏழைகளான பெண்கள், பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் இருந்தவர்கள், 10 கோடிக்கும் மேலான பாதுகாப்பான, சுகாதாரமான கழிப்பறை வசதிகளைப் பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. அவர்கள் தலைநிமிர்ந்து நடக்கலாம், எல்லோரையும் கண்ணைப் பார்த்து பேசலாம், மகாகவி பாரதியார் கற்பனை செய்ததைப் போல அவர்கள் இருக்கலாம். இது புதிய இந்தியாவின் மகளிர் சக்திக்கான காலமாக உள்ளது. அவர்கள் தடைகளைத் தகர்த்து, தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். இதுதான் சுப்பிரமணிய பாரதிக்கு புதிய இந்தியா செலுத்தும் அஞ்சலியாக உள்ளது.
நண்பர்களே,
பிரிந்து கிடக்கும் சமூகத்தால் வெற்றி பெற முடியாது என்பதை மகாகவி பாரதியார் புரிந்து கொண்டிருந்தார். அதே சமயத்தில், சமூக சமத்துவமற்ற நிலையில், சமூகக் கொடுமைகளுக்குத் தீர்வு காணாத நிலையில் அரசியல் சுதந்திரம் பெறுவதால் மட்டும் பயனில்லை என்று அவர் எழுதியுள்ளார். அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்:
இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்
தனியொரு வனுக்குணவிலை யெனில்
ஜகத்தினை யழித்திடுவோம்
அதாவது, இப்போது நாம் ஒரு விதியை உருவாக்கி, அதை எப்போதும் பின்பற்றுவோம். தனியொரு நபர் பட்டினி கிடந்தால், உலகை அழித்திடுவோம் என்பதாகும். ஒவ்வொரு தனிநபருக்கும் அதிகாரம் கிடைப்பதை உறுதி செய்வதாக, ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அவர் வலுவாக நினைவூட்டியுள்ளார். குறிப்பாக ஏழைகள் மற்றும் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
நண்பர்களே,
பாரதியிடம் இருந்து நமது இளைஞர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டில் அனைவரும் அவருடைய படைப்புகளைப் படித்து, அதன் மூலம் உத்வேகம் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாரதியார் பற்றிய தகவல்களைப் பரப்புவதில் வானவில் கலாச்சார மையம் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டுகிறேன். இந்தியாவை புதிய எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்ல உதவக் கூடிய வகையில் இந்த திருவிழாவில் ஆக்கபூர்வமான கலந்தாடல்கள் நடைபெறும் என்று நான் நம்புகிறேன்.
நன்றி.
மிக்க நன்றி
**********************
(Release ID: 1680044)
Visitor Counter : 345
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam