அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020: முன்னோட்ட நிகழ்ச்சிகள், 35 இடங்களில் அறிவியல் யாத்திரைகள்
Posted On:
07 DEC 2020 1:04PM by PIB Chennai
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா -2020ஐப் பிரபலப்படுத்த, நாடு முழுவதும் முன்னோட்ட நிகழ்ச்சிகளும், 35 இடங்களில் அறிவியல் யாத்திரைகளும் நடத்தப்படுகின்றன.
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா (ஐஐஎஸ்எப்) 2020, டிசம்பர் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை காணொலிக் காட்சி மூலம் நடத்தப்படுகிறது. இது மிகப் பெரிய மெய்நிகர் அறிவியல் திருவிழா. இந்தாண்டின் ஐஐஎஸ்எப்-ன் மையப்பொருள் ‘‘தற்சார்பு இந்தியாவுக்கும், உலக நலனுக்குமான அறிவியல்’’. இந்தாண்டு 9 பிரிவுகளில் 41 நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் 5 பிரிவுகளில் நடக்கும் நிகழ்ச்சிகள், கின்னஸ் உலக சாதனைக்கும் அனுப்பப்படுகின்றன.
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா-2020-க்காக நாடு முழுவதும் பல விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அறிவியல் அமைச்சகத்தின் பல துறைகளும், மையங்களும், ஐஐஎஸ்எப்-ஐ விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றன.
அண்மையில், சிஎஸ்ஐஆர்- தேசிய புவிஇயற்பியல் ஆய்வு மையம், ஐதராபாத்தில் முன்னோட்ட நிகழ்ச்சியை நடத்தியது. சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குனர் டாக்டர் சேகர் சி.மாண்டே, இதற்கு தலைமையேற்று உரையாற்றினார். அறிவியலின் மகிழ்ச்சியை ஐஐஎஸ்எப் கொண்டாடுகிறது என்றும், அறிவியல் துறைகளின் நிபுணர்களையும், ஆர்வலர்களையும் இது இணைக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஐதராபாத் இன்காயிஸ் முன்னாள் இயக்குனர் டாக்டர் சதீஷ் செனாய், ஆழ்கடல் ஆராய்ச்சியில் உள்ள சவால்களையும், வாய்ப்புகளையும் குறித்துப் பேசினார்.
இதேபோல், காசியாபாத்தில் உள்ள சிஎஸ்ஐஆர் - மனிதவள மேம்பாட்டு மையம், ஐஐஎஸ்எப்-ன் ஒரு பகுதியாக, ‘‘மக்களுக்கும், புதுமை கண்டுபிடிப்புக்குமான அறிவியல்’’ என்ற தலைப்பில் இணையக் கருத்தரங்கை நடத்தியது.
பிலானியில் உள்ள சிஎஸ்ஐஆர் - மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பொறியியல் ஆய்வு மையம், ராஜஸ்தானின் விஞ்ஞான பாரதி ஆகியவை ஐஐஎஸ்ஆர்- முன்னோட்ட நிகழ்ச்சிகளை நடத்தின. இந்நிகழ்ச்சியில் பொறியியல் மாணவர்களுக்கான போட்டி மற்றும் கண்காட்சி குறித்து ஆலோசிக்கப்பட்டன.
ஐஐஎஸ்எப் நிகழ்ச்சியில் அறிவியல் யாத்திரை முக்கியமான நிகழ்ச்சி. மக்கள் இடையேயும், மாணவர்கள் இடையேயும் அறிவியல் உணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த அறிவியல் யாத்திரையின் நோக்கம். நாடு முழுவதும் 35 முக்கிய இடங்களில் அறிவியல் யாத்திரை நடத்தப்படவுள்ளது. கேரளாவைச் சேர்ந்த சுதேசி அறிவியல் இயக்கம், கொச்சியில் கடந்த 2ம் தேதி காணொலிக் காட்சி மூலம் டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் யாத்திரையை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு அல்போன்ஸ் கண்ணன்தானம், போட்டோனிக்ஸ் மைய பேராசிரியர் திரு நம்பூரி ஆகியோர் உரையாற்றினர்.
புனேவில் உள்ள வெப்பமண்டல வானிலை இந்திய மையமும்(ஐஐடிஎம்) அறிவியல் யாத்திரை நிகழ்ச்சியை, புனேவில் உள்ள விஞ்ஞான பாரதி அமைப்புடன் இணைந்து நடத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678787
*******
(Release ID: 1678787)
(Release ID: 1678821)
Visitor Counter : 243