மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
நெடுஞ்சாலை அமைக்கும் திட்டங்களில் ஐஐடிக்கள், என்ஐடிக்கள், இன்ஜினியரிங் கல்லூரிகள் பங்கேற்பு
Posted On:
03 DEC 2020 3:08PM by PIB Chennai
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து, தன்னார்வ அடிப்படையில் சாலைகள் அமைக்கும் திட்டங்களில் நாடு முழுவதும் உள்ள பல ஐஐடி-க்கள், என்ஐடி-க்கள், பொறியியல் கல்லூரிகள் ஆகியவை பங்கேற்கின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள் தேசிய நெடுஞ்சாலைகளில், அவர்கள் தெரிவிக்கும் தொழில்நுட்ப ஆலோசனை அடிப்படையில் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இந்தச் சாலைகள் அந்தந்த நிறுவனங்களின், நவீன தொழில்நுட்ப ஆய்வுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
பிரதமரின் தொலைநோக்குப்படி, இந்த முயற்சிகள், உயர் கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறையினருக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கும் இடையே, சிவில், நெடுஞ்சாலை பொறியியல் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு ஏற்பட வழிவகுக்கும்.
இந்த நடவடிக்கைகளின் கீழ், நெடுஞ்சாலைத் திட்டங்களில் பங்கேற்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் சாலை மேம்பாட்டுத் திட்டங்களை ஆய்வு செய்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கும்.
சாலை தொழில்நுட்பங்கள் குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஆண்டுக்கு 20 இளநிலை, 20 முதுநிலை மாணவர்களுக்கு உள்ளிருப்புப் பயிற்சியை 2 மாதங்களுக்கு வழங்கவுள்ளது. அப்போது இளநிலை மாணவர்களுக்கு மாதம் ரூ.8,000, முதுநிலை மாணவர்களுக்கு ரூ.15,000 வீதம் உதவித் தொகை வழங்கும்.
நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தை இதுவரை 18 ஐஐடி-க்களும், 26 என்ஐடி-க்களும், 190 பொறியியல் கல்லூரிகளும் தேர்வு செய்துள்ளன. 200 கல்வி நிறுவனங்கள் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. 300க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*****
(Release ID: 1678008)
(Release ID: 1678047)
Visitor Counter : 134