இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

டாப்ஸ் திட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தடகள வீரர்கள் சேர்ப்பு

Posted On: 29 NOV 2020 5:10PM by PIB Chennai

ஒலிம்பிக்கை இலக்காக நிர்ணயித்து விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் டாப்ஸ் திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த திரு ஆரோக்கிய ராஜீவ் உட்பட 8 தடகள வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற 50-வது ஒலிம்பிக் மிஷன் செல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதேபோல் டாப்ஸ் மேம்பாட்டுக் குழுவில் தமிழகத்தின் திருமிகு ஆர் வித்யா, திருமிகு வீரமணி ரேவதி உள்ளிட்ட 7 தடகள வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வீரர்களின் திறன் வெளிப்படுதலை அடிப்படையாகக்கொண்டு அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கு அவர்களின் தகுதியை ஆராய்ந்து டாப்ஸ் திட்டத்தில் அவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் திரு ஆரோக்கிய ராஜீவ் ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். திரு ஷிவ்பால் சிங், திருமிகு அன்னு ராணி, திரு நோவா நிர்மல் டாம், திரு அலெக்ஸ் ஆண்டனி, திருமிகு எம்.ஆர். பூவம்மா, திருமிகு துதி சந்த் ஆகியோரும் டாப்ஸ் திட்டத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல் டாப்ஸ் மேம்பாட்டுக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த திருமிகு வீரமணி ரேவதி, திருமிகு ஆர் வித்யா ஆகியோர் பெண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் திரு ஹர்ஷ் குமார், திரு தேஜஸ்வின் ஷங்கர், திருமிகு ஷைலி சிங், திருமிகு சாந்திரா பாபு மற்றும் திருமிகு ஹர்ஷிதா ஷெராவத் ஆகியோரும் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676992

*******************(Release ID: 1677022) Visitor Counter : 9