பிரதமர் அலுவலகம்
புதுப்பிக்கக் கூடிய எரிசக்தித்துறையில் முதலீடு பற்றிய மூன்றாவது மாநாட்டில் பிரதமரின் உரை
Posted On:
26 NOV 2020 7:20PM by PIB Chennai
மேன்மைமிகு இஸ்ரேலிய பிரதமர் அவர்களே, மேன்மைமிகு நெதர்லாந்து பிரதமர் அவர்களே, உலகெங்கிலுமிருந்து வந்துள்ள மாண்புமிகு அமைச்சர்களே, முதல்வர்களே, துணைநிலை ஆளுநர்களே, சான்றோரே, மேன்மைமிகு நெதர்லாந்து பிரதமர் தம்முடைய செய்தியைப் பகிர்ந்து கொண்டதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுப்பிக்கக் கூடிய எரிசக்தித்துறையில் முதலீடு மூன்றாம் பதிப்பின் ஒரு பகுதியாக உங்களையெல்லாம் இங்கு பார்ப்பது அற்புதமாக உள்ளது. இதற்கு முந்தைய கூட்டங்களில், புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை மெகாவாட்டில் இருந்து ஜிகாவாட்டுகளுக்கு எடுத்துச் செல்லவேண்டிய பயணம் குறித்த நமது திட்டங்கள் பற்றி நாம் பேசியிருக்கிறோம். சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்காக நாம் "ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே கிரிட் என்பது குறித்தும் பேசியிருக்கிறோம். மிகக் குறுகிய காலத்தில், இந்தப் பல திட்டங்கள் உண்மையாகி வருகின்றன.
நண்பர்களே,
கடந்த ஆறு ஆண்டு காலமாக, இந்தியா, ஈடிணையற்ற ஒரு பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தனது முழு ஆற்றலும் வெளிப்படும் வகையில் செயல்படும் வண்ணம் ஒவ்வொருவருக்கும் மின்சார வசதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக எங்களது உற்பத்தித்திறனையும், இணைப்பு வசதிகளையும் நாங்கள் விரிவுபடுத்தி வருகிறோம். அதேநேரம் புதுப்பிக்கக்கூடிய ஆதாரங்கள் மூலமாக எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதிலும் நாங்கள் துரித வளர்ச்சி கண்டு வருகிறோம். உங்களுக்கு சில விவரங்களை அளிக்க விரும்புகிறேன்.
இன்று இந்தியாவின் புதுப்பிக்கக்கூடிய மின் திறன் உலகிலேயே நான்காவது பெரிய நாடு என்ற இடத்தில் உள்ளது. அனைத்து பெரிய நாடுகளிடையே ஒப்பிடுகையில் அது மிகத் துரிதமாக வளர்ந்து வருகிறது. புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் திறன், தற்போது இந்தியாவில் 136 ஜிகாவாட்டாக உள்ளது. இது மொத்த திறனில் சுமார் 36% ஆகும். 2022 ஆம் ஆண்டுக்குள், புதுப்பிக்கக்கூடிய திறனின் பங்கு 220 ஜிகாவாட்டுக்கும் கூடுதலாக அதிகரிக்கும்.
2017 ஆம் ஆண்டு முதல் நிலக்கரி அடிப்படையிலான அனல்மின் சக்தியின் ஆண்டு உற்பத்தியைக் காட்டிலும், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி திறன் அதிகமாக உள்ளது என்பதை அறிவதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். கடந்த ஆறு ஆண்டுகளில் நிறுவப்பட்ட, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி திறன் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் நிறுவப்பட்ட சூரிய எரிசக்தி திறன் 13 மடங்கு அதிகரித்துள்ளது.
நண்பர்களே,
பருவ நிலை மாற்றத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக உள்ளோம். புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது, இதன் வெளிப்பாடேயாகும். இயலாததாக இருந்தபோதிலும் நாங்கள் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறையில் முதலீடு செய்தோம். எங்கள் முதலீட்டின் காரணமாக தற்போது செலவினங்கள் குறைந்து வருகின்றன. சிறந்த சுற்றுச்சூழல் கொள்கைகள், சிறந்த பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும் என்பதை நாங்கள் உலகிற்கு காண்பித்து வருகிறோம். 2 டிகிரி எட்டப்பட வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கான பாதையில் செல்லும் வெகுசில நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.
நண்பர்களே,
நாங்கள் எரிசக்திக்கான தூய்மையான ஆதாரங்களுக்கு மாறி வருகிறோம். அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் இருப்பது, திறன், பரிணாம வளர்ச்சி ஆகிய அணுகுமுறையின் காரணமாகவே இது சாத்தியமாயிற்று. மின்சார வசதி கிடைக்கச் செய்வது பற்றி நான் பேசுகையில், எண்ணிக்கையில் அதன் அளவு குறித்து நீங்கள் மதிப்பிட்டுக் கொள்ளலாம். கடந்த சில ஆண்டுகளில் இரண்டரை கோடி அல்லது 25 மில்லியன் இல்லங்களுக்கு மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எரிசக்தித் திறன் குறித்து நான் பேசுகையில் நாங்கள் இந்த இயக்கத்தை ஒரே ஒரு அமைச்சகம் அல்லது ஒரே ஒரு துறைக்கு உட்பட்டதாக்கவில்லை. இது ஒட்டுமொத்த அரசாங்கத்தின் இலக்காக வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். எங்களுடைய அனைத்து கொள்கைகளும் எரிசக்தித் திறனை அடைவதற்கும் வகை செய்திருந்தன. எல் இ டி பல்புகள், எல் இ டி தெருவிளக்குகள், ஸ்மார்ட் மீட்டர்கள், மின்சார வாகனங்களுக்கு ஊக்கமளித்தல், மின் பரிமாற்ற இழப்புகளைக் குறைத்தல் போன்றவை உட்பட பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கும். பரிமாண வளர்ச்சி குறித்து நான் பேசுகையில், வயல்களுக்கு சூரிய சக்தி அடிப்படையிலான நீர்ப்பாசன வசதி அளிப்பதன் மூலம், பிரதமர் குசும் திட்டம் மூலம் எங்கள் விவசாயத் துறைக்கு அதிக சக்தி அளிப்பதே எங்கள் நோக்கம்.
நண்பர்களே,
புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் துறையில் முதலீடு செய்வதற்கான முன்னுரிமை கொடுக்கக் கூடிய இடமாக இந்தியா முன்னேறி வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், இந்தியாவில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறையில், ஏறத்தாழ 5 லட்சம் கோடி ரூபாய் அல்லது 64 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறையில் உலகிற்கான தயாரிப்பு தளமாக இந்தியாவை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்.
இந்தியாவில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறையில் நீங்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான பல காரணங்களை நான் உங்களுக்கு அளிக்கிறேன். புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறைக்கான வெகு தாராளமயமான அந்நிய முதலீட்டுக் கொள்கை, இந்தியாவில் உண்டு. புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அடிப்படையிலான மின் உற்பத்தி திட்டங்களை தாமாகவே தனியாகவோ, அல்லது இந்திய இணையர்களுடன் இணைந்தோ அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆதாரங்களிலிருந்து 24 மணி நேரமும் இடைவிடாமல் எரிசக்தி வழங்கக்கூடிய புதுமையான திட்டங்கள் குறித்து இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. சூரிய சக்தி காற்றாலை ஹைபிரிட் திட்டங்கள் குறித்து வெற்றிகரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
அடுத்து மூன்றாண்டு காலத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சூரிய செல்கள் மற்றும் மாட்யூல்களுக்கு சுமார் 36 ஜிகாவாட் அளவிற்கு தேவை இருக்கக்கூடும். எங்களது கொள்கைகள் தொழில்நுட்ப புரட்சிகளுக்கு ஏற்ப வகுக்கப்பட்டுள்ளன. விரிவான தேசிய ஹைட்ரஜன் எரிசக்தி இயக்கம் ஒன்றைத் துவக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். மின்னணு தயாரிப்பில் பி எல் ஐ வெற்றியை தொடர்ந்து, உயர் திறன் கொண்ட சூரிய சக்தி மாட்யூல்களுக்கும் இதுபோன்ற ஊக்கமளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். "வர்த்தகம் செய்வது எளிது" என்பதை உறுதிப்படுத்துவதே எங்களின் உயர் முன்னுரிமை. முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காக பிரத்தியேகமாக இதற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட, திட்ட வளர்ச்சிப் பிரிவு மற்றும் அந்நிய நேரடி முதலீட்டுப் பிரிவு ஆகியவற்றை அமைத்துள்ளோம்.
இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும், ஏறத்தாழ அனைத்து இல்லங்களிலும் மின்சார வசதி உள்ளது. நாளை எரிசக்திக்கான அவர்களது தேவை அதிகரிக்கும். இந்தியாவில் எரிசக்திக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும். அடுத்த பத்தாண்டு காலங்களில், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் திட்டங்கள் பல மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டங்கள் மூலமாக ஆண்டொன்றுக்கு சுமார் ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் அல்லது 20 பில்லியன் டாலர் அளவிற்கான வர்த்தக வாய்ப்புகள் உருவாகும். இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இது மிகப்பெரிய வாய்ப்பாகும். முதலீட்டாளர்கள், உழைப்பாளர் தொழில் மேம்பாட்டாளர்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியோர் அனைவரும் இந்தியாவின் புதுப்பிக்கக்கூடிய எரிசக்திப் பயணத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அன்பர்களே
இந்த நிகழ்ச்சி, இந்தியாவில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறையில் உள்ள பங்குதாரர்களை , உலகின் மிகச்சிறந்த தொழில்துறை வல்லுநர்கள், கொள்கைகள் வகுப்பவர்கள் , துறையில் உள்ள அறிஞர்கள் ஆகியோரை இணைக்கிறது. புதியதொரு எரிசக்தி எதிர்காலத்திற்குள் இந்தியாவைக் கொண்டு செல்ல உதவும் வகையில் இந்த மாநாட்டில் பயனுள்ள விவாதங்கள் நடைபெறும் என்று நான் நம்புகிறேன்.
நன்றி
**********************
(Release ID: 1676387)
Visitor Counter : 318
Read this release in:
Kannada
,
Gujarati
,
Manipuri
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam