உள்துறை அமைச்சகம்

‘‘நிவர்’’ அதி தீவிர புயலாக மாறும் வாய்ப்பு மணிக்கு 120 கி.மீ முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசும்

Posted On: 24 NOV 2020 9:24PM by PIB Chennai

வங்காள விரிகுடாவில் உருவான ‘‘நிவர்’’ புயல் அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 120 கி.மீ முதல் 145 கி.மீ வரை காற்று வீசலாம்.

தென் மேற்கு வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த ‘நிவர்’ புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து, நவம்பர் 24ம் தேதி மாலை 5.20 மணி நிலவரப்படி, தென்மேற்கு வங்க கடல் பகுதியில், கடலூருக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 320 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியின் தென்கிழக்கு பகுதியில் 350 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 410 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.  இது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், அதைத் தொடர்ந்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் வாய்ப்புள்ளது.

            இது அடுத்த 6 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அதன்பின்பு, வடமேற்கு நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. இது காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே நவம்பர் 25ம் தேதி மாலை அதி தீவிர புயலாக கரை கடக்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 145  கி.மீ வேகத்தில் காற்று வீசலாம்.


(Release ID: 1675535) Visitor Counter : 98