உள்துறை அமைச்சகம்
‘‘நிவர்’’ புயல் மீட்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலை
தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவில் 22 குழுக்கள்
Posted On:
24 NOV 2020 6:52PM by PIB Chennai
நிவர் புயல் மீட்பு பணிகளில் ஈடுபட தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர பிரதேசத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எப்) குழுக்கள் தயார் நிலையில் உள்ளதன.
‘‘நிவர்’’ புயல், புதுச்சேரிக்கு கிழக்கு- தென் கிழக்கே 380 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 430 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, மாமல்லபுரம்-காரைக்கால் இடையே நவம்பர் 25ம் தேதி மாலை கடக்கவுள்ளது. அப்போது மணிக்கு 110 முதல் 120 வேகத்தில் காற்று வீசும்.
இந்த புயலின் நடவடிக்கை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்டு படையின்(என்டிஆர்எப்) தலைமையகம் மற்றும் தமிழகம், ஆந்திர பிரதேசத்தில் உள்ள என்டிஆர்எப் கமாண்டன்ட்கள் அந்தந்த மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்திய வானிலை துறையின் முன்னறிவிப்பு மற்றும் மாநில அதிகாரிகள் தெரிவித்த தேவைகள் அடிப்படையில், 22 குழுக்கள் (தமிழகத்தில் 12 குழுக்கள், புதுச்சேரியில் 3 குழுக்கள், ஆந்திர பிரதேசத்தில் 7 குழுக்கள்) பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் தேவைகளுக்காக, ஆந்திர பிரதேசத்தின் குண்டூர், கேரளாவின் திருச்சூர், ஒடிசாவின் முண்ட்லி ஆகிய இடங்களில் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து குழுவிடமும் வயர்லெஸ், மற்றும் செயற்கைகோள் தகவல் தொடர்பு கருவிகள், மீட்பு பணிகளுக்கு தேவையான மரம் வெட்டும் இயந்திரங்கள் உட்பட அனைத்து உபகரணங்களும் உள்ளன. தற்போதைய கொவிட்-19 சூழலை கருத்தில் கொண்டு, பிபிஇ பாதுகாப்பு உடைகளுடன் என்டிஆர்எப் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
மாவட்ட மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினருடன் என்டிஆர்எப் இணைந்து செயல்படுகிறது. புயல் பற்றிய தகவல்கள், புயல் நேரத்தில் செய்ய வேண்டியவை , செய்யக் கூடாதவை, கொவிட்-19 பாதிப்பு உள்ள பகுதிகள் பற்றிய தகவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. புயல் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில், உள்ளூர் நிர்வாகத்தினருக்கு உதவியாக பணியில் உள்ள என்டிஆர்எப் குழுக்கள் உதவி வருகின்றன. மக்களிடம் பாதுகாப்பு உணர்வை என்டிஆர்எப் ஏற்படுத்தி வருகிறது. நிலைமை சீராகும் வரை, என்டிஆர்எப் குழுக்கள் தனது சேவையை அளிக்கும். அப்போதுதான் மக்களுக்கு பீதி ஏற்படாது.
-----
(Release ID: 1675488)
Visitor Counter : 214