பிரதமர் அலுவலகம்

12-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியா சார்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பு

Posted On: 17 NOV 2020 6:25PM by PIB Chennai

ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடின் தலைமையில் 2020 நவம்பர் 17-ஆம் தேதி அன்று நடைபெற்ற 12-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியாவின் சார்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டார். உலக நிலைத்தன்மை, பகிர்ந்தளிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் புதுமையான வளர்ச்சிஎன்பது இந்த மாநாட்டின் கருப்பொருள் ஆகும். பிரேசில் அதிபர் திரு ஜேர் போல்சோனரோ, சீன அதிபர் திரு ஜி ஜின்பிங், தென்னாபிரிக்க அதிபர் திரு சிரில் ரமாபோஸா ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

கொவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்திலும் பிரிக்ஸ் உச்சி மாநாடு ரஷ்யா தலைமையில் உத்வேகத்துடன் நடைபெறுவதற்கு அந்நாட்டு அதிபர் திரு புடினுக்கு பிரதமர் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் சர்வதேச பொருளாதாரத்தை ஊக்குவிப்பதில் பிரிக்ஸ் அமைப்பு மிக முக்கிய பங்களிப்பை அளித்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலிலும், இதர சர்வதேச அமைப்புகளான உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச செலாவணி நிதியம், உலக சுகாதார அமைப்பு போன்றவைகளிலும் தற்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், சுமார் 150 நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இந்தியா வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு இந்தியாவின் தலைமையில் உச்சி மாநாடு நடக்கும்போது பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பாரம்பரிய மருத்துவ சிகிச்சை மற்றும் டிஜிட்டல் சுகாதாரம், மக்களுக்கு இடையேயான உறவு மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உச்சி மாநாட்டின் இறுதியில் பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் மாஸ்கோ பிரகடனத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

**********************



(Release ID: 1673837) Visitor Counter : 473