பிரதமர் அலுவலகம்

12-வது பிரிக்ஸ் மெய்நிகர் உச்சிமாட்டில் பிரதமர் ஆற்றிய தொடக்க கருத்துரை

Posted On: 17 NOV 2020 5:45PM by PIB Chennai

அதிபர் புதின் அவர்களே, அதிபர் ஸி அவர்களே, அதிபர் ராமபோசா அவர்களே, அதிபர் போல்சனரோ அவர்களே, முதலாவதாக, பிரிக்ஸ் அமைப்பை வெற்றிகரமாக கையாண்டதற்காக அதிபர் புதின் அவர்களுக்கு நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். உங்களது வழிகாட்டுதல் மற்றும் முன்முயற்சி காரணமாக, இந்த உலகப் பெருந்தொற்று காலத்திலும், பிரிக்ஸ் தனது உத்வேகத்தைப் பராமரிக்க முடிந்துள்ளது. நான் என்னுடைய உரையைத் தொடங்கும் முன்பாக, அதிபர் ராமபோசாவின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர்களே, இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள்- ‘’உலக ஸ்திரத்தன்மைக்கான பிரிக்ஸ் கூட்டாண்மை, பகிரப்பட்ட பாதுகாப்பு மற்றும் புதுமையான வளர்ச்சி’’, பொருத்தமானது மட்டுமல்லாமல், தொலை நோக்கு கொண்டது. குறிப்பிடத்தக்க புவி-மூலோபாய மாற்றங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகிறது. அவை, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, வளர்ச்சியில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த மூன்று அம்சங்களிலும் பிரிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

தலைவர்களே,

இந்த ஆண்டு, இரண்டாவது உலகப் போரின்  75-வது ஆண்டாகும். நாம் இழந்த தீரமிக்க வீரர்கள் அனைவருக்கும், நாம் மரியாதை செலுத்துகிறோம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் 25 லட்சத்துக்கும் அதிகமான துணிச்சல் மிக்க இந்திய வீரர்கள் அந்தப் போரில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்த ஆண்டை, ஐக்கிய நாடுகள் சபையின் 75-வது ஆண்டாக நாம் நினைவு கூருகிறோம். ஐ.நா அமைப்பை நிறுவிய உறுப்பு நாடாக இந்தியா, பன்முகத்தன்மைக்கு வலுவான ஆதரவை எப்போதும் அளித்து வருகிறது. இந்திய கலாச்சாரம்,  உலகம் முழுவதையும் ஒரு குடும்பமாக பாவித்து வருகிறது. எனவே, நாங்கள் ஐ.நா போன்ற அமைப்பை ஆதரிப்பது இயல்பானதாகும். ஐ.நா மரபுகள் மீதான எங்களது அர்ப்பணிப்பு தடைபடாததாக உள்ளது. ஐ.நா அமைதி காக்கும் படை நடவடிக்கைகளில் இந்தியா அதிகமான வீரர்களை இழந்துள்ளது. ஆனால், இன்று அந்த பன்முகத்தன்மை  கொண்ட அமைப்பு முறை சிக்கல்களை சந்தித்து வருகிறது. உலக நிர்வாக அமைப்புகளின் நம்பகத்தன்மையும், செயல்திறனும் கேள்விக்குறியாகி உள்ளது. இவை காலத்திற்கு ஏற்ப மாறாததே இதற்கு முக்கிய காரணமாகும். 75 ஆண்டுகளுக்கு முன்பு கண்டது போன்ற சிந்தனையும், எதார்த்தமும் இன்னும் வேரோடி உள்ளது. ஐ.நா பாதுகாப்பு சபையில் சீர்திருத்தங்கள் அவசியம் என இந்தியா நம்புகிறது. இந்த விஷயத்தில் நமது பிரிக்ஸ் கூட்டு நாடுகளின் ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஐ.நா தவிர, பல சர்வதேச நிறுவனங்களும் தற்போதைய  நிலவரத்துக்கு ஏற்றபடி செயல்படவில்லை. உலக வர்த்தக  அமைப்பு, சர்வதேச நிதியம், உலக சுகாதார அமைப்பு ஆகியற்றிலும் சீர்திருத்தம் அவசியமாகும்.

தலைவர்களே, உலகம் சந்தித்து வரும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும், உதவும் நாடுகளையும் இதற்கு பொறுப்பாக்க வேண்டியதை நாம் உறுதி செய்யவேண்டும். இந்தப் பிரச்சினைக்கு நாம் ஒன்று சேர்ந்து தீர்வு காண வேண்டும். ரஷ்யாவின் தலைமையின் கீழ், பிரிக்ஸ் பயங்கரவாத எதிர்ப்பு உத்தி இறுதியாக்கப்பட்டுள்ளது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இது குறிப்பிடத்தக்க சாதனையாகும். இதை இந்தியா தனது தலைமையின் கீழ் மேலும் முன்னெடுத்து செல்லும்.

தலைவர்களே, கோவிட்டுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு நடவடிக்கையில், பிரிக்ஸ் பொருளாதாரங்கள் முக்கிய பங்கு வகிக்கும். உலகின் மக்கள் தொகையில் 42%_க்கும் அதிகமான விகிதத்தை கொண்டுள்ளோம். உலகப் பொருளாதாரத்தின் முன் எந்திரமாக நமது நாடுகள் திகழ்கின்றன. பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. உலகபு் பொருளாதார மீட்பு நடவடிக்கையில், பிரிக்ஸ் இன்டர் பேங்க் மெக்கானிசம், புதிய வளர்ச்சி வங்கி, சில்லரை செலவின இருப்பு மற்றும் சுங்க ஒத்துழைப்பு போன்ற நமது பரஸ்பர நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகள் செயல்திறன் மிக்க பங்களிப்பை அளிக்க முடியும். இந்தியாவில், தன்னிறைவு இந்தியா இயக்கத்தின் கீழ், நாங்கள் விரிவான சீர்திருத்த நடைமுறையைத் தொடங்கியுள்ளோம். தன்னிறைவு பெற்ற இந்தியாவால், கோவிட் தொற்றுக்கு பிந்தைய பொருளாதாரத்தை பன்மடங்காக்க முடியும் என்பதாக அதன் பிரச்சாரம் அமைந்துள்ளது. அது உலக அளவில் வலுவான பங்களிப்பை செலுத்தும். இந்திய மருந்து தொழில் துறையின் திறன் காரணமாக, கொவிட் காலத்தில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்கி நாங்கள் இதனை நிரூபித்துள்ளோம். நான் முன்பே கூறியது போல, எங்களது தடுப்பூசி உற்பத்தியும், போக்குவரத்துத் திறனும் அனைத்து மனித குலத்துக்கும் நிச்சயம் பலனளிக்கப் போகிறது. இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும், கோவிட்-19 தடுப்பூசி, சிகிச்சை, நோய் கண்டறிதல் ஆகியவை தொடர்பாக, அறிவு சார் சொத்து உடன்படிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்க உத்தேசித்துள்ளன. இதர பிரிக்ஸ் நாடுகளும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் என நாங்கள் நம்புகிறோம். பிரிக்ஸ் தலைமைப்  பொறுப்பின் போது, டிஜிடல் சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம் ஆகியவற்றில் பிரிக்ஸ் ஒத்துழைப்பில் ஊக்கமளிக்க இந்தியா பாடுபடும். இந்த நெருக்கடியான ஆண்டில், ரஷ்ய தலைமையின் கீழ், மக்களுடன் மக்களுக்கான தொடர்பை அதிகரிக்கும் வகையிலான பல முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், பிரிக்ஸ் திரைப்பட விழா, இளம் விஞ்ஞானிகள் மற்றும் இளம் ராஜீய அதிகாரிகள்  கூட்டங்கள் இதில் அடங்கும். இதற்காக, அதிபர் புதினுக்கு நான் எனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர்களே, 2021-ல் பிரிக்ஸ் அமைப்பு 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. கடந்த ஆண்டுகளில் நாம் எடுத்த பல்வேறு முடிவுகளை இந்த அமைப்பு மதிப்பிடலாம். 2021-ல் எங்களது  தலைமையின்போது, மூன்று முக்கிய அம்சங்களை வலுப்படுத்தி, பிரிக்ஸ் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க முயலுவோம். பிரிக்ஸ் ஒற்றுமையை அதிகரித்து, இதற்காக உறுதியான நிறுவன விதிமுறைகளை உருவாக்க நாங்கள் முயலுவோம். இந்த முயற்சிகளுக்காக  அதிபர் புதினுக்கு மீண்டும் ஒருமுறை நான் வாழ்த்து தெரிவித்துக் கொண்டு எனது உரையை நிறைவு செய்கிறேன்.

நன்றி!

பொறுப்பு துறப்பு; இது பிரதமர் உரையின் தோராயமான மொழி பெயர்ப்பு. இந்த உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

********


(Release ID: 1673667) Visitor Counter : 190