இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

500 தனியார் அகாடமிகளுக்கு நிதி அளிப்பதற்கான ஊக்குவிப்பு அமைப்பை விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது

Posted On: 14 NOV 2020 3:30PM by PIB Chennai

கேலோ இந்தியா திட்டத்தின் மூலம், 500 தனியார் அகாடமிகளுக்கு  2020-21 நிதியாண்டு தொடங்கி, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நிதி ஆதரவு வழங்கும் வகையிலான ஊக்குவிப்பு அமைப்பை முதன்முதலாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தனியார் அகாடமிகள் பயிற்சி அளிக்கும் வீரர்களின் தரமான சாதனை, அகாடமியில் உள்ள பயிற்சியாளர்களின் தரம், தரமான விளையாட்டு களம் மற்றும் துணை கட்டமைப்புகள், விளையாட்டு அறிவியல் மற்றும் பணியாளர்களின் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில், இந்த தனியார் அகாடமிகள் பல்வேறு பிரிவாக தரம் பிரிக்கப்படும். 2028 ஒலிம்பிக் போட்டிக்கு 14 முன்னுரிமை விளையாட்டுக்கள் அடையாளம் காணப்படும். இதில், திறன் மிக்க வீரர்களை கொண்ட அகாடமிகள் இந்த ஆதரவைப் பெறுவதற்கு தகுதியானவை.

இந்த முடிவு குறித்து தெரிவித்த, மத்திய  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ,’’ இத்தகைய நிறுவனங்களுக்கு அரசின் ஆதரவு கிடைக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான், நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும் விளையாட்டு திறன் வளர்ச்சி பெற முடியும். நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஏராளமான சிறிய அகாடமிகள், விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த தனியார் அகாடமிகளில், கட்டமைப்பு, விளையாட்டு அறிவியல், ஆதார ஆதரவு இருந்தால் மட்டுமே தரம் வாய்ந்த வீரர்கள், தரமான பயிற்சிகளைப் பெற முடியும்’’ என்று கூறினார்.

அரசின் இந்த முடிவை, பல்வேறு பயிற்சியாளர்கள் வரவேற்றுள்ளனர். தனியார் அகாடமிகளுக்கு இது ஊக்கத்தை அளிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

*******

 


(Release ID: 1672921)