அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

ஸ்வர்ண ஜெயந்தி ஃபெல்லோ 2020 திட்டம் : சென்னை ஐஐடி-யைச் சேர்ந்த இருவர் தேர்வு

Posted On: 12 NOV 2020 4:00PM by PIB Chennai

பல்வேறு துறைகளில் புதுமையான ஆய்வுகளை மேற்கொள்ள ஸ்வர்ண ஜெயந்தி ஃபெல்லோ 2020 திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி நிதி உதவி அளிக்க 21 விஞ்ஞானிகளை மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை தேர்வு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இருந்து சென்னை ஐஐடி இணைப் பேராசிரியர்கள் டாக்டர் பி.அன்பரசனும், டாக்டர் பிரபு ராஜகோபாலும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

வாழ்க்கை அறிவியல், ரசாயன அறிவியல், கணிதம், புவியியல் மற்றும் வளிமண்டலம், இயற்பியல் மற்றும் பொறியியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நாடு முழுவதும் உள்ள 21 விஞ்ஞானிகளை ஸ்வர்ண ஜெயந்தி ஃபெல்லோ 2020 திட்டத்தின் கீழ் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை தேர்வு செய்துள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள விஞ்ஞானிகள் ஆராய்ச்சித் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள செலவினங்களின் அடிப்படையில் சுதந்திரமான மற்றும் தடையற்ற ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விஞ்ஞானிகளுக்கு மாதம் தோறும் ஐந்து ஆண்டுகளுக்கு தலா ரூ.25,000 மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆய்வு அனுமதியாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் விஞ்ஞானிகள் தங்களுடைய நிறுவனத்தில் ஏற்கனவே வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்துடன் கூடுதலாக இந்த நிதி உதவி வழங்கப்படும். இந்த நிதி உதவிகள் தவிர ஆராய்ச்சிக்கு தேவைப்படும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட கருவிகள் வாங்குவதற்கும், பயணங்கள் மேற்கொள்வதற்கும் உதவி வழங்கப்படும்.

இந்தியாவின் 50 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த ஸ்வர்ண ஜெயந்தி ஃபெல்லோஷிப் திட்டத்தில் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் இளம் விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு நிதி உதவிகள் அளிக்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தியின் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1672274

 

**********************



(Release ID: 1672345) Visitor Counter : 169