சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

7 மாநில முதல்வர்கள், அமைச்சர்களுடன் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை

Posted On: 11 NOV 2020 4:29PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், ஏழு மாநிலங்களின் முதலமைச்சர்கள், சுகாதார அமைச்சர்கள், முதன்மைச் செயலாளர்கள்/ கூடுதல் தலைமைச் செயலாளர்கள் ஆகியோருடன் இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்மகாராஷ்டிரா, உத்தராகண்ட், மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா, கோவா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களும் சுகாதார அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் நோயின் தாக்கம் அதிகரித்து இருப்பதும், உத்தராகண்ட், மகாராஷ்டிரா, கோவா திரிபுரா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இரவு பகல் பாராமல் அயராது பாடுபட்டு வரும் போராளிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு டாக்டர் ஹர்ஷ் வர்தன் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். இன்றைய அளவில் 4.09 சதவிகிதம் பேர் பிராணவாயு வசதியுடனும்,   2.73 சதவிகிதத்தினர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் 0.45 சதவிகிதத்தினர் வென்டிலேட்டர் வசதியுடனும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார். எனினும், வரவிருக்கும் குளிர்கால மாதங்களிலும், நீண்ட பண்டிகைக் காலங்களிலும் நோய்தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நோய் பரவலைத் தடுப்பதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி உள்ள மக்கள் இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், “கொவிட் சரியான நடத்தைமுறை குறித்த பிரதமரின் அண்மை உரை, கொவிட் தொற்றுக்கு எதிரான சிறந்த வியூகம்என்று தெரிவித்தார். மக்கள் இயக்கம் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கிய அமைச்சர், “கொவிட்டுக்கு சரியான நடத்தைமுறைதான் சிறந்த சமூகத் தடுப்பு மருந்துஎன்று குறிப்பிட்டார்.

நோய் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களில் சோதனைகளை அதிகரிக்கவும், மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்சனை போன்ற அறிகுறிகள் தென்படுபவர்களின் மீது அதிக கவனம் செலுத்தவும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார். மேலும், பணியிடங்கள், சந்தைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் போன்றவற்றில் சோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671928

                                                                    ******



(Release ID: 1671970) Visitor Counter : 164