பிரதமர் அலுவலகம்

இந்திய எரிசக்தி மன்றத்தின்‌ துவக்க விழாவில் பிரதமரின் உரை

Posted On: 26 OCT 2020 7:01PM by PIB Chennai

மேதகு டான் ப்ரூலே, அமெரிக்க எரிசக்தி செயலாளர்,

மேதகு இளவரசர் அப்துல் அஜீஸ், சவுதி அரேபிய எரிசக்தி அமைச்சர்,

டாக்டர் டேனியல் எர்கின், துணைத்தலைவர், ஐஹெச்எஸ் மர்கிட்,

எனது சக நண்பர் திரு தர்மேந்திர பிரதான்,

சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு

வணக்கம்!

இந்திய எரிசக்தி மன்றத்தின் நான்காவது கூட்டமான செரா வாரத்தில்  உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எரிசக்தித் துறையில் டாக்டர் டேனியல் எர்கின் அளித்துவரும் பங்களிப்பிற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'புதிய வரைபடம்' என்ற தலைப்பில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புத்தகத்திற்கும் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

 

நண்பர்களே,

இந்த வருடத்தின் கருப்பொருள் மிகவும் ஏதுவாக உள்ளது. அதாவது, "மாறி வரும் உலகத்தில் இந்திய எரிசக்தியின் வருங்காலம்". இந்தியாவில் எரிசக்தி நிரம்பி உள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். எரிசக்தித் துறையில் இந்தியாவின் எதிர்காலம் வளமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது.  எப்படி நான் இதை உணர்கிறேன் என்பதை உங்களுக்கு விளக்குகிறேன்.

நண்பர்களே,

இந்த வருடம் எரிசக்தித் துறைக்கு மிகவும் சவாலானதாக இருந்து வருகிறது. எரிசக்தித் தேவை மூன்றில் ஒரு பகுதியாகக் குறைந்தது. விலையில் உறுதியற்ற தன்மை நிலவி வருகிறது. முதலீடு குறித்த முடிவுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. அடுத்து வரவிருக்கும் ஆண்டுகளிலும் சர்வதேச எரிசக்தித் தேவைகள் குறையும் என்று உலகளாவிய நிறுவனங்கள் கணித்துள்ளன.   எரிசக்தி நுகர்வில் இந்தியா முதன்மை நாடாக வளர்ச்சி அடையும் என்று இதே முகமைகள் கூறி வருகின்றன. வரும் காலங்களில் எரிசக்தி பயன்பாட்டை இந்தியா இரட்டிப்பாக்க உள்ளது.

நண்பர்களே,

இந்தத் தாக்கத்தை பல்வேறு துறைகளும் சந்தித்து வருகின்றன. உதாரணத்திற்கு விமான துறையை எடுத்துக் கொள்ளுங்கள். உள்ளூர் விமானங்களைப் பொருத்தவரை உலகிலேயே மூன்றாவது இடத்திலும் இந்த துறைக்கான சந்தைப்படுத்துதலில் மிக வேகமாகவும் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் தற்போது 600 ஆக உள்ள விமானங்களின் எண்ணிக்கையை விமான நிறுவனங்கள் 1200 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய வளர்ச்சி!

நண்பர்களே,

அனைவருக்கும் எரிசக்தி எளிதில் கிடைக்கும் வகையிலும், நம்பகத் தன்மையுடனும் வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா நம்புகிறது. அப்போதுதான் சமுதாய பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும். எரிசக்தித் துறையால் மக்களுக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கவும், அவர்களது வாழ்வை எளிமையாதானதாக ஆக்கவும் முடியும் என்பதை நாம் நம்புகிறோம். 100 சதவிகிதம் மின்சார மயமாக்கலை இந்தியா எட்டியுள்ளது. சமையல் எரிவாயு இணைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஊரகப் பகுதிகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பெண்களை இந்த மாற்றம் குறிப்பாக உதவியுள்ளது.

நண்பர்களே,

எரிசக்தி நீதியை உறுதி செய்ய இந்தியாவின் எரிசக்தித் திட்டம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதுவும் சர்வதேச அளவிலான நிலையான வளர்ச்சியை பின் பற்றியே. அதாவது இந்தியர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக கூடுதல் எரி சக்தியை பயன்படுத்துவது. அதே சமயம் குறைந்த கரியமில தடத்தோடு.

நண்பர்களே,

நமது எரிசக்தித் துறை,

வளர்ச்சியை மையமாகவும், தொழில்கள் துறைக்கு ஏதுவாகவும்சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும். ‌இதன் காரணமாகவே புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முக்கியத்துவம் வழங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

நண்பர்களே,

கடந்த ஆறு வருடங்களில் 36 கோடிக்கும் மேலாக அல்லது 360 மில்லியன் எல்இடி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. எல்இடி விளக்குகளின் விலை பத்து மடங்கு குறைந்துள்ளது. கடந்த ஆறு வருடங்களில் 1.1 கோடிக்கும் கூடுதலாக அல்லது 11 மில்லியன் திறன் வாய்ந்த எல்இடி தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலமாக ஆண்டுக்கு 60 பில்லியன் யூனிட் வரை எரிசக்தி சேமிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தில் ஆண்டுக்கு 4.5 கோடி அல்லது 45 மில்லியன் டன் என்னும் அளவுக்கு கரியமில வெளியேற்றம் குறையும்.

அதோடு, ஆண்டுக்கு ரூபாய் 24000 கோடி அல்லது ரூபாய் 240 பில்லியன் சேமித்து உள்ளோம். இதுபோன்ற நடவடிக்கைகளால் தான் சுத்தமான எரிசக்திக்கான முதலீட்டில் இந்தியா அனைவரையும் ஈர்ப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நண்பர்களே,

நான் கூறியதைப் போல உலக நன்மையை கருத்தில் கொண்டே இந்தியா செயல்படும். சர்வதேச அளவில் மேற்கொண்ட உறுதியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். வரும் 2022ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறனை 175 ஜிகா வாட்டாக  உயர்த்த திட்டமிட்டு இருந்தோம். இந்த இலக்கை மேலும் நீட்டித்து வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் திறன் உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். பிற தொழில் நாடுகளைவிட இந்தியாவில்  குறைந்த அளவான கார்பன் வெளியேற்றப்படுகிறது. இருந்தாலும் புவி வெப்பமடைதலுக்கு எதிரான போராட்டத்தில் நாம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்வோம்.

நண்பர்களே,

கடந்த ஆறு வருடங்களில் இந்தியாவின் சீர்திருத்த பயணம் மிக வேகமாக உள்ளது. பல்வேறு தலைசிறந்த சீர்திருத்தங்களை எரிசக்தித் துறை சந்தித்துள்ளது. 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆய்வு மற்றும் உரிமத்தின் கொள்கையில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. வருமானத்தை பெருக்குவதை விட உற்பத்தியை அதிகமாக்குவதற்கு அளிக்கப்பட்டது. கூடுதல் வெளிப்படைத்தன்மையுடன், நெறிப்படுத்தப்பட்ட வழிமுறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வரும் 2025ம் ஆண்டுக்குள் சுத்திகரிப்பு ஆலைகளின் கொள்ளளவை ஆண்டுக்கு 250 இல் இருந்து 400 மில்லியன் மெட்ரிக் டன்னாக  உயர்த்த திட்டமிட்டுள்ளோம். உள்நாட்டு எரிவாயு உற்பத்தியை மேம்படுத்துவது அரசின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. ஒரே தேசம் ஒரே எரிவாயு தொகுப்பு என்ற லட்சியத்தை எட்டும் வகையில் எரிவாயு சார்ந்த பொருளாதாரத்திற்கு நாம் மாற உள்ளோம்.

நண்பர்களே,

கடந்த பல ஆண்டுகளாக  கச்சா எண்ணெய் விலையில் ஏற்றத்தாழ்வை உலகம் கண்டு வருகிறது. பொறுப்புடன் கூடிய விலை நிர்ணயத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும். எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கான சந்தைப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை மற்றும் நெகிழ்வு தன்மையை நோக்கி நாம் செயல்பட வேண்டும் வேண்டும்.

நண்பர்களே,

உள்நாட்டு இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவும், எரிவாயு சந்தை விலையில் சீரான தன்மையை உருவாக்கவும், இயற்கை எரிவாயு சந்தைப்படுத்துவதற்கான சீர்திருத்தத்தை இந்த மாதத்தின் தொடக்கத்தில் அறிவித்தோம். இதன் மூலம் இயற்கை எரிவாயுக்கான விற்பனையில் கணினி சார்ந்த ஏலத்தின் வாயிலாக கூடுதல் சுதந்திரம் கிடைக்கும். தேசிய அளவிலான இந்தியாவின் முதல் தானியங்கு எரிவாயு வர்த்தக மையம் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. எரிவாயுக்கான சந்தை விலையை நிர்ணயிக்கும் தர வழிமுறைகளை இது வகுக்கிறது.

நண்பர்களே,

தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். தன்னிறைவு இந்தியா என்பது உலக பொருளாதாரத்திற்கு ஒரு உந்துசக்தியாகவும் இருக்கும். எரிசக்தி பாதுகாப்பு நமது முக்கிய குறிக்கோள்களுள் ஒன்றாக உள்ளது. இந்த முயற்சிகள் நல்ல பலனை தந்து வருகின்றன என்பது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த சவாலான தருணங்களிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான முதலீட்டை நாம் பெற்றிருக்கிறோம். பிற துறைகளிலும் நாம் நல்ல நிலையை அடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

நண்பர்களே,

சர்வதேச முக்கிய எரிசக்தி நிறுவனங்களுடன் இணைந்து எரிசக்தித் துறையில் விரிவான வியூகங்களை வகுத்து வருகிறோம். இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்  கொள்கையின்படி நமது அண்டை நாடுகளுடன் இணைந்து பரஸ்பரம் பயன்பெறும் வகையில் எரிசக்தித் தடங்களை உருவாக்கி வருகிறோம்.

நண்பர்களே,

மனிதனின் வளர்ச்சியை சூரியனின் ஒளிக் கதிர் மேலும் பிரகாசம் ஆக்குகிறது. சூரிய கடவுளின் தேரை எப்படி ஏழு குதிரைகள் இழுத்துச் செல்கின்றனவோ, அதேபோல் இந்தியாவின் எரிசக்தி வரைபடத்திற்கும் ஏழு முக்கிய உந்து சக்திகள் உள்ளன. மாற்றத்துடன் கூடிய இந்த உந்து சக்திகள் யாதெனில்:

1. எரிவாயு சார்ந்த பொருளாதாரத்தை நோக்கிய நமது நடவடிக்கைகளை முடுக்கி விடுவது

2. சுத்தமான பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்துவது

3.  உயிரி எரிபொருள் இயக்குவதற்காக உள்நாட்டு தயாரிப்புகளை பெருமளவில் நாடுவது

4. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 450 கெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைவது

5. மின்சாரத்தை அதிகம் உபயோகித்து, கார்பன் இயக்கத்தை குறைப்பது

6. ஹைட்ரஜன் உள்ளிட்ட வளர்ந்து வரும் எரிபொருட்களை நோக்கி செல்வது

7. அனைத்து எரிசக்தி நடவடிக்கைகளிலும் புதுமையான டிஜிட்டல் முறைகளை பயன்படுத்துவது

கடந்த ஆறு வருடங்களாக நடைமுறையில் இருக்கும்   எரிசக்தி வழிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும்.

நண்பர்களே,

தொழில் நிறுவனங்கள், அரசு மற்றும் சமுதாயத்திற்கும் இடையே முக்கிய பாலமாக இந்திய எரிசக்தி மன்றம்- செரா வாரம் திகழ்ந்து வருகிறது. இந்த மாநாட்டின் மூலம் எதிர்கால எரிசக்திக்கு பல்வேறு உபயோகமான தகவல்கள் பரிமாறப்படும் என்பதை நான் நம்புகிறேன். நான் மீண்டும் சொல்கிறேன்- இந்தியாவின் எரிசக்தி உலகிற்கே சக்தி அளிக்கும்! நன்றி

மீண்டும் ஒருமுறை நன்றி.

**********************

 

 



(Release ID: 1667679) Visitor Counter : 234