ஜல்சக்தி அமைச்சகம்

அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு 100 நாட்களுக்குள் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவுத் திட்டத்தைக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிக்க ஜம்மு-காஷ்மீர் அரசு திட்டம்

Posted On: 24 OCT 2020 11:57AM by PIB Chennai

நாட்டின் எதிர்காலமாகக் கருதப்படும் குழந்தைகளுக்கு சுத்தமான தண்ணீரை வழங்குவதும்  சுகாதாரமான சூழலை அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவதும் மிக அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு  பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான  அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு 100 நாட்களுக்குள் சுத்தமான குடிநீர் வசதியை குழாய்கள் மூலம் வழங்கும் திட்டத்தைக் கடந்த இரண்டாம் தேதி மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தொடங்கியது. இந்தத் திட்டத்தை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதனைச் செயல்படுத்துவதன் மூலம், பள்ளிகள் திறந்த பின் குழந்தைகளுக்கு சுகாதாரமான குடிநீர் வசதியும், கழிவறைக்குத் தேவையான தண்ணீர் வசதியும் கிடைக்கும்.

மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஜல் ஜீவன் இயக்கம் என்ற மத்திய அரசின் திட்டமானது, வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் செயல்பாடு குறித்து ஜல்சக்தி அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆய்வு நடத்தி வருகிறது. இந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறித்த இடை நிலை அறிக்கை தேசிய ஜல் ஜீவன் இயக்கத்திடம் இன்று வழங்கப்பட்டது.

இதன்படி ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 18.17 லட்சம் வீடுகளில் 8.38 லட்சம் (46%) வீடுகளுக்குத் தண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில், மத்திய அரசு  ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு ரூபாய் 681.77 கோடி ஒதுக்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தத் திட்டத்தை முழுவதும் செயல்படுத்த ஜம்மு-காஷ்மீர் அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து ஊரக வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதில் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முன்னோடியாக ஜம்மு காஷ்மீர் திகழும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பைஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667264

-----


(Release ID: 1667296) Visitor Counter : 136