கலாசாரத்துறை அமைச்சகம்
ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.100 சிறப்பு நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிட்டார்
Posted On:
12 OCT 2020 5:49PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திரமோடி, ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவின் பிறந்த நாள் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் காணொலி காட்சியின் வாயிலாக ரூ.100 நினைவு நாணயத்தை இன்று வெளியிட்டார். ராஜமாதாவின் பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்.
ராஜமாதா விஜய ராஜே சிந்தியா அவர்களை கவுரவிக்கும் வகையில் ரூ.100 சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிடும் இந்த வாய்ப்புக் கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் என்று பிரதமர் கூறினார்.
விஜய ராஜே அவர்களின் புத்தகத்தைப் பற்றி குறிப்பிடுகையில், இந்த புத்தகத்தில் தான் குஜராத்தின் இளம் தலைவராக அறிமுகப்படுத்தப்பட்டப்பட்டதாகவும், இன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் பிரதான சேவகராக அவர் பணியாற்றி வருவதையும் குறிப்பிட்டார்.
நிகழ்வில் பேசிய பிரதமர், “ராஜமாதா விஜய ராஜே சிந்தியா, இந்தியாவை சரியான பாதையில் இட்டுச் சென்றவர்களில் ஒருவர். அவர் ஒரு தீர்க்கமான தலைவர் மற்றும் திறமையான நிர்வாகி. வெளிநாட்டு துணிகளை எரித்துப் போராட்டம் செய்தபோதாகட்டும் , அவசர நிலை காலகட்டம், ராமர் கோவில் இயக்கம் என இந்திய அரசியலின் முக்கியமான கால கட்டங்களின் சாட்சியாக அவர் இருந்திருக்கிறார் என்றார்.
ராஜமாதாவின் வாழ்க்கையை இப்போதைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானது என்பதால் அவரது அனுபவங்கள் மற்றும் அவரைப் பற்றி திரும்ப, திரும்ப குறிப்பிட வேண்டியிருப்பதாக பிரதமர் வலியுறுத்தினார்.
பிரதமர் கூறுகையில், “பொதுசேவையில் ஈடுபடுவதற்கு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறப்பது என்பது முக்கியமானதாக இருக்க வேண்டியதில்லை என்று ராஜமாதா நமக்கு கற்றுத்தருகிறார். அதற்கு தேவை, தேசத்தின் மீதான அன்பும், ஜனநாயக மனோபாவமும் தான். இந்த எண்ணங்கள், இந்த கொள்கைகளை அவரது வாழ்க்கையில் நாம் காணமுடியும். ராஜமாதா ஒரு அருமையான அரண்மனையை , ஆயிரக்கணக்கான ஊழியர்களை மற்றும் அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தார். ஆனால், பொதுமக்களுக்காக, ஏழைகளின் முன்னேற்றத்துக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவர் எப்போதுமே பொது சேவையோடு இணைந்தும், கடமைப்பட்டும் இருந்தார்” என்றார். “நாட்டின் எதிர்காலத்துக்காக ராஜமாதா தமது வாழ்க்கையை அர்பணித்தார். நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக தமது அனைத்து சந்தோஷங்களையும் அவர் தியாகம் செய்தார். ஒரு பதவிக்காகவோ அல்லது கவுரவுத்துக்காகவோ ராஜமாதா வாழவில்லை. அரசியல் செய்யவில்லை” என்றார் பிரதமர்.
ராஜமாதா பணிவுடன், தம்மை தேடி வந்த பல பதவிகளை நிராகரித்த சில நிகழ்வுகளை பிரதமர் நினைவு கூர்ந்தார். ஜனசங்கத்தின் தலைவராக ஆகும்படி அத்வானி அவர்களும், அடல் அவர்களும் ஒருமுறை அவரை வலியுறுத்தினர். ஆனால், அதற்கு பதில் அவர் ஜனசங்கத்தில் ஒரு தீவிர ஆதரவாளராகவே பணியாற்றினார் என்றார் பிரதமர்.
பிரதமர் திரு மோடி மேலும் கூறுகையில், “தம்முடன் பணியாற்றியவர்களை பெயர் சொல்லி அடையாளம் காணுவதையே ராஜமாதா விரும்பினார். பணியாளர்கள் குறித்த இந்த உணர்வு ஒவ்வொருவரின் மனதிலும் இடம் பெற வேண்டும். மரியாதை, பெருமை அல்ல, அரசியலின் மையமாக இருக்க வேண்டும்” என்றவர், “ராஜமாதா ஒரு ஆன்மீக ஆளுமை” என்று குறிப்பிட்டார்.
பிரதமர் மேலும் கூறுகையில், “பொது விழிப்புணர்வு மற்றும் மக்கள் இயக்கங்கள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன மற்றும் பல இயக்கங்கள் மற்றும் திட்டங்கள் வெற்றி அடைந்துள்ளன,” என்றார். “ராஜமாதாவின் ஆசிகளுடன் வளர்ச்சி எனும் பாதையை நோக்கி நாடு நடைபோடுகிறது” என்று எடுத்துக் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி மேலும் கூறுகையில், “ இன்றைக்கு இந்தியாவில் பெண்களின் சக்தி, நாட்டின் வெவ்வேறு முக்கியமான துறைகளில் முன்னேறி வருகிறது” என்று தெரிவித்தார். ராஜமாதாவின் கனவான பெண்களுக்கு அதிகாரம் அளித்தலை நிறைவேற்ற உதவும் வகையிலான முயற்சிகளையும் அவர் பட்டியலிட்டார்.
பிரதமர் மேலும் கூறுகையில், “தவிர அவர் போராடிய ராமஜென்மபூமி கோவில் எனும் கனவு, அவரது பிறந்த நூறாவது ஆண்டில் பூர்த்தியாவதும் ஒரு அற்புதமான தற்செயல் நிகழ்வாக இருக்கிறது. வலுவான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தியா எனும் அவரது கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தற்சார்பு பாரத்தின் வெற்றி நமக்கு உதவியாக இருக்கும்” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய கலாச்சார அமைச்சர், ராஜமாதா விஜயராஜே சிந்தியாவின் எளிமை பாரஸ் கல்லைப் போன்றது என்றார். ராஜமாதாவுடனான தன்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அமைச்சர், ராஜமாதா அரசியலில் இருந்த போதும், அவர் தனக்கென அணிகளை உருவாக்கிக் கொள்ளவில்லை என்றார். லட்சியத்தோடும், மதிப்புமிக்கதாகவும் அவரது அரசியல் விளங்கியது. அரசியல் லாபங்களுக்காக தன்னுடைய லட்சியங்களை அவர் தியாகம் செய்யவில்லை. ஒரு மனிதன் அடைவதற்கு போராடும் அனைத்தும் ராஜமாதா சிந்தியாவிடம் இருந்தது. அவர் விரும்பியிருந்தால், அவர் மிகவும் வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் பொது சேவையை தன்னுடைய லட்சியமாக வைத்திருந்தார்.
விஜய ராஜே சிந்தியாவின் குடும்பத்தினர்களுடன் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதல்வர்கள் இந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிரதமரையும், இதர பிரமுகர்களையும் வரவேற்ற கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு ராகவேந்திர சிங், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
ராஜமாதா விஜயராஜே சிந்தியாவின் நூற்றாண்டையொட்டி இந்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நிதி அமைச்சகம் இந்த சிறப்பு நாணயத்தை தயாரித்தது.
***********************
(Release ID: 1663800)
Visitor Counter : 167