சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மத்திய பிரதேசத்தின் ரேவாவில் உள்ள ஷியாம் ஷா அரசு மருத்துவக் கல்லூரியின் சிறப்புப் பிரிவை டாக்டர் ஹர்ஷ வர்தன் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்

இதன் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில், மறைந்த பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாயின் கனவு நினைவாகும்: டாக்டர் ஹர்ஷ வர்தன்

Posted On: 07 OCT 2020 5:21PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன், இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சௌபே மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் திரு சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் அம்மாநிலத்தின் ரேவாவில் உள்ள ஷ்யாம் ஷா அரசு மருத்துவக் கல்லூரியின் சிறப்புப் பிரிவைக் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தனர்.

மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 150 கோடி ரூபாய் செலவில், இந்த 200 படுக்கைகள் கொண்ட சிறப்புப் பிரிவு கட்டப்பட்டுள்ளது.

 நரம்பியல்நரம்பியல் அறுவை சிகிச்சை, சிறுநீரகவியல், இருதயவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இந்த சிறப்புப் பிரிவில் இடம் பெற்றுள்ளன.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன், சுகாதாரத் துறையில் இந்தியா தன்னிறைவை அடைவதற்கு இந்த சிறப்புப் பிரிவு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

 முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாய், 2003 ஆம் ஆண்டு தமது சுதந்திர தின விழா உரையில்பிரதான் மந்திரி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்படும் என்று அறிவித்ததாக அமைச்சர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசு, குறைந்த விலையில் தரமான சுகாதார வசதிகளை அளிக்க உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 6-ல் இருந்து 22 ஆக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர் ஹர்ஷவர்தன், மேலும் 75 மருத்துவமனைகளை, எய்ம்ஸ் தரத்தில் உயர்த்த திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறினார்.

கொவிட்-19க்கு எதிரான இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமைச்சர், மத்திய அரசின் நோய் தடுப்பு முயற்சிகளினால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். மொத்த பரிசோதனையின் எண்ணிக்கை 8 கோடியை தாண்டியுள்ளது என்றார் அவர்.

பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது உள்ளிட்ட வழிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662360 

-----



(Release ID: 1662522) Visitor Counter : 125