பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கடந்த 6 ஆண்டு கால மோடி ஆட்சியில் குறைந்தபட்ச ஆதரவு விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 30 SEP 2020 6:50PM by PIB Chennai

கடந்த 6 ஆண்டு கால மோடி ஆட்சியில் விவசாயிகள் நலனுக்காக வரலாற்று முக்கியத்துவமான பல நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன என்றும், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக ஆக்குவதற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி.) சீராக உயர்த்தப்பட்டு வருகிறது என்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வேளாண்மை சட்டங்கள் குறித்து தோடா, ரியாசி, ராம்பன் மற்றும் கிஸ்ட்வார் மலை மாவட்டங்களைச் சேர்ந்த  கிராம நல அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், வேளாண் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் இயக்கவாதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார். எம்.எஸ்.பி. அறிவிப்பு மற்றும் ஏ.பி.எம்.சி. செயல்பாடுகள் தொடரும் என்றும், எந்தக் காரணத்தைக் கொண்டும் அவை நிறுத்தப்படாது என்றும் உறுதியளித்தார். இவை கைவிடப்படும் என சில சுயநல சக்திகள் தவறான பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகக் கூறிய அவர், அனைத்து நிலைகளிலும் அதை முறியடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

                இயக்கவாதிகள் அனைவரும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு விவசாயியையும் சந்தித்து, அவர்களுக்கு எதிராக உருவாக்கப்படும் சதித் திட்டங்கள் குறித்து விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இவ்வாறு செய்வதால், பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ள பெருமளவிலான நலத் திட்டங்களின் பயன்கலை விவசாயிகள் பெற முடியும் என்று அமைச்சர் கூறினார்.



(Release ID: 1660598) Visitor Counter : 118