வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் ஏராளமான நடவடிக்கைகள்: மாநிலங்களவையில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் தகவல்

Posted On: 18 SEP 2020 3:09PM by PIB Chennai

மாநிலங்ளவையில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

முடக்க காலத்தில் சமூக இடைவெளியை உறுதி செய்ய பல கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அவ்வப்போது விடுத்தது. உணவு, மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களை இ-வர்த்தகம் மூலம் விநியோகிப்பது ஊக்கப்படுத்தப்பட்டது. தொற்று இன்னும் தொடர்வதால், இ-வர்த்தகத் துறையில் இதன் தாக்கத்தை இப்போது மதிப்பிட முடியாது.  இ-வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பதிவு செய்யப்பட வேண்டும். சில குறிப்பிட்ட பிரிவு சேவைகளுக்கு இ-வர்த்தகத்தில் ஈடுபடுவோர் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.

வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் வருவாயைப் பெருக்கவும், ஒருங்கிணைந்த வேளாண் ஏற்றுமதி கொள்கையை(ஏஇபி)  மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்காக வர்த்தகத் துறை பல நடவடிக்கைகளை எடுத்தது. மாநிலம் வாரியாக உற்பத்திப் பொருளுக்கு ஏற்ப செயல் திட்டங்கள், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. விவசாயிகளை ஒன்றிணைக்கும் இணையதளம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் விவசாய உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கங்கங்கள், ஏற்றமதியாளர்களுடன் நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபட முடியும். ஏற்றுமதி சந்தை தொடர்பை ஏற்படுத்த வாங்குவோர்- விற்போர் சந்திப்பு கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. வேளாண்துறை சீர்திருத்தத்துக்காக 3 அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. 

ஒரு மாவட்டத்தின் உண்மையான ஆற்றலை அறியவும், பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பை அதிகரிக்கவும், தற்சார்பு இந்தியா இலக்கை நோக்கிச் செல்லவும், ஒரு மாவட்டம், ஒரே உற்பத்தித் திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது.  இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன்  தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சித் துறை கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி கலந்தாலோசித்தது. ஒவ்வொரு மாவட்டத்தையும், அங்கு உற்பத்தியாகும் பொருட்களை அடையாளம் கண்டு ஏற்றுமதி மையமாக ஆக்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

கொவிட் தொற்று ஏற்பட்டதிலிருந்து, ஏற்றுமதியில் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில், வர்த்தக மற்றும் தொழில் சபைகள், தொழில் துறையினருடன்  ஆலோசிக்கப்பட்டது.  அந்தப் பிரச்சனைகள், சம்பந்தப்பட்ட துறையினருடன் எடுத்து செல்லப்பட்டு தீர்வுகள் காணப்பட்டன.

எலக்ட்ரானிக்ஸ், இ-வர்த்தகம், சில்லரை வர்த்தகம், வாகனத்துறை, உணவு பதப்படுத்துதல் துறை, ஜவுளித்துறையில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் பல தங்கள் தொழிற்சாலைகளை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமைக்க  ஆர்வம் காட்டியுள்ளன. ரகசிய தகவல்களை பாதுகாக்கும் நோக்கில், இதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. அன்னிய நேரடி முதலீடு உள்நாட்டு மூலதனத்தையும் தொடர்ச்சியாக அதிகரித்து அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கிறது. அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் 2019-20ம் ஆண்டு அன்னிய நேரடி முதலீடு 74.39 பில்லியன் டாலராக இருந்தது. இது இந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் 16.26 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டு நிறுவனங்களுக்கு டெண்டர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ரூ.200 கோடிக்கு மேற்பட்ட டெண்டர்களை மட்டுமே சர்வதேச நிறுவனங்கள் எடுக்கும் வகையில் விதிமுறைகளை செலவினத்துறை கடந்த மே 15ம் தேதி மாற்றியுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் பயனடைய முடியும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1656135

*******************


(Release ID: 1656268) Visitor Counter : 294