இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

நேரு யுவ கேந்திரா சங்கதன் உலகின் மிகப் பெரிய இளைஞர் அமைப்புகளில் ஒன்று ; திரு. கிரண் ரிஜிஜூ

Posted On: 17 SEP 2020 4:24PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், ராஷ்ட்ரீய யுவ சாஷ்க்டிகரனா கார்யகிரம், நாட்டு நலப்பணி திட்டம், ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய மூன்று பெரிய திட்டங்கள் மூலம், இளைஞர்களை மையப்படுத்தி அவர்களது மேம்பாட்டுக்காக  பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

இளைஞர்கள் மேம்பாட்டுக்காக, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ்மூன்று அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.அவை 1. நேரு யுவ கேந்திரா சங்கதன், 2. தேசிய நாட்டு நலப்பணி திட்டம், 3. ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்  ஆகும். இந்த அமைப்புகள் பற்றிய விவரம் வருமாறு;

  1. ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம்  ( ஆர்.ஜி. என்ஐஒய்டி); தமிழகத்தின் ஶ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள இந்த நிறுவனம் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த நிறுவனம் இளைஞர்களின் மேம்பாட்டில் முக்கிய ஆதார மையமாகத் திகழ்கிறது. இது, முதுநிலை மட்டத்தில், இளைஞர் மேம்பாடு குறித்த பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட கல்வி திட்டங்களை வழங்குகிறது. இளைஞர்களுக்கான பயிற்சிகள், திறன் மேம்பாட்டு திட்டங்களை அளிப்பதுடன், நாடு முழுவதும் கள முயற்சிகளை முன்னெடுக்கவும் உதவுகிறது.
  2. நேரு யுவ கேந்திரா சங்கதன் ( என்ஒய்கேஎஸ்) ;  இந்த அமைப்பு உலகின் மிகப்பெரிய இளைஞர் அமைப்புகளில் ஒன்றாகும். 623 மாவட்டங்களில், நேரு இளைஞர் மையங்கள் மூலம் இவை இயங்குகின்றன. இளைஞர்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்தி, நாட்டைக் கட்டமைக்கும்  நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்துவதே இதன் நோக்கமாகும். கல்வி, சுகாதாரம், நல வாழ்வு, சுற்றுச்சூழல், சமூகப் பிரச்சினைகளில் விழிப்புணர்வு, மகளிர் அதிகாரமளித்தல், குடிமை கல்வி, பேரிடர் நிவாரணம், மறுவாழ்வு  உள்ளிட்டவற்றில் இந்த அமைப்பு கவனம் செலுத்துகிறது.
  3. தேசிய நாட்டு நலப்பணி திட்டம் ( என்.ஸ்.எஸ்) ; இந்த சேவை திட்டம் 1969-ம் ஆண்டு, தன்னார்வ சமுதாய  தொண்டு மூலம் மாணவர்கள் இடையே, ஆளுமை மற்றும் நற்பண்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ‘ சேவை மூலம் கல்வி’ என்பது என்.எஸ்.எஸ்-சின் நோக்கமாகும். மகாத்மா காந்தியின் கொள்கைகளிலிருந்து இந்த சித்தாந்தம் உருவானது. என்.எஸ்.எஸ்-சின் குறிக்கோள் ‘’ நான் அல்ல, ஆனால் நீ’’ என்பதாகும்.

தற்போது, நேரு யுவ கேந்திரா சங்கதனில் 1.87 லட்சம் இளைஞர் மன்றங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் நாடு முழுவதையும் சேர்ந்த 36 லட்சம் இளம் தன்னார்வலர்கள் உள்ளனர். நாட்டு நலப்பணி திட்டத்தில்,  479 பல்கலைக்கழகங்கள், 17676 கல்லூரிகள்/ தொழில்நுட்ப நிறுவனங்கள், 12087 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 40 லட்சம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் ( தனிப்பொறுப்பு) திரு. கிரண் ரிஜிஜூ மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.(Release ID: 1655746) Visitor Counter : 211