வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ஏராளமான நடவடிக்கைகள்: மக்களவையில் மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல் தகவல்

Posted On: 16 SEP 2020 4:30PM by PIB Chennai

மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் தெரிவித்ததாவது: 
கொரோனா தொற்று காரணமாக, நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி கடந்த ஏப்ரல்-ஜூன் மாதத்தில் 25.42% குறைந்துள்ளது. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தேசிய அளவிலான முடக்கம் படிப்படியாக நீக்கப்பட்டதால், தொழிற்சாலை நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. ஏற்றுமதியை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்றுமதி வர்த்தகத்தில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க விரிவான வேளாண் ஏற்றுமதி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. 
வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வெளிநாடுகளில் உள்ள இந்திய குழுக்களும் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளன. 
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கி கடன் திட்டங்கள் உட்பட ஏராளமான நிதியதவி திட்டங்களும் அறிவிக்கப்பட்டுளளன. 
 பிபிஇ உடைகள், முககவசங்கள், முக தடுப்பான்கள், கிருமிநாசினிகள், ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்திகள் அதிகரித்ததால், அவற்றை ஏற்றுமதி செய்வதற்கான  தடை நீக்கப்பட்டுள்ளது. பிபிஇ உடைகள் உற்பத்தி மாதத்துக்கு 1.5 கோடியாக உள்ளதால், அதன் ஏற்றுதிக்கான தடை நீக்கப்பட்டது. வென்டிலேட்டர்கள் உற்பத்தியும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது. 
மக்கள் நலனை கருத்தில் கொண்டு, இறக்குமதியை ஒழுங்கு படுத்தும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. வெளிநாட்டு வர்த்தக கொள்கை திட்டத்தின் கீழ் சீனா உட்பட பல நாடுகளில் இருந்து சில பொருட்களை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள்/தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. 
உள்நாட்டு முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பெருநிறுவனங்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் பணப் பழக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அன்னிய நேரடி முதலீடு  கடந்த 2018-19ம் நிதியாண்டில் 62 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. 
நாட்டில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், மலிவு விலை வாடகை வீடுகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.  

 மத்திய தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து வர்த்தக சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எளிதாக தொழில் தொடங்கும் வகையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. மாநில சீர்திருத்தங்கள் செயல் திட்டத்தின் கீழ் இதுவரை 4 மதிப்பீடுகளை மத்திய தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை வெளியிட்டுள்ளது. 
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 100 சதவீத கடன் திட்டங்கள், பகுதி உத்திரவாதத்துடன் துணை கடன் திட்டங்களை பொதுத் துறை வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனங்கள் ஆகியவை வழங்குகின்றன. விவசாயிகளுக்கு சலுகை கடன்கள் வழங்கப்படுகின்றன. நடைபாதை வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வாநிதி திட்டம் மூலம் கடன் வழங்கப்படுகிறது. 

நாட்டில் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக மத்திய முதலீடு அனுமதி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதலீடு தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் அனுமதியை  பெறலாம். 

தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தற்சார்பு நிதியுதவி திட்டம் ரூ.20.97 லட்சம் மதிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  அவசர கடன் வசதி உறுதி திட்டத்தின் கீழ் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி மதிப்பில் 100% உத்திரவாத  கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை 45 நாட்களுக்குள் வழங்க அரசு துறைகள் மற்றும் பொது துறை நிறுவனங்களுக்கு வழங்குவதை மத்திய அரசு  உறுதி செய்துள்ளது.  ரூ.200 கோடி வரையிலான கொள்முதல்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் டெண்டர் எடுக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதன் மூலம் உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவது ஊக்குவிக்கப்படுகிறது.



(Release ID: 1655223) Visitor Counter : 158