உள்துறை அமைச்சகம்

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகள் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக அளவில் உள்ளன: உள்துறை இணை அமைச்சர்

Posted On: 16 SEP 2020 3:26PM by PIB Chennai

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகள் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிக அளவில் உள்ளதாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரிய வந்துள்ளதென உள்துறை இணை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்.

 

மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த  உள்துறை இணை அமைச்சர்கள் திரு ஜி கிஷன் ரெட்டியும், திரு நித்யானந்த் ராயும், கீழ்கண்ட தகவல்களை தெரிவித்தனர்:

 

கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பிகார், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகள் மிகத் தீவிரமாக இருப்பதாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தனது கொள்கையைப் பரப்ப சமூக ஊடக தளங்களை ஐஎஸ் பயன்படுத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட முகமைகள் இணைய வெளியை தொடர்ந்து கண்காணித்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

 

நாட்டின் அரசியலமைப்பின் படி காவல் துறையும் பொது அமைதியும் மாநிலப் பட்டியலில் இருந்தாலும், தடவியல் ஆய்வகங்கள் உள்ளிட்ட வசதிகளின் அதிகரித்தல் மற்றும் மேம்பாட்டுக்காக மத்திய உள்துறை விவகாரங்கள் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகள் குறைந்துள்ளன. 2018 ஜூன் 29 முதல் 2019 ஆகஸ்ட் 4 வரையிலான 402 நாட்களில் 455 தீவிரவாத சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், 2019 ஆகஸ்ட் 5 முதல் 2020 செப்டம்பர் 9 வரையிலான 402 நாட்களில் 211 தீவிரவாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளன,  

 

 2019 ஆகஸ்ட் 5 முதல் 2020 செப்டம்பர் 9 வரை எந்த பெரிய தீவிரவாத சம்பவமும் நாட்டில் நடைபெறவில்லை.

 

இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறைகள் தொடர்ந்து குறைந்த வண்ம் உள்ளன. 2010-இல் இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறைகளால் 1005 நபர்கள் உயிரிழந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2019-இல் 202கக் குறைந்துள்ளது.

 

இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக பல்முனை அணுகுதலைக் கொண்ட தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தை 2015-இல் இந்திய அரசு செயல்படுத்தியது.     

இந்திய ரிசர்வ் படைகள் திட்டம் குறித்த மதிப்பீட்டு ஆய்வு ஒன்றை ரோதக் இந்திய மேலாண்மை நிறுவனம்மூலமாக இந்திய அரசு நடத்தி வருகிறது. வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அறிக்கை தற்போது இறுதி செய்யப்பட்டு வருகிறது.

 

கர்நாடகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் இருந்து கூடுதல் ரிசர்வ் படைகளுக்கான கோரிக்கைகள் வந்துள்ள நிலையில், அறிக்கையை ஆராய்ந்த பின் இது குறித்து முடிவெடுக்கப்படும்.

தேசிய குற்ற ஆவண காப்பகம் சேகரித்த தகவல்களின் படி, தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் 2016, 2017 மற்றும் 2018-இல் முறையே 922, 901 மற்றும் 1182 வழக்குகள் பதியப்பட்டு, 999, 1554 மற்றும் 1421 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

வெளிநாட்டுப் பண ஒழுங்குமுறை சட்டம், 2010-இன் கீழ் சுமார் 22400 சங்கங்கள்/அரசு சாரா நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சங்கம்/அரசு சாரா நிறுவனமும் குறைந்தபட்சம் ஒரு வெளிநாட்டுப் பண ஒழுங்குமுறை சட்ட வங்கி கணக்கையாவது திறந்துள்ளன.

 

அவற்றுக்கு விருப்பமான வங்கிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளையும் இந்த நிறுவனங்கள் திறக்கலாம். இது தொடர்பான மாநிலவாரியான தகவல்களை www.fcraonline.nic.in என்னும் இணைய தளத்தில் காணலாம்.

 

2019 ஆகஸ்ட் 5 முதல் 2020 செப்டம்பர் 10 வரை, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தொடர்பான சம்பவங்களில் 45 பொதுமக்களும், போர்நிறுத்த மீறல் சம்பவங்களில் 26 பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.

 

2019 ஆகஸ்ட் 5 முதல் 2020 செப்டம்பர் 10 வரை, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தொடர்பான சம்பவங்களில் 49 பாதுகாப்புப் படை வீரர்களும், போர்நிறுத்த மீறல் சம்பவங்களில் 25 பாதுகாப்புப் படை வீரர்களும்  உயிரிழந்துள்ளனர். தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

 

2018-இல் தோராயமாக 328 ஊடுருவல்களும், 2019-இல் தோராயமாக 219 ஊடுருவல்களும், 2020 ஜூலை வரை 47 ஊடுருவல்களும் நடந்துள்ளன. 2018-இல் 257 தீவிரவாதிகளும், 2019-இல் 157 தீவிரவாதிகளும், 2020-இல் 168 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.  2018-இல் 17 தீவிரவாதிகளும், 2019-இல் 20 தீவிரவாதிகளும், 2020-இல் 9 தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

2018-இல் 37 ராணுவ வீரர்களும், 2019-இல் 21 ராணுவ வீரர்களும், 2020 செப்டம்பர் 9 வரை 18 ராணுவ வீரர்களும் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

 

அஸ்ஸாம், அருணாச்சல் பிரதேசம், பிகார், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சிக்கிம், ஒடிஷா மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய 9 வெள்ளம் பாதித்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள இழப்புகளை மதிப்பிடுவதற்காக அமைச்சகங்களுக்கிடையேயான மத்தியக் குழுக்களை உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

 

குற்றச் சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக தில்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழக துணை வேந்தரின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள், நீதிபதிகள் ஆகியோரிடம் இருந்தும் உள்துறை அமைச்சகம் ஆலோசனைகளை வரவேற்றுள்ளது.

 

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஆறு மாதங்களில் நடைபெற்ற ஊடுருவல் முயற்சிகளின் எண்ணிக்கை வருமாறு:  பிப்ரவரி-0, மார்ச்-4, ஏப்ரல்-24, மே-8, ஜூன்-0, ஜூலை-11. இந்திய-சீன எல்லையில் கடந்த ஆறு மாதங்களில் எந்த ஊடுருவல் முயற்சிகளும் நடைபெறவில்லை.

விரிவான தகவல்களுக்கு கீழ்க் காணும் ஆங்கில செய்திக் குறிப்புக்களைப் பார்க்கவும் :

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1654997

                                    -------


(Release ID: 1655141)